
அடித்துச் சொல்லும் திவாகரன்
சசிகலாவின் பெயரை வைத்து பேட்டிகளால் மோதிக்கொண்டிருந்த தினகரனும் திவாகரனும் இப்போது சட்டரீதியான மோதல் ரவுண்டுக்கு வந்திருக்கின்றனர். ‘சசிகலாவின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது’ என சசிகலாவின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சூழலில், ‘திவாகரன் அடுத்து என்ன செய்யப்போகிறார்’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் மே 14-ம் தேதி திங்கள்கிழமை தன் ஆதரவாளர்களுடன் மன்னார்குடியில் ஆலோசனை நடத்தப் போவதாக அறிவித்தார் திவாகரன். ‘கட்சி வேறு, உறவு வேறு. துரோகம் தலையெடுத்தாலும் தர்மமே வெல்லும். வாழ்வோ தாழ்வோ டி.டி.வி.தினகரனுக்குத் தோள்கொடுப்போம்’ என்று தினகரன் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்க, அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்த திவாகரன் ‘‘இவர்களை எப்படித் துவள வைக்கிறேன் பாருங்கள்’’ என உடன் வந்தவர்களிடம் சூளுரைத்தபடி காரில் வந்து இறங்கினார்.

சில நாள்களுக்கு முன்பு மன்னார்குடி மேல 3-வது தெருவில் தனது அம்மா அணிக்கான அலுவலகத்தைத் திறந்து வைத்தார் திவாகரன். அப்போது கட்சி போர்டில் திவாகரன், சசிகலா, ஜெயலலிதா படங்கள் இருந்தன. ஆபீஸைத் திறந்துவிட்டு, அடுத்த கட்ட நகர்வுகளுக்காக சென்னையில் முகாமிட்டார் திவாகரன். இந்த நிலையில் மே 8-ம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தார் தினகரன். அதற்கடுத்த நாளே சசிகலாவின் அறிவுறுத்தலின்படி திவாகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது. ‘என் அக்கா, உடன்பிறந்த சகோதரி என்று உரிமை கோரி சசிகலா பற்றி மீடியாக்களிடம் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும். சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது’ என அந்த நோட்டீஸ் சொன்னது. இதைத் தொடர்ந்து, திவாகரனின் அலுவலகத்தில் சசிகலா படத்துடன் வைக்கப்பட்டிருந்த போர்டு அகற்றப்பட்டு, மெகா சைஸில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் திவாகரன் மட்டும் இருப்பது போல் மாற்றி வைத்திருந்தனர் அவரின் ஆதரவாளர்கள்.
சரியாக காலை 9.55 மணிக்கு வந்த திவாகரன் நேராக பூஜையறைக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் வந்தவரின் காலில் சில தொண்டர்கள் விழுந்தனர். சால்வை போர்த்தி வாழ்த்து சொல்வதற்குப் பெரும் கூட்டம் முண்டியடித்தது. ‘என்ன பேச வேண்டும்’ என தன் வக்கீலிடம் ஆலோசனை செய்தபிறகு திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
‘‘இனிமேல் சசிகலா பெயரையோ, படத்தையோ பயன்படுத்த மாட்டேன். அவரை என் உடன்பிறந்த சகோதரி என அழைக்க மாட்டேன். முன்னாள் சகோதரி என்றுதான் சொல்வேன். என்னைக் குடும்பத்திலிருந்து சசிகலா நீக்கியதற்கு நன்றி. என் தலையில் இருந்த பெரிய கல் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தம்பி என்பதால் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். என் குடும்பத்தில் நான் மட்டும்தான் மன்னார்குடியில் வசிக்கிறேன். சசிகலா நல்லது செய்து சிறை சென்றாரோ, கெட்டது செய்து சென்றாரோ தெரியாது. ஆனால், உள்ளூரில் இருந்ததால் ‘மன்னார்குடி மாஃபியா’ என அழைக்கப்பட்டு பல சோதனைகளுக்கு ஆளானேன். இந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்.

இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் அரசியல் செய்வேன். சசிகலாவிடம் இருந்து முதலில் பன்னீரைப் பிரித்தார் தினகரன். அடுத்து எடப்பாடி, இப்போது நான். இது தினகரனின் பிரித்து அரசியல் செய்யும் சூழ்ச்சி. குழந்தை பிறந்து (கட்சி) ஒரு வாரம் ஆகிறது. இனிமேல் அடுத்தடுத்த பாய்ச்சல்கள் தொடரும். தேர்தல் நேரத்தில் தினகரனைக் கடுமையாக எதிர்ப்பேன்’’ என பேசினார்.
அதன்பிறகு ஆலோசனைக் கூட்டம் என ஒன்று நடக்கவே இல்லை. திவாகரனுடனும், ஜெயானந்துடனும் பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தனர். வந்திருந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் வாங்கிக்கொள்ளப்பட்டது. ‘‘எப்போது ஆலோசனைக்கூட்டம் ஆரம்பிக்கும்’’ என அப்பாவியாய் ஒருவர் கேட்க, ‘‘இதுதான் கூட்டமே... இதில் ஆலோசிக்க என்ன இருக்கு?’’ என்றார் நிர்வாகி ஒருவர். வந்திருந்தவர்கள் சுமார் 200 பேர் இருப்பார்கள். கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என யாரும் வரவில்லை. ‘‘கையில மாத்திரை கொண்டு வரலைப்பா. வீட்டுக்குப் போய் போட்டுக்கணும்!’’ என சொல்லிவிட்டு திவாகரனும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டார்.
திவாகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘‘அக்காவுக்காகத்தான் திவாகரன் இவ்வளவு நாள் பொறுமை காத்தார். இப்போது அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் திவாகரன் களத்தில் இறங்கிவிட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தீர்ப்பு வெளியானதும், அதில் சிலருக்கு அமைச்சர் பதவி வாங்கித்தரும் அளவுக்கு டீல் நடக்கிறது. அவர்களில் சிலர் விரைவில் திவாகரன் பக்கம் வருவார்கள். ‘இன்னும் 10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்’ என திவாகரன் எங்களிடம் அடித்துச் சொன்னார். அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார்கள்.
மோதல் ஓயாது போலிருக்கிறது.
- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்