Published:Updated:

`எம்.எல்.ஏ-க்களுக்கு காசு கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கிறார் எடப்பாடி!' - மு.க.ஸ்டாலின் விளாசல்

`எம்.எல்.ஏ-க்களுக்கு காசு கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கிறார் எடப்பாடி!' - மு.க.ஸ்டாலின் விளாசல்
`எம்.எல்.ஏ-க்களுக்கு காசு கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கிறார் எடப்பாடி!' - மு.க.ஸ்டாலின் விளாசல்

“தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியாத அ.தி.மு.க. அரசும் டெங்கு அரசாக உள்ளது” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில், இன்று நடைபெற்ற தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் மகள் டாக்டர் நிவேதா - டாக்டர் ராஜசெல்வன் திருமணத்தை நடத்திவைத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.  அப்போது அவர், தற்போதைய, தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் விமர்சித்துப் பேசியபோது, “இரண்டு தினங்களுக்கு முன் வெளிவந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பால் தி.மு.க-வுக்குப் பலனில்லை.  உடனடியாக 20 தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த முடியாத வக்கற்ற அரசுதான், தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் மக்கள் மடிகின்றனர். பலர் சிகிச்சையில் உள்ளனர். இதைக் கட்டுப்படுத்த முடியாத டெங்கு அரசாக தமிழக அரசு உள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். அதாவது, கரப்சன், கமிசன், கலெக்சன் என்ற அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மை இல்லாத ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள, அவர் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு மாதாமாதம் ஒரு தொகையை கப்பமாகச் கொடுக்கிறார். அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆதாரம் அனைத்தும் என்னிடம் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க ஆட்சி அமைப்பது உறுதி. தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த அமைச்சர் அனைவரும் சிறைச்சாலைக்குச் செல்வதும் உறுதி. மத்திய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே கேட்டு செயல்படும் எடுபிடி அரசாகத் தமிழக அரசு உள்ளது. இந்த அரசு விரைவில் அகற்றப்படும்” என்றார்.