அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.

‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார்.

‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’

‘‘என்ன அது?’’

‘‘ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பக்கம், ‘மோடியுடன் ரஜினி இணைந்தால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தலைமை வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்றார். தமிழருவி மணியனோ, ‘பி.ஜே.பி-யுடன் ரஜினி சேரமாட்டார். ஒருவேளை சேர்ந்தாலும், அதை நான் சகித்துக்கொள்வேன்’ என்கிறார். ரஜினியோடு அரசியல் பேசும் இடத்தில் இருப்பவர்களாகக் கருதப்படும் இந்த இருவரும் இப்படிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

‘‘என்ன காரணம்?’’

‘‘தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது எந்தக் காலத்திலும் பி.ஜே.பி-யின் திட்டம் இல்லை. அவர்களின் உடனடி இலக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது. கடந்த முறை கைகொடுத்த பல மாநிலங்களில் இப்போது நிலவரம் சாதகமாக இல்லை. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இணைந்தால், அங்கே பி.ஜே.பி-க்குப் பெரும் இழப்பு ஏற்படலாம். பீகார், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கடந்த முறை அளவுக்கு இப்போது வெற்றி கிடைக்காது. இந்த இழப்புகளை, புதிய வெற்றிகளின்மூலமே ஈடுகட்ட முடியும். அதற்கு தமிழகத்தையும் எதிர்பார்க்கிறது பி.ஜே.பி தேசியத் தலைமை.’’

‘‘தமிழகத்தின் சூழல் தெரிந்தும், இப்படி எதிர்பார்க்கிறார்களா?’’

‘‘2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழப்பிரச்னை தமிழகத்தில் எவ்வளவு கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தாண்டி தி.மு.க ஜெயிக்கவில்லையா? இதே கேள்வியைத்தான் சிலர் கேட்கிறார்கள். எடப்பாடியும் பன்னீரும் வைத்திருக்கும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதில் டெல்லி தலைவர்களுக்கு உடன்பாடில்லை. தினகரன் கட்சியுடனோ, தி.மு.க-வுடனோ போகவும் வாய்ப்பில்லை. இந்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ரஜினிதான். ஆனால், ரஜினி பிடிகொடுக்கவில்லை.’’

‘‘என்ன நினைக்கிறார் ரஜினி?’’

‘‘தமிழகத்தின் சூழல் அவருக்கு மட்டும் தெரியாதா என்ன? ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுத்தால், அதன் பின்விளைவுகளை நான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும்’ எனக் கவலையோடு சொன்னாராம். ‘நமக்கு மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்தாமல், அவரின் சட்டமன்றப் பயணத்துக்கு மட்டும் நாம் ஏன் உதவ வேண்டும்?’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் கேட்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் பலன்தரும் ஒரு ஃபார்முலாவை ரஜினியே சொல்லியிருப்பதாகத் தகவல். ‘தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்துவிடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரட்டும். எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; உங்கள் வெற்றிக்கு நான் உதவுகிறேன்’ என்பதுதான் ரஜினி சொல்லியிருக்கும் அந்த ஃபார்முலா.’’

‘‘இது சாத்தியமா?’’

‘‘தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது, சட்டமன்றத்தை முடக்கிவைத்து, குழப்பங்களைப் பெரிதாக்கி, இந்த ஆட்சியைக் கலைப்பது சாத்தியம்தான். அதற்கு முன்பாக சில உறுதிமொழிகளை ரஜினி தரப்பிலிருந்து பி.ஜே.பி தலைவர்களும், பி.ஜே.பி தரப்பிலிருந்து ரஜினிக்கு நெருக்கமானவர்களும் எதிர்பார்க்கிறார்கள். ‘கட்சிக்குப் பெயர் வைக்காமல், கட்சியின் செயல்திட்டங்களை அறிவிக்காமல், பூத் கமிட்டி அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது’ என ரஜினி மக்கள் மன்றத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ரஜினியிடம் ஆலோசனையின்போது சொன்னார்கள். ‘கொள்கைகளை முதலில் ரஜினி சொல்லட்டும். மறுநிமிடமே உறுப்பினர்கள் திரண்டு வருவார்கள். எதுவுமே சொல்லமாட்டேன், எங்களுடன் வாருங்கள் என்று அழைக்கும்போது மக்கள் யோசிக்கிறார்கள். இது மன்றத்தினரைத் தவறான செயல்பாட்டுக்கு அழைத்துப் போய்விடும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு இதை இழுத்துக்கொண்டே போவது சிரமம் என்பதை ரஜினியும் உணர்ந்துவிட்டார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.’’

‘‘பி.ஜே.பி இதற்கு சம்மதிக்குமா?’’

‘‘தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துத் தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு மறைமுக ஆதாயம் கிடைக்கலாம். ஒருவேளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க ஜெயித்தால், தேர்தலுக்குப் பிறகான கூட்டணியில் அவர்களை இணைக்க முடியும் என நம்புகிறது பி.ஜே.பி. ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்திருந்தால், சங்கடமின்றி தி.மு.க ஆதரிக்கும்’ என்பது அவர்கள் திட்டம்.’’

‘‘தமிழகத்தை ஆளும்தரப்புக்கு இதெல்லாம் தெரியுமா?’’

‘‘தெரிந்துதான் அவர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு ரஜினியை எல்லோரும் திட்டுவதைக் கவனியுங்கள். ஜெயக்குமார் திட்டினார். சி.வி.சண்முகம் திட்டினார். செல்லூர் ராஜு மோசமாகப் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானார். எல்லோரையும்விட அதிக கடுப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி, ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற அரசு விழாவில் குட்டிக்கதை சொல்லி எச்சரித்தார். ‘யாரையும் கண்மூடித்தனமாக நம்பினால் வெற்றி பெற முடியாது. மற்றவர்கள் செய்வதை நாமும் செய்ய நினைக்கக்கூடாது’ என்றார். மோடியுடனான தனது அனுபவத்தை வைத்து ரஜினிக்கு எடப்பாடி விடுத்த எச்சரிக்கையாகவே இதைப் பார்க்கிறார்கள்.’’

‘‘மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளிடம் என்ன பேசினாராம் ரஜினி?’’

‘‘மே 13-ம் தேதி போயஸ் கார்டனில் நடந்த இந்தக் கூட்டத்தில் ரஜினி அதிகம் பேசவில்லை. பூத் கமிட்டி பொறுப்பாளர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேர்ப்பதில் யார் யார் துடிப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்குக் கட்சி ஆரம்பிக்கும்போது முக்கிய பதவிகளைத் தர நினைக்கிறாராம் ரஜினி. இதில் பின்தங்குகிறவர்கள் மன்றத்திலேயே இருக்க வேண்டியிருக்குமாம். ‘கட்சி வேறு, மன்றம் வேறு’ என இரண்டு அமைப்புகளையும் தனித்தனியாக நடத்த ரஜினி நினைக்கிறாரோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.’’

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

‘‘தினகரன்-திவாகரன் மோதலில் இப்போதைக்கு வெற்றி தினகரனுக்குத்தானே?’’

‘‘எப்போதெல்லாம் இந்த மோதல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தினகரனுக்கே வெற்றி கிடைத்துள்ளது. இப்போதும் அதுபோல் அவரே வெற்றி பெற்றுள்ளார். மே 9-ம் தேதி சசிகலா அனுப்பிய நோட்டீஸில், ‘திவாகரன் தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், சசிகலாவின் ஆதரவு தினகரன் பக்கம்தான் இருக்கிறது என்பது வெளிப்படையாகியுள்ளது. இது திவாகரனுக்கு மட்டுமேயான எச்சரிக்கை அல்ல, ஓ.பி.எஸ்-எடப்பாடி, அ.தி.மு.க தொண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சசிகலா குடும்ப உறவுகள் என அனைவருக்குமான அறிவுறுத்தல். ‘தினகரன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தன் சம்மதத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. தன்னை ஆதரிப்பவர்கள் தினகரனை ஆதரிக்க வேண்டும்’ என்று பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக் கிறார் சசிகலா.’’

‘‘இவ்வளவு கடுமையான நோட்டீஸ் வந்ததன் பின்னணி என்ன?’’

‘‘திவாகரன் தொடர்ச்சியாக தினகரனுக்கு எதிராகப் பேசிவந்தார். பல பேட்டிகளில், ‘என் அக்கா சசிகலாவுக்கு எதுவும் தெரியாது; தினகரன்தான் சசிகலாவை ஆட்டி வைக்கிறார்’ என்றார். , ‘மகாதேவன் மரணத்தின்போது என்னை அமைச்சர்கள் சந்தித்தனர். நான்தான் அவர்களை எடப்பாடியோடு இருக்கச் சொன்னேன்’ என்றார். இந்த இரண்டு விஷயங்களும் சசிகலாவைக் கடுமையாகப் பாதித்தன. ‘எல்லா அமைச்சர்களையும் எடப்பாடியோடு இருக்கச் சொன்னது திவாகரன்தான்’ என்று குடும்பத்திலேயே பலர் சொன்னபோதுகூட சசிகலா நம்பவில்லை. திவாகரனே தன் வாயால் சொன்னபோது சசிகலா அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு உடனடியாக, தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்குச் சிறையிலிருந்து கடிதம் எழுதி, வரச் சொன்னார். மே 2-ம் தேதி அந்தக் கடிதம் வந்துள்ளது. மே 8-ம் தேதி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். 9-ம் தேதி சசிகலாவிடமிருந்து நோட்டீஸ் வெளியானது.’’

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

‘‘ப.சிதம்பரம் குடும்பத்தினர்மீது மீண்டும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளதே?’’

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும், மற்ற காங்கிரஸ்காரர்களுக்குப் பெரிய குடைச்சல் இருக்காது. ஆனால், ப.சிதம்பரம் குடும்பத்துக்குக் குடைச்சல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இது மோடி Vs சிதம்பரம் மோதலின் தொடர்ச்சி. சில மாதங்களுக்குமுன்பு கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு முதலீடுகள் என்று ஜூ.வி நிருபர் விரிவாகப் பல சொத்துகளைப் பட்டியல் போட்டிருந்தாரே... இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் வாங்கப்பட்ட சொகுசு பங்களா ஒன்றும் அந்த லிஸ்ட்டில் இருந்தது.  அதற்கான பணம்  கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக்கணக்கிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகியிருந்ததும், அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பெயரில் கணக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வருமானவரித் துறை மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதையடுத்துத்தான் மே 11-ம் தேதி வருமானவரித் துறை மூவர்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்குப் பயணம் செய்ய தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளாராமே?’’

‘‘ஆம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆணைதான் இது. தற்போது, அதைக் கொஞ்சம் கடுமையாக மாற்றியுள்ளனர். இப்போது முதலமைச்சர் துறைரீதியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் கடைசியிலிருந்து நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், அரசுத்துறை செயலாளர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். ஆய்வுக்கூட்டத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால், அவர்களைத் தொடர்புகொள்வதும் சிரமமாக உள்ளது. அதனால்தான் இந்த உத்தரவு’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி!

பி.ஜே.பி அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் நடக்க உள்ள இந்த மாநாட்டுக்காக சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல லட்சம் பேர் கூடும் வகையில் இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள்.

நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆன நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் அவர் கலந்துகொண்டார். இவ்வளவு வெளிப்படையாக நடமாடியும், எஸ்.வி.சேகரை போலீஸ் கண்டுகொள்ளவில்லை. காரணம்... தலைமைச் செயலகத்திலிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லையாம். 

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி ரம்யா பாரதிக்கும் மோதல் வெடித்துள்ளது. மேற்கு வங்காளத்துக்கு டெபுடேஷன் கேட்கிறார் ரம்யா பாரதி. இவர் தொடர்புடைய ஒரு விவகாரம் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, மார்டி இதற்கு மறுத்துவிட்டாராம். இதை சாமர்த்தியமாக சிலர் ஐ.ஏ.எஸ் Vs ஐ.பி.எஸ் மோதலாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதில் நிரஞ்சன் மார்டி படு அப்செட்!