Published:Updated:

ஆ.ராசா கைது கோரி டிச.4-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.

Vikatan Correspondent

சென்னை, டிச.02,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் கைது செய்யக் கோரியும், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 4-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகியவை உறுதிபடுத்தியுள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சினிமா டிக்கெட் விற்பனை போல நடைபெற்று இருக்கிறது என்று தில்லி உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. 

ரூ.1,500 கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள், ஒரு சில நாட்களில் தங்களது பங்குகளை ரூ.6,000 கோடி அளவுக்கு விற்று லாபம் சம்பாதித்துள்ளன என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொலைத் தொடர்புத் துறை செயலாளரிடம் சிபிஐ ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், நீரா ராடியா – கனிமொழி, நீரா ராடியா – ராசாத்தி, நீரா ராடியா – ரத்தினம் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை அண்மையில் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரை கருணாநிதியின் மகள் கனிமொழி ரகசியமாக சந்தித்ததாகவும், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுமாறு மன்றாடியதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இதிலிருந்து, கருணாநிதி குடும்பத்தினருக்கு இந்த இமாலய ஊழலில் தொடர்பு இருப்பது தெளிவாகி உள்ளது. 

அதனால் தான் பொதுக் கணக்குக் குழு விசாரித்தால் போதும் என்றும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார் என்றும் கருணாநிதி தனது கருத்துகளை உதிர்த்து வருகிறார். இந்த இமாலய ஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டுமென்றால், உண்மை வெளிக்கொணரப்பட வேண்டுமென்றால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைப்பது தான் சிறந்ததாக இருக்கும்.  ஆனால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி மறைமுகமாக நிர்ப்பந்தம் தெரிவித்து வருகிறார். இதன் விளைவாக நாடாளுமன்றம் கடந்த 14 நாட்களாக செயல்படாமல் முடங்கியுள்ளது.

எனவே, ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்குக் காரணமான தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி மற்றும் ராசாவை கண்டித்தும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு இந்த அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வசூல் செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் 4.12.2010 சனிக் கிழமை சைதாப்பேட்டை  பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.