அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை, உருகி உருகிக் காதலிக்கும் நயன்தாரா அவரைத் திருமணம் செய்துகொண்டால் சினிமா வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நினைக்கிறாரா?


திருமணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்ற காலம் மாறிவிட்டது. ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் போன்றவர்கள் இதற்கு சாட்சி.

கழுகார் பதில்கள்!

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

காங்கிரஸைக் கழற்றிவிடும் கட்டத்துக்கு தி.மு.க வந்துவிட்டதா?

 தி.மு.க-வைவிட ‘வேறு கட்டம்’ சாதகமாக இருக்குமா என்று காங்கிரஸ் யோசிக்கலாம் அல்லவா?

சம்பத்குமாரி, பொன்மலை.

 ஜெயலலிதா இறந்ததிலிருந்து தமிழ்நாட்டில் தினம் தினம் புதுப்பிரச்னைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றனவே... எல்லாம் அவரது ஆவியின் செயலா?

புதுப்புதுப் பிரச்னைகள் கிளம்பிக்கொண்டிருப்பது அல்ல பிரச்னை. ஜெயலலிதா இறந்ததிலேயே புதுப்புதுப் பிரச்னைகள் கிளம்பிக் கொண்டு இருப்பதுதான் அதிர்ச்சிக்குரியது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வாக்குமூலம் தர வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். ஜெயலலிதா எப்போது இறந்தார், அவரை அமைச்சர்களில் யார் யார் பார்த்தார்கள், கவர்னர் வந்து பார்த்தபோது ஜெயலலிதா கையசைத்தாரா, அவரது உடல்நிலை எப்போது மோசமானது, அவருக்கு என்னென்ன நோய்கள் இருந்தன, என்னென்ன மருந்துகள் தரப்பட்டன... இந்த அடிப்படையான தகவல்களையே 15 பேருக்கும் மேற்பட்டவர்கள் வேறுவேறுவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 இதில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை. அதுவும் டாக்டர்களின் வாக்குமூலங்களே முரண்பாடாக இருக்கின்றன. இவர்களையெல்லாம் அந்த ஆவி ஒன்றும் செய்யாதா?

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.

சமீபகாலமாக நீதிபதிகளின்மீது நீதிபதிகளே குற்றச்சாட்டுகள் கூறுவது பற்றி?


இது நீதித்துறை வரலாற்றில் களங்கமான நிகழ்வு. உள்நாட்டுக் குழப்பங்கள் உள்ள நாடுகளில்தான் இதுமாதிரி நடக்கும். இந்தியாவில் இப்படி நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இதில் சம்பந்தப்பட்டவர்களேதான், இந்தச் சரிவை சரிக்கட்ட வேண்டும்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.


? மெரீனா..?

ஆமாம், அவரா..!  பத்திரிகையாளர், ஆன்மிக எழுத்தாளர் (பரணீதரன்), கார்ட்டூனிஸ்ட் (ஸ்ரீதர்) என்று கலக்கியவர். ‘மெரீனா’ என்ற பெயரில் நகைச்சுவை நாடகங்கள் எழுதி, பலருக்கும் வயிற்றுவலியை உண்டாக்கியவர்.!

கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

நேர்மை, நாணயம், சத்தியம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் தனித்தனிக் கட்சி நடத்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு முதல்வர் பதவி மீதுதான் குறியா?


 இவர்கள் மூவரும் நேர்மை, நாணயம், சத்தியம் ஆகிய ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் என நீங்கள் சொல்வதே அவர்களுக்குப் பெரிய பாராட்டுப் பத்திரம்தான்!

டி.சந்திரன், ஈரோடு.

ஆந்திராவில் நரசிம்ம ரெட்டி என்ற பியூன், சுமார் 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளாரே. இது, இதுவரை யாருக்கும் தெரியாமலா நடந்திருக்கும்?


யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி இவ்வளவு சம்பாதித்திருக்க முடியும். அவருக்கு பணம் கொடுத்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்காக பணம் பெற்றாரோ, அந்தக் காரியங்களை உயர் அதிகாரிகளின் தயவு இல்லாமல் அவரால் நிறைவேற்றியிருக்க முடியாது. எனவே, உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்கும். அதிகார மட்டத்தில் இருப்பவர்களால் இவ்வளவு காலம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தவர், திடீரென சிக்கினார் என்றால் ‘வாங்கிய காசுக்கு வேலையை முடிக்காமல் ஏமாற்றியிருப்பார்’. அதனால், பணம் கொடுத்தவர்களே போட்டும் கொடுத்தி ருப்பார்கள்.

கடைநிலை ஊழியரிடமே 100 கோடி ரூபாய் இருந்தது என்றால், எல்லோரும் பங்கு போட்டுக்கொண்டது மொத்தம் எவ்வளவு இருக்கும்?

கே.கிருபாகரன், காஞ்சிபுரம்.


மலேசியாவின் பிரதமராக மகாதீர் முகமது 92 வயதில் பதவியேற்றுள்ளாரே?


மலேசியாவை இத்தனைக் காலம் ஆண்ட கட்சியை நிறுவியவர்களில் மகாதீர் முகமதுவும் ஒருவர். 23 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்தவர், 2003-ம் ஆண்டு தன் சீடர்களுக்கு வழிவிட்டு அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனால், அரசியல்வாதிகளால் ஓய்வெடுக்க முடியாதே! தன் சீடரான நஜிப் ரசாக்மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பி மீண்டும் அரசியலுக்கு வந்தார். புதிய கட்சியை ஆரம்பித்து, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தன் சீடரான நஜிப் ரசாக்கை வீழ்த்தி இப்போது பிரதமர் ஆகியுள்ளார். மகாதீர் முகமதுவின் இன்னொரு சீடர் அன்வர் இப்ராஹிம் இப்போது சிறையில் இருக்கிறார். அவர்மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் தள்ளியதே மகாதீர் முகமதுதான் என்று சர்ச்சை உண்டு. அந்த அன்வருடன் கூட்டணி அமைத்தே இப்போது மகாதீர் ஜெயித்திருக்கிறார். மலேசிய மன்னரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அன்வர் வெளியில் வந்ததும், அவருக்கு மகாதீர் தன் பதவியை விட்டுக்கொடுத்துவிடுவார் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதை மகாதீர் செய்வாரா என்பதைப் பொறுத்தே இந்தக் கூட்டணி அரசு நிலைக்கும். அரசியலில் இணக்கமான குரு - சிஷ்யர்கள் என யாருமே இருப்பதில்லை என்பதற்கு நம் ஊரில்கூட உதாரணங்கள் உண்டு.

கே.புவனேஸ்வரி, சென்னை-33.


சமீபத்தில் உங்களை அதிர்ச்சியடைய வைத்த செய்தி?

சென்னைக்குக் குடிநீர் வழங்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது, ‘மெட்ரோ வாட்டர்’ எனப்படும் சென்னைப் பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம். இந்த வாரியத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. வாரியத்தின் நிர்வாக இயக்குநர், உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்றவர்கள் இதன் உறுப்பினர்கள். ஆனால், 2016 மே மாதத்தில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தக் கூட்டம் ஒருமுறைகூட நடத்தப்படவில்லை. அது மட்டுமல்ல, 2014 ஜனவரியிலிருந்து இந்தக் கூட்டம் மூன்றே மூன்று முறை மட்டும் நடந்துள்ளது. இடையில் ஒரு வெள்ளம் வந்து சென்னையே மூழ்கியது. கடந்த ஆண்டு வறட்சியில் தலைநகரமே தவித்தது. ஆனால், எதற்கும் கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறப்போர் இயக்கம் இந்தத் தகவல்களை வாங்கி அம்பலப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நிர்வாகம் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது என்பதற்கு இது சாட்சி.

கவிஞர் விவேகா

கழுகார் பதில்கள்!

தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கும் மக்கள், ஏமாற்றப்படுவதைத் தடுக்க சட்டப் பாதுகாப்பு ஏதும் இல்லையா?

‘தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என 2015-ம் ஆண்டு மிதிலேஷ் குமார் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார். ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனர். ‘வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எந்த சட்டமும் இல்லாதபோது, எந்த அடிப்படையில் இதை விசாரிக்க முடியும்?’ என்பதே நீதிபதிகள் எழுப்பிய கேள்வி. ‘தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக விதிமுறைகளைக் கொண்டுவாருங்கள்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது. ஆனால், தேர்தல் ஆணையம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. 2016-ம் ஆண்டில் பல்வேறு இலவசத் திட்டங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் அறிவித்தபோது, தேர்தல் ஆணையம் இரண்டு கட்சிகளுக்குமே நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின், அது என்ன ஆனது என்ற தகவலே இல்லை.

ஏமாறத் தயாராக மக்கள் இருக்கும்வரை, ஏமாற்றங்களைத் தவிர்க்கமுடியாது.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!