அலசல்
Published:Updated:

மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்?

மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்?
பிரீமியம் ஸ்டோரி
News
மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்?

கமல் கட்சி சர்ச்சை

‘‘மய்யம் விசில் ஒரு மந்திரக்கோல் அல்ல, இது ஓர் அபாயச் சங்கு’’ என்று சொல்லி, ஏப்ரல் 30-ம் தேதி ஒரு செயலியை வெளியிட்டார் கமல். தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் இதில் பதிவிட்டு புகார் செய்யலாம் என்பதுதான் இந்தச் செயலியின் சிறப்பம்சம். வெளியிடப்பட்ட அடுத்த நாளிலிருந்தே, இதன் மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். மக்களின் புகார்களை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டுசெல்லும் ஓர் ஊடகமாக விசில் செயலி பரவலாகப் பாராட்டப்பட்டாலும், ‘கமல் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க இந்த செயலியை மறைமுகமாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம், மய்யம் விசில் செயல்படும் விதம்.

பிளே ஸ்டோரில் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும். உடனே கணக்கு தொடங்கப்பட்டதற்கு அடையாளமாக நம் மொபைலுக்கு OTP வரும். அது செயலிக்கான அக்கவுன்ட் மட்டுமல்ல; மக்கள் நீதி மய்யத்துக்கான உறுப்பினர் எண்ணும்கூட. பின்னர் பாஸ்வேர்டு செட் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், கமலின் வீடியோ உங்களை வரவேற்கும். அதனைப் பார்த்து முடித்துவிட்டால் போதும்; மய்யம் விசில் ரெடி. சாதாரணக் குடிமகன் அல்லது சாம்பியன் என இரண்டுவிதமாக இதில் பதிவுசெய்துகொள்ள முடியும். குடிமகனாகப் பதிவு செய்தால், செயலியில் புகார்களைப் பதிவு செய்யவும், பார்க்கவும் முடியும். சாம்பியனாகப் பதிவு செய்தால், பிறர் புகார்களைப் பார்த்து அது சரியானது என உறுதிசெய்யவும் முடியும்.

மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்?

மக்கள் தரும் புகார்களைக் கையாள்வதற்காக மண்டலவாரியாக நிர்வாகிகள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். உறுதிசெய்யப்பட்ட புகார்கள் அனைத்தும் அவர்களிடம் போகும். அவர்கள் அவற்றை அரசிடம் கொண்டுசெல்வார்கள். அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது செயலியில் அப்டேட் செய்யப்படும். பொதுவாகப் பார்த்தால், மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்காகவும், தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்காகவும் ஒரு நல்ல செயலி என்றுதான் தோன்றும். ஆனால், இதில் புகார்களைப் பதிவு செய்யச் சென்றால் எதற்காக மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக வேண்டும்? அரசிடம் புகார் கொடுக்க ஏற்கெனவே நிறைய இணையதளங்கள், புகார் மையங்கள் இருக்கும்போது, மய்யம் விசிலில் பதிவிட்டால் மட்டும் எப்படி அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்? கமல் கட்சியின் ஐ.டி பிரிவினரிடம் கேட்டோம்.

‘‘இதுவரை தங்களைச் சுற்றி நடக்கும் குற்றங்களையும் சமூகக் கேடுகளையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தவர்களை, முதல்முறையாக எங்கள் செயலி மூலம் குரல்கொடுக்க வைத்திருக்கிறோம். இதுதான் எங்களின் வெற்றி. தினமும் சராசரியாக ஆயிரம் புகார்களுக்கு மேல் வருகின்றன. புகார்களைக் கையாள் வதற்காகவும், அவை குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரையும் கொண்ட குழு இங்கே செயல்பட்டு வருகிறது. புகார்களை அரசிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டுமோ, அப்படி கொண்டுசென்று தீர்வு தேடுவோம். அதுதான் எங்களின் பணி.

இப்போதைக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அட்மின் இருக்கிறார். அவர்தான் அந்த மாவட்டத்தில் வரும் புகார்களைக் கவனித்துக்கொள்கிறார். எதிர்காலத்தில், 234 தொகுதிகளிலும் மய்யம் விசிலுக்கான அட்மின்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கிராமங்களிலிருந்துதான் அதிகளவில் புகார்கள் வருகின்றன. இளைஞர்கள் அதிகளவில் புகார்களைப் பதிவு செய்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு, ரோடு சரியில்லை என்பது போன்ற புகார்களே அதிகம் வருகின்றன. இவற்றை நிர்வாகிகளே அதிகாரிகளிடம் கொண்டுபோகிறார்கள். பெரிய அளவிலான ஊழல் புகார்கள் என்றால் கமலே களத்தில் இறங்குவார். புகார் கொடுப்பவரின் அடையாளங்கள் உறுதியாகப் பாதுகாக்கப்படும்” என்றவர்கள் செயலியின் மீதான விமர்சனங்க ளுக்கும் விடையளித்தனர்.

மறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்?

“பொய்யான புகார்களைத் தடுப்பதற்காகத்தான், புகார் கொடுப்பவர்களை உறுப்பினராகச் சொல்கிறோம். இதன்மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பது எங்கள் நோக்கமல்ல. இப்படி உறுப்பினர் சேர்க்க வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை. வருங்காலத்தில் இதன் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது எல்லோரும் புகார் அளிக்கும்படி இதை மாற்றிவிடுவோம். இதில் புகார் அளிக்கும் வசதி மட்டுமல்ல; உங்கள் பகுதியில் இருக்கும் மொத்தப் பிரச்னைகளையும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. தன் தொகுதியின் நிலை குறித்து எந்தவொரு குடிமகனும் இதன்மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

மக்கள் தொடர்ந்து பதிவு செய்யும் புகார்கள் மூலமாக சமூகப் பிரச்னைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவற்றை அரசிடம் கொண்டுசெல்லும்போது ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து, நிர்வாகக் குளறுபடிகளை அறிந்துகொள்ள முடிகிறது. எங்களைப் போன்ற புதிய கட்சி ஒன்றுக்கு இந்தப் பிரச்னைகள் மிகச்சிறந்த பாடம். எங்கள் கட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் உடனடித் தீர்வு கிடைக்கும். நாங்கள் வெளியே இருந்துகொண்டு சிஸ்டம் சரியில்லை எனச் சொல்லவில்லை; அந்த சிஸ்டம் எப்படியிருக்கிறது என்பதை உள்ளே இறங்கி பார்க்கிறோம்” என்கின்றனர் சீரியஸாக.

கமலின் படங்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்பார்கள்; அரசியலும் அப்படித்தான் எனத் தோன்றுகிறது!

- ஞா.சுதாகர்
படம்: கே.ஜெரோம்