
கம்பேரிஸன் கோவாலு!
‘‘மோடியின் ஆட்சி, திறமை... ரஜினியின் மக்கள் செல்வாக்கு... இவை இணைந்து தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பும்’’ - இது சமீபத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி உதிர்த்த கருத்து முத்து. அதென்ன கன்டென்ட்டே கிடைக்காவிட்டால், வெற்றிடத்தை இழுக்கிறார்கள் எல்லாரும்? குருமூர்த்தியின் லாஜிக்படி பார்த்தால், நிறைய வெற்றிடங்களை நிரப்ப இங்கே பலரும் போட்டி போடுகிறார்கள்...

• ‘‘தமிழகத்தில் ஆங்காங்கே இன்று மழை பெய்யும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’’ - இந்தக் குரலை குழந்தைகள்கூட மறக்கமாட்டார்கள். அப்பேர்ப்பட்ட புகழையுடைய ரமணன் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த வெற்றிடத்தை நிரப்ப வானியல் அறிஞர், பிரிட்டிஷ் கொலம்பியக் கலைஞர் செல்லூர் ராஜுவால் மட்டுமே முடியும்.
• வின்ஸ்டன் சர்ச்சிலின் வீர உரை, போன நூற்றாண்டின் சரித்திர நிகழ்வு. இந்த நூற்றாண்டில் அப்படியொரு உரையை நிகழ்த்தித்தான் காவிரி நீரை பாட்டிலில் அடைத்துத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் சிம்பு. சிலிர்த்துப் போய் சில்லறைகளை விட்டெறிந்த கூட்டம், பல பில்லியன்கள் என்கிறது ஓர் ஆய்வு. சர்ச்சிலின் ஸ்பேஸில் சிம்பு. வாவ்!
• ‘என்னத்த நியாயம் கேட்டு... என்னத்த தீர்ப்பு சொல்லி?’ என விரக்தி ‘மோடு’லேயே வாழ்வது என்னத்தே கன்னையா ஸ்பெஷல். அவர் விட்டுச் சென்ற இடம் இன்னமும் காலியாகத்தான் உள்ளது. அதை நிரப்ப சரியான ஆள், எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கும் சுப்ரமணியன் சுவாமிதான்.
• வரலாற்றைச் சரியாக எழுத இந்தியாவில் ஆளே இல்லாத வெற்றிடம் நிலவுகிறது. ‘மகாபாரத காலத்தில் இன்டர்நெட் இருந்தது’, ‘தாகூர் நோபல் பரிசைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்’ என்றெல்லாம் புதிய வரலாறுகளை எழுதி அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்துவிட்டார், திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ்.
• உலகையே சுற்றி வந்து ரூட் மேப் போட்ட கொலம்பஸ், உலகை விட்டுப் போய் சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அந்த வெற்றிடத்தை நிரப்ப இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவர் பூவுலகில் தோன்றியிருக்கிறார். வான் மார்க்கமாக உலகை வலம்வருவதுதான் அவரின் பிரதமப் பணி. ஆக, அந்த வெற்றிடத்துக்கும் பட்டா போட்டுக் கொடுத்தாயிற்று!
ஓவியம்: பிரேம் டாவின்ஸி