Published:Updated:

`அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அளித்த பரிசு..!’ - முன்னாள் எம்.எல்.ஏ உருக்கம்

`அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அளித்த பரிசு..!’ - முன்னாள் எம்.எல்.ஏ உருக்கம்
`அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அளித்த பரிசு..!’ - முன்னாள் எம்.எல்.ஏ உருக்கம்

தஞ்சாவூர் முன்னாள்  எம்.எல்.ஏ ரெங்கசாமி  தொகுதியில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது எங்களுக்காக பயந்துகொண்டு மழையைக் காரணம் காட்டி இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலை தள்ளி வைத்தவர்கள் 18 பேரின் தீர்ப்புக்குப் பிறகு உடனே தேர்தல் நடத்துவதுபோல் பாவ்லா காட்டுகிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனக் கூறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அந்தத் தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என தினகரன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க-வில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் ரெங்கசாமி கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தேர்தல் பிரசாரம் போலவே  நடத்தி அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் முன்னாள்  எம்.எல்.ஏ ரெங்கசாமி . அ.ம.மு.க நிர்வாகிகள், `இரவு 7 மணி அளவில் ரெங்கசாமி மக்களிடம் கருத்துக் கேட்பார்'  என அறிவித்திருந்தனர். இதற்காக நிர்வாகிகள் பலரும் காத்திருந்தனர். ஆனால், 8 மணியளவில் தாமதமாக வந்த ரெங்கசாமி நேராக மேலவீதி மூல அனுமார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது சசிகலா மற்றும் தினகரன் பெயர் மற்றும் ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் பகுதியான சேப்பனவாரி பகுதிக்குச் சென்றார். திடீரென பத்து காருக்கு மேல் குறுகலாக நம் தெருவுக்குள் ஏன் வருகிறது என தெருவாசிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. அப்போது நிர்வாகி ஒருவர் பட்டாசு வெடித்து எம்.எல்.ஏ அண்ணன் வந்திருக்கிறார் என தெரியப்படுத்தினார். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் மக்களிடம் கருத்துகளை கேட்டார். ஏராளமானவர்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர்.

பின்னர் பேசிய ரெங்கசாமி நான் கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தஞ்சாவூர் தொகுதிக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். மேல அலங்கம் பகுதியில் குடியிருப்புகளை அகற்றாமல் காத்து வந்தேன். மீண்டும் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல கோரிக்கைகளை முன்வைத்து சட்டமன்றத்தில் பேசியதோடு நிறைவேற்றவும் சொன்னேன். ஆனால், அவை எதையுமே செய்ய வில்லை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. இதனால் நான் தினகரன் தலைமையில் ஆட்சிக்கு எதிராக முதல்வரை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தேன். அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அரசு தந்த பரிசு எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கியது தான். இந்தத் துரோகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள். அ.ம.மு.க-வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. எங்களுக்காகப் பயந்துகொண்டு மழையைக் காரணம் காட்டி இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலை தள்ளி வைத்தவர்கள் 18 பேரின் தீர்ப்பு வந்த பிறகு உடனே தேர்தல் நடத்துவதுபோல் பாவ்லா காட்டுகிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

பின்னர் ரெங்கசாமியிடம் ஏராளமான பெண்கள் கூடி பல நாள்களாக பாதாளச் சாக்கடைக் கழிவு நீர் வெளியே வழிகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது  நடவடிக்கை எடுக்க பல முறை வலியுறுத்தியும் செய்யவில்லை. நாங்க உங்களுக்குத்தான் வாக்களித்தோம் நீங்க வந்து பாருங்க எனக் கூறினர். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தார் ரெங்கசாமி. அப்போது மாநகரச் செயலாளரான ராஜேஸ்வரன் இந்த தெருவுக்கு சாலை வசதி செய்து, தெரு விளக்கு வசதி மற்றும் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் அண்ணன்தான். இப்போது அவர் எம்.எல்.ஏ இல்லை. உங்க குறைகளை கேட்கத்தான் வந்திருக்கிறார் வரும் நாள்களில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றார்.
 

அப்போது ரெங்கசாமி, நான் எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் உடனே போய் பார்த்து அதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றித் தரச் சொல்வேன். அதேபோல் தொகுதியில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதில் கலந்து கொண்டு வந்துள்ளேன். இப்போது கருத்துகளை கேட்க உங்கள் முன்னால்  நிற்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் சரி செய்து தரப்படும் என உருக்கமாகப் பேசி முடித்தார்.                      

அடுத்த கட்டுரைக்கு