Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

அதென்ன பீனிக்ஸ் பறவை... ஜெயலலிதாவுக்கு ஏன் இந்த அடையாளம்?


பீனிக்ஸ் என்பது கற்பனைப் பறவை. ‘500 ஆண்டுகள் வாழும். பிறகு இறந்ததும் எரித்தால், சாம்பலிலிருந்து உயிர்த்தெழும்’ என்று கிரேக்கக் கற்பனைக் கதைகளில் சொல்லி வைத்திருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு இந்தப் பறவை வடிவில் நினைவு மண்டபம் அமைக்கிறார்கள் என்றால், ஜெயலலிதாவைக் கற்பனைப் பாத்திரமாக்கி விடுவார்களா?

கழுகார் பதில்கள்!

சம்பத் குமாரி, பொன்மலை.

‘‘கமலும் ரஜினியும் செல்லாத நோட்டுகள்’’ என்கிறாரே சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் அதிர்ச்சியை மறக்கவில்லை போலும்!

அனிதா, சேலையூர்.


சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களைவிடவும் போராட்டக்காரர்கள் என்ற பெயரில் பிரச்னையை ஊதி ஊதிப் பெரிதாக்கத்தான் பலர் வருகிறார்கள்... பிரச்னைக்குத் தீர்வு காண்பவர்கள் என்று யாரையுமே காணவில்லையே?


பாதிக்கப்பட்டவர்கள் வேறு, போராட்டக்காரர்கள் வேறு அல்ல. ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் அந்தப் பகுதி மக்கள்தான். காவிரிப் பிரச்னைக்காகத் தண்ணீர் கேட்டு தஞ்சையிலும் டெல்லியிலும் போராடுபவர்கள் விவசாயிகள். இந்தப் போராட்டங்களில் உள்ள நியாயத்தை அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டதால், அவர்களும் இணைந்து போராடுகிறார்கள். எனவே, போராட்டக்காரர்களால் பிரச்னை ஊதிப் பெரிதாக்கப்படுகிறது என்று சொல்லமுடியாது.

சில திட்டங்களால் ‘தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று அந்தப் பகுதி மக்கள் போராடும்போது மத்திய - மாநில அரசுகள் அவர்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். தாங்கள் கொண்டுவரும் திட்டங்களின் நோக்கங்களை விளக்க வேண்டும். மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவேண்டும். பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசாங்கங்கள் பதில்சொல்ல வேண்டும். இதை அரசு செய்யத் தவறும்போதுதான் போராட்டங்கள் பெரிதாகின்றன. தொடர்கின்றன.

எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கும்போதும், அது அமைய உள்ள பகுதியின் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவேண்டும் என்பது பொதுவான விதி. இந்த விதியைப் பல திட்டங்களில் பின்பற்றுவதில்லை. சில இடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் என்ற பெயரால், கண் துடைப்புக்காக சிலரை வைத்துக் கணக்குக் காட்டி முடித்துவிடுகிறார்கள். ஒரு திட்டத்தில் சாதகமும் இருக்கும்; பாதகமும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்லத் தயங்கும்போது, அல்லது மறைக்க முயற்சிக்கும்போது இதுபோன்ற போராட்டங்களை அரசு எதிர்கொண்டே ஆகவேண்டும். போராட்டங்களில் அரசியல் நுழைந்துவிடுவது இயற்கைதான். அப்படி ஆகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. 

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு முன்பு அவரது கட்சி மாநில அளவிலாவது வெற்றிபெற முயற்சி செய்யட்டும்’’ என்ற பி.ஜே.பி-யின் விமர்சனம்?


ஒருவேளை பி.ஜே.பி பாணியில், பிரதமர் பதவியைப் பிடித்துவிட்டு மாநிலங்களைப் பிடிக்கலாம் என்று ராகுல் காந்தி நினைக்கிறாரோ!

லட்சுமி செங்குட்டுவன், நாமக்கல்.

யாரைத் திருப்திப்படுத்த எஸ்.வி.சேகரைக் கைதுசெய்யாமல் இருக்கிறார்கள்?

எஸ்.வி.சேகரைத் திருப்திப்படுத்த...

கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ஜெயலலிதாவைக் ‘கன்னடத்துக்காரர்’ என்று கூறாதவர்கள், ரஜினியை ‘கன்னடர்’ என்பது ஏன்?


அரசியல்ரீதியாக சாதக பாதக அம்சங்களைத் தேடும்போது கன்னடர், மலையாளி, தெலுங்கர் என்கின்ற முத்திரைகள் விழும். ஜெயலலிதாவை அரசியல் மேடைகளில் ‘கன்னடத்துக்காரர்’ என்று தி.மு.க-வினர் குற்றம்சாட்டியதுண்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்று தி.மு.க-வினர் குற்றம் சாட்டியபோது, கருணாநிதி தெலுங்கர் என்று கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி அதைப் புத்தகமாக சிலர் அன்றே வெளியிட்டிருக்கிறார்கள். கருணாநிதி தெலுங்கர், அண்ணாதுரை தெலுங்கர் என்று இன்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் முத்திரை குத்தி வருகின்றன. பெரியார் கன்னடர் என்றே இவர்களால் அழைக்கப்படுகிறார். எனவே, அரசியலில் கன்னடர், தெலுங்கர், மலையாளி போன்றவை எப்போதும் பயன்படுத்தப்பட்டுவரும் வார்த்தைகள்தான்.

எஸ்.பூவேந்த அரசு, சின்ன தாராபுரம்.


கழுகார் பதில்கள்!

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும், சசிகலா இன்னமும் பரபரப்புச் செய்தியாக இருப்பது என்ன மாயம், என்ன நியாயம்?

சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், சிறைக்கே போனாலும், மறுபடி வந்து கட்சியைக் கைப்பற்றினாலும், அடுத்து நடக்கப்போகும் தேர்தலில் அவரின் ஆட்கள் ஜெயித்தாலும் தோற்றாலும், அவர் தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருள்தான். எதிர்த்து அரசியல் நடத்தியவர்கள், சசிகலாவை மறந்திருக்கலாம். ஆனால், அவரால் ஆதாயம் பெற்று அரசியலில் வளர்ந்தவர்கள் இன்று அவருக்கு எதிரான நிலையில் இருந்தாலும், அவர்களால் சசிகலாவை மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை. சசிகலாவைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு ‘நியாயம் இருக்கிறது’. சசிகலாவை மறக்காமல் இருப்பதன் ‘மாயம்’ என்னவென்று உங்களுக்கே தெரியும்.

தட்டார்மடம் சித்தர்ராஜ், திருநெல்வேலி.

டி.டி.வி.தினகரன் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துவந்த நேரத்தில், சசிகலாவின் தம்பி திவாகரன் அவரை எதிர்த்துக் கலகம் செய்தது நியாயமா?

சசிகலா குடும்பத்தில் நடப்பது பங்கு பிரிக்கும் போட்டி. அதில் மொத்தமாகக் கபளீகரம் செய்யப் பார்க்கிறார் தினகரன். ஆனால், தன் குடும்பத்துக்கு உரிய பங்கீட்டை எதிர்பார்க்கிறார் திவாகரன். இதில், மக்கள் நலன் என்பது சுத்தமாக இல்லை. அவர்கள் இருவருக்கும் மக்கள் பிரச்னைகளிலோ கொள்கைகளிலோ எந்தச் சந்தேகமும் வரவில்லை. மேலும், ‘தினகரன் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்துவருகிறார்’ என்பதுகூட ஊதிப் பெரிதாக்கப்படும் ஒரு மாயைதான்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதை நிறுத்திவிட்டார்களா?


நடந்ததையெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்று நீங்கள் நம்பினால், உங்களைவிட அப்பாவி வேறு யாரும் இருக்கமுடியாது. நடந்தது எடப்பாடியின் மகுடாபிஷேகம்; பன்னீர்செல்வத்தின் பாலாபிஷேகம். இதற்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எம்.ஜி.ஆருக்கே சம்பந்தம் இல்லாதபோது, ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடியும் பன்னீரும் அரசியல்ரீதியாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அரசாங்கப் பணத்தில், தங்களுக்குத் தாங்களே எடுத்துக் கொண்ட சுய தம்பட்ட விழாக்கள் அவை.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.


ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு ஏன் இந்த அவசரம்?


இந்த ஒரு சாதனையையாவது செய்வோம் என்று எடப்பாடி நினைத்திருக்கலாம்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!