Published:Updated:

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

‘‘திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்!

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார்? குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அவர் நடிப்பு எடுபடாது. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா?’ என்று கேட்டுள்ளார்.’’

‘‘குஷ்பு அப்படிச் சொன்னாரா?’’

‘‘குஷ்பு அப்படிக் குறிப்பிடவில்லை. ‘இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப் படுவார். எனக்கு டெல்லியிலிருந்து தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் திருநாவுக்கரசரைக் கடும் ஆத்திரத்தில் தள்ளியது. உடனே குஷ்புவைத் தாக்கும் போக்கில் தி.மு.க-வையும் குத்தியிருக்கிறார் அரசர். ‘தி.மு.க-விலிருந்து முட்டையாலும் செருப்பாலும் அடித்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு. அதேநிலை இப்போது காங்கிரஸ் கட்சியிலும் ஆகும்’ என்றதோடு, ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எனவே எந்தக் கட்சியுடனும் ஆயுட்காலக் கூட்டணி வைக்க முடியாது’ என்றும் பேசினார். வேண்டுமென்றே திருநாவுக்கரசர் இப்படியெல்லாம் பேசியதாக தி.மு.க-வினர் நினைக்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

‘‘டெல்லி மேலிடம் என்ன நினைக்கிறது?’’

‘‘தமிழக விவகாரங்கள் குறித்து, ப.சிதம்பரத்திடம் ராகுல் ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில், ‘இப்போதைக்கு திருநாவுக்கரசரின் பதவியைப் பறிக்க வேண்டாம். வேண்டுமானால், அவருக்குக் கீழே நான்கு செயல் தலைவர்களை நியமிக்கலாம்’ என்ற முடிவுக்கு டெல்லி வந்துள்ளது. அதுவே, திருநாவுக்கரசருக்கு வைக்கப்படும் ‘செக்’தான். அதே நேரத்தில், மேலிட விவகாரங்களைக் கட்சித் தலைமையின் அனுமதியின்றி பொதுவில் பேசிய காரணத்துக்காக குஷ்புமீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.’’ 

‘‘திருப்பதியில் எடப்பாடியை ஒருவர் கடுமையாக அர்ச்சனை செய்திருக்கிறாரே?”

‘‘மே 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். சேலத்திலிருந்து வேலூர் வழியாக காரில் சென்ற எடப்பாடியின் குடும்பம், அன்று இரவு திருமலையில் தங்கியது. அப்போது திருமலையில் இருக்கும் ஸ்ரீவராகசாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றார் முதல்வர். கோயில் சார்பில் எடப்பாடிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். மூலவருக்கு ஆராதனை செய்யும் நேரத்தில், அங்கு பக்தர்கள் மத்தியில் நின்றிருந்த பட்டர் ஒருவர் திடீரென்று சாமியாடத் தொடங்கினார். அவர் போட்ட கூச்சலில் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி, சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டார். சாமி ஆடியவர் ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஏதேதோ அருள்வாக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில், எடப்பாடியை ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். ‘எடப்பாடியை என்னை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல். தமிழ்நாட்டையே சீரழிச்சிட்டார் இந்த எடப்பாடி பழனிசாமி’ என்றெல்லாம் அவர் கத்த ஆரம்பித்ததும், அனைவரும் அதிர்ந்துவிட்டனர். எடப்பாடி முகமே மாறிவிட்டது. அவர் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், சாமி ஆடிய அந்த நபரை அகற்ற முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தால் அப்செட்டான எடப்பாடி, அதன்பிறகு யாரிடமும் முகம்கொடுத்துப் பேசவில்லையாம்.’’

‘‘அந்த சாமியாடி யார்?’’

‘‘அந்த நபர் பெயர் ஸ்ரீராமுலு. அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். அவரும் வழக்கமாக திருப்பதிக்கு சாமி கும்பிடச் செல்வாராம். எடப்பாடியைப் பார்த்ததும் தனது கோபத்தைக் காட்டிவிட்டார் என்கிறார்கள். திருப்பதியில் இதுவரை வி.ஐ.பி-க்கள் வரும்போது இப்படி ஆனதில்லை. எனவே, இது எடப்பாடி பழனிசாமியின் எதிரணியினர் செய்த வேலையாக இருக்கலாம் என்கிறது ஆந்திர போலீஸ் தரப்பு. அந்த பக்தரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், ஆந்திர போலீஸ் நிதானமாக நடந்துகொண்டதாக எடப்பாடி நினைக்கிறார். ஆனால், ‘பக்தர்களிடம் நாங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வ தில்லை’ என்கிறது ஆந்திர போலீஸ். சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த முதல் உத்தரவு, இந்த சம்பவம் குறித்து விசாரித்து உளவுத்துறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதுதானாம்!”

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

‘‘தி.மு.க சார்பு அணிகளின் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் நடந்துள்ளதே?”

‘‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும்! ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்... இப்போது அந்த 300 பேர் எங்கே? அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற்றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்!”

‘‘அது என்ன?”

‘‘கனிமொழி, ‘நான் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போனால், மகளிரணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை’ என்று குறிப்பிட் டாராம். ‘அப்படி நடந்தால் அதுபோன்ற மாவட்டப் பொறுப்பாளர்களை உடனே நீக்கிவிடுங்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மறுநாளே இரண்டு மாவட்டங்களின் பொறுப்பாளர்களை கனிமொழி நீக்கிவிட்டார்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!

சமூகநலத் துறை அமைச்சர் சரோஜாவுக்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் வளர்மதிக்கும் ஈகோ மோதல் அதிகமாகி வருகிறதாம். வட சென்னையில் தாலிக்குத் தங்கம் தரும் அரசு விழாவுக்கு வளர்மதிக்கு அழைப்பு இல்லையாம். இருந்தும் மேடைக்கு வந்த அவர், சரோஜாவைக் கடுப்படித்தாராம். ‘‘இது அரசு விழா. கலெக்டர்தான் யார் யாரை அழைப்பது என்று லிஸ்ட் ரெடி பண்ணினார். எனக்குச் சம்மந்தமில்லை’’ என்று பதிலுக்கு சரோஜாவும் எகிற, அங்கிருந்தவர்கள் அமைதிப்படுத்தினார்களாம். 

• மருத்துவமனையில் இருக்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சமீபத்தில் சந்தித்தார் மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன். ‘‘இது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம். ஸ்பெஷலாக உங்களுக்காக கொண்டுவந்தேன்’ என்று நீட்டினாராம். ‘‘ஆல்வேஸ் வித் யூ’’ என்று மெல்லிய குரலில் சொன்னபடி குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டாராம் அருண் ஜெட்லி. 

• நள்ளிரவு நேரத்திலும் அந்த போலீஸ் பிரிவின் அனைத்து விளக்குகளும் பிரகாசமாக எரியும். தலைநகர வி.ஐ.பி-க்களின் குடும்ப விவகாரங்கள், பிசினஸ் கட்டைப்பஞ்சாயத்து, சிவில் விவகாரம்... இந்த மாதிரியான ரகசிய விசாரணைகளை அந்தப் பிரிவுதான் நடத்தும். தலைநகர போலீஸ் அதிகாரிகளுடன் நட்பில் இருக்கும் ஒரு பிரமுகர், சமீபத்தில் சிவில் பஞ்சாயத்து ஒன்றை இங்கு கொண்டுவந்திருக்கிறார். அவர் சுட்டிக்காட்டிய வி.ஐ.பி-யைத் தூக்கிவந்து விடிய விடிய பஞ்சாயத்து நடந்ததாம்.