Published:Updated:

மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்

மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்

மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்

ன்னியாகுமரி மாவட்டத்தில் மே 16-ம் தேதி சுற்றுப்பயணம் செய்த கமல்ஹாசன், மீனவர்களுக்கு வலை விரித்தார். மீனவர்களுக்காக மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் நிதியுதவி தருவதாகவும் கூறியிருக்கிறார்.

கமலின் சுற்றுப்பயணம் மீனவ கிராமங்களைக் குறிவைத்தே அமைக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் உள்ள ஓட்டுக்கள் ஒட்டுமொத்தமாக எந்தக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ, அந்தக் கட்சி வேட்பாளரே வெற்றிபெறுவார் என்பது கடந்த கால வரலாறு. இந்த அரசியல் சூத்திரத்தை அறிந்து வைத்திருந்த கமல்ஹாசன், அதன்படிதான் தனது பயணத்திட்டத்தை அமைத்திருந்தார். கமல் எதிர்பார்த்தபடியே மீனவ கிராமங்களில் அவருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசனுக்கு மணக்குடி, குளச்சல், சின்னத்துறை போன்ற மீனவ கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர். கடற்கரை அல்லாத உள்பகுதிகளான திங்கள்சந்தை, மேல்புறம், அழகியமண்டபம், தக்கலை பகுதிகளில் அவருக்குப் போதுமான வரவேற்பு இல்லை. அதற்காகக் கமல் வருத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. ஆள்கள் இல்லாத பகுதிகளில் கமலின் வாகனம் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது.

மீனவ கிராமமான குளச்சலில் மட்டுமே மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார் கமல். அப்போது மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் அவரிடம் உண்டியலை நீட்டியபடி, “கடலில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை ஆபத்து காலத்தில் அரசு மீட்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் முற்றிலும் இழந்துவிட்டோம். எனவே நாங்களே பணம் வசூலித்து மீட்புப் பணிக்காகப் படகு வாங்க முடிவுசெய்துள்ளோம். அதற்காக நீங்கள் உதவி செய்யுங்கள்” என்று கேட்டனர். அப்போது கமல், “இப்போது நான் பணம் கொண்டுவரவில்லை. மீட்புப் படகுக்காக 5 லட்சம் ரூபாய் பிறகு தருகிறேன்” என மேடையில் அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். குமரி மாவட்டம் வந்த கமல், மீனவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்பதே உண்மை.

கமல் பயணங்கள் ஒருபுறம் இருக்க மீனவர்களுக்காக மீனவர்களால் வாங்கப்படும் மீட்புப் படகு குறித்து விசாரணையில் இறங்கினோம். வழக்கமாக மத்திய அரசின் கடற்படை, மாநில அரசின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் ஆகியவைதான் மீட்புப் படகுகள் வைத்திருக்கும். ஆனால், மீனவ அமைப்பு ஒன்று மீட்பு படகு வாங்க வேண்டிய அவசியம் என்ன? படகு வாங்கும் மீனவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன்றோ லெனினிடம் கேட்டோம். “2017 நவம்பரில் வீசிய ஓகி புயலின்போது, கடலில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தனர், பலர் காணாமல் போயினர். அவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் சுணக்கம் காட்டின. மீட்புப் படகு, கப்பல், ஹெலிகாப்டர் ஆகியவை தாமதமாக வந்ததால்தான் அதிகமான மீனவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துபோனார்கள். ஓகி புயல் மட்டுமல்ல, சூறைக்காற்று போன்ற பேரிடர் காலங்களிலும் மீனவர்களை மீட்பதற்காக அரசை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். ஆனால், அரசு துரித நடவடிக்கை எடுப்பதில்லை.

மீட்புப் படகு வாங்கும் மீனவர்கள்! - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்

உதவி கேட்பவர்களைக் குற்றவாளிகளாகப் பாவித்து போனிலேயே விசாரணை மட்டும் நடத்துகிறார்கள். எனவே, 10 கோடி ரூபாய் செலவில் மீட்புப்படகு வாங்க அனைத்து மீனவர்கள் சங்கங்கள் சார்பில் முடிவு செய்தோம். அதிநவீன மீட்புப்படகுக்காக அரசியல் கட்சிகளிடம் மட்டுமல்லாது, யார் நன்கொடை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம். கேரள மாநிலம் கொச்சியில் மீட்புப் படகு கட்டும் பணி நடந்துவருகிறது. பார்ப்பதற்கு சாதாரண விசைப்படகு போன்றுதான் இது இருக்கும். வழக்கமான மீன்பிடிப் படகுகளில் மீன்கள் வைக்கும் இடத்தில் மருந்துகள், மீட்புக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் 100 மீனவர்களை மீட்டு அழைத்துவரும் வகையில் படகு வடிவமைக்கப்படுகிறது. இந்தப் படகை இயக்குவதற்குத் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் கப்பல்களில் பணிபுரியும் கேப்டன்களை இணைத்து தனிக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஆபத்தில் இருக்கும் மீனவர்கள், இந்த மீட்புப் படகைத் தொடர்புகொள்ள, தொடர்பு எண்கள் அறிவிக்கப்படும். முதலில் மீன்பிடிப் படகாகப் பதிவு செய்துவிட்டு அதிகாரிகளிடம் மீட்புப்படகுக்காக சிறப்பு அனுமதி கேட்போம். இப்போது குமரி மாவட்டத்துக்கு ஒரு மீட்புப்படகு வாங்குகிறோம். அடுத்ததாக அனைத்துக் கடலோர மாவட்டங்களுக்கும் மாவட்டத் துக்கு ஒன்றுவீதம் மீட்புப் படகு வாங்க உள்ளோம்” என்றார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமக் ஜெயக்குமாரிடம் பேசினோம். “பேரிடர்க் காலங்களில் மீட்புப் பணிக்காக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிப்பட்ட நபரோ, குழுவோ மீட்புப்படகுகளை இயக்குவதற்கும், அவர்கள் தலைமையில் மீட்புக்குழு சென்று மீட்கவும் சட்டத்தில் இடம் இல்லை” என்றார்.

குமரி மாவட்ட மீனவர்களை வளைக்கும் நோக்கில் மீட்புப்படகுக்காக நன்கொடை அறிவித்த கமல்ஹாசனும் சர்ச்சையில் சிக்கிக்கொள்வாரோ?

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்