Published:Updated:

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

ரெட்டி பிரதர்ஸ் Vs டிகேஎஸ்

பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம். டெல்லியிலிருந்து வந்திருந்த சீனியர் தலைவர் குலாம்நபி ஆசாத் அவர்களிடம் பேசினார். ‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள்? அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள். அதிர்ந்துபோன ஆசாத், உடனே டி.கே.சிவக்குமாரை தனியாக அழைத்துப் போய் கடகடவென வியூகங்களை வகுக்க ஆரம்பித்தார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோரைத் தாண்டி சிவக்குமாரை குலாம்நபி ஆசாத் கூப்பிட என்ன காரணம்? கூவத்தூர் பாணியிலான ரிசார்ட்ஸ் அரசியலில் கைதேர்ந்தவர் சிவக்குமார். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிட்டபோது, அவரைத் தோற்கடிப்பதற்காக பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கட்சிமாறச் செய்தது பி.ஜே.பி. அப்போது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூருக்குக் கூட்டிவந்து பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்தலின்போது அனுப்பி வைத்தவர் இந்த சிவக்குமார். இதனால் ஐ.டி ரெய்டு ஆயுதம் அவர்மீது பாய்ந்தது.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

இந்தத் தேர்தலில் காங்கிரஸின் பிரசாரக்குழுத் தலைவராக இருந்த சிவக்குமார், ராகுல் காந்தியோடு நேரடியாகப் பேசும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றவராக உயர்ந்தார். கர்நாடக தேர்தலில் போட்டியிட்டவர்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். இவர் கணக்குக் காண்பித்திருக்கும் சொத்து மதிப்பு, 730 கோடி ரூபாய். சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் இப்போது பெங்களூரு ரூரல் தொகுதி எம்.பி. இந்த இரண்டு சகோதரர்களும் இணைந்துதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூருக்கு அருகே பிடதியில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்ஸில் வைத்துப் பாதுகாத்தனர். இங்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்ததும், கொச்சிக்குக் கூட்டிச் சென்றனர்.    

கர்நாடகா தேர்தல் முடிவு வெளியாக ஆரம்பித்த நிமிடத்திலிருந்து காங்கிரஸ் முகாமில் சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது. தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததுமே, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவ கவுடாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டனர். தேவ கவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வராக்கவும் ஒப்புக்கொண்டனர். தங்களுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைப்பது போல தேர்தல் முடிவுகள் போக்கு காட்டியதால், நம்பிக்கையோடு இருந்த பி.ஜே.பி இந்த விஷயத்தில் ஏமாந்துவிட்டது. அதற்குள்ளாகவே, ‘காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் உள்ளிட்ட 20 அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் என்றும், ம.ஜ.த-வுக்கு முதல்வர் பதவி உள்ளிட்ட 14 அமைச்சர்கள் பதவி’ என உடன்பாடே ஏற்பட்டுவிட்டது.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

இந்தச் சூழ்நிலையில்தான் ‘‘காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆறு பேர், மே 16-ம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு வரவில்லை. இவர்களை ரெட்டி சகோதரர்கள் பி.ஜே.பி பக்கம் வளைத்துவிட்டனர்’’ என்ற தகவல் வெளியாகி காங்கிரஸ் தரப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களில் பீமாநாயக், ஜமீர்அகமதுகான், அகண்ட சீனிவாசமூர்த்தி ஆகிய மூவரும் ஏற்கெனவே ம.ஜ.த சார்பில் எம்.எல்.ஏ-க்களாக இருந்தவர்கள். இவர்கள் உள்பட ஏழு ம.ஜ.த எம்.எல்.ஏ-க்களை 2015-ல் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராமமூர்த்திக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார் டி.கே.சிவக்குமார். அந்த ஏழு பேருக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் சீட்டும் வாங்கிக் கொடுத்தவர்  சிவக்குமார். அதில் இந்த மூவர் மட்டுமே வெற்றி பெற்றனர். இப்போது காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அமைவது தங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தனித்து இருந்தனர். இதை அறிந்த டி.கே.சிவக்குமார், ‘‘என்னை நம்பித்தானே வந்தீங்க. என்கூட இருங்க’’ என்று பேசி அழைத்து வந்தார். இந்த மூவரையும் அழைத்துச் சென்று குமாரசாமியிடமும் பேச வைத்தார் சிவக்குமார்.

அந்த இடைவெளியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் வெற்றிபெற்ற சங்கரை பி.ஜே.பி பக்கம் ரெட்டி சகோதரர்கள் வளைத்துவிட்டனர். மே 16-ம் தேதி காலை அவர் எடியூரப்பா வீட்டுக்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இதைக் கவனித்த சித்தராமையா, பெங்களூரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பைரத்தி சுரேஷ், பைரத்தி பசவராஜ் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினார். இவர்கள் சகோதரியின் கணவர்தான் சங்கர். இந்த இருவரும் சங்கரிடம் பேசி, பி.ஜே.பி-யினர் அவரைத் தங்கவைத்திருந்த ஹோட்டல் அறையிலிருந்து தப்பித்து வரவைத்தனர். சித்தராமையாவின் விசுவாசியான சங்கர், காங்கிரஸ் சீட் கிடைக்காததால்தான் வேறு கட்சி சார்பில் நின்று வென்றார். இதனால், சித்தராமையா கூப்பிட்டதும் வந்துவிட்டார். ஒரே சுயேச்சை எம்.எல்.ஏ-வான நாகேஷை அதற்குள் டி.கே.சிவக்குமார் அழைத்துவந்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொண்டார். இதை பி.ஜே.பி தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

டி.கே.சிவக்குமார் இந்த அளவுக்கு அதிரடி காட்டுவதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற ஐ.டி ரெய்டு, பி.ஜே.பி மீது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது என்பது ஒரு காரணம். காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவியைப் பெற்றுவிட முடியும் என்பது இன்னொரு காரணம்.

காங்கிரஸ் இப்படி டி.கே.சிவக்குமாரை வைத்து வியூகங்கள் வகுக்கிறது என்றால், பி.ஜே.பி தரப்பில் பெல்லாரி சுரங்க ஊழலால் புகழ்பெற்ற ரெட்டி சகோதரர்கள் களத்தில் குதித்திருக் கிறார்கள். எடியூரப்பாவின் விசுவாசிகளையும் புறக்கணித்துவிட்டு, ரெட்டி சகோதரர்கள் சொன்னவர்களுக்கே பி.ஜே.பி மேலிடம் சீட் கொடுத்தது. பல பி.ஜே.பி வேட்பாளர்களின் செலவையும் இவர்களே பார்த்துக்கொண்டனர். இவர்கள் குடும்பத்துக்கு எட்டு தொகுதிகள் தரப்பட்டன என்றால், ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு புரியும். இவர்களில் மூத்தவரான ஜனார்த்தன ரெட்டி போட்டியிடவில்லை. தம்பிகள் கருணாகர ரெட்டியும் சோமசேகர ரெட்டியும் ஜெயித்துவிட்டனர். மே 17-ம் தேதி நிலவரப்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேரை இவர்கள் வளைத்துவிட்டனர். விஜயநகரம் எம்.எல்.ஏ ஆனந்த சிங்கை பெங்களூரு வருவதற்கு முன்பாகவே தூக்கிய இவர்கள், ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்கியிருந்த மாஸ்கி எம்.எல்.ஏ பிரதாப்கவுடா பாட்டீலையும் அதிகாலையில் தூக்கினர். சோமசேகர ரெட்டியின் தனி விமானத்தில் இவரை எங்கோ கொண்டு சென்று விட்டனர். இன்னும் பலரை இழுப்பதற்காக ரெட்டி சகோதரர்களின் விமானமும் ஹெலிகாப்டர்களும் சுற்றுவதாகப் பேச்சு.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

‘எடியூரப்பா நிலைப்பாரா, குமாரசாமி வருவாரா’ என்பதைவிட, டி.கே சிவக்குமார் Vs ரெட்டி பிரதர்ஸ் இடையே கர்நாடக அரசியலில் நடக்கும் கரன்சி நாடகத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதே பேச்சாக இருக்கிறது.

ம.ஜ.த-வில் இருப்பதே குமாரசாமியோடு சேர்த்து 36 எம்.எல்.ஏ-க்கள்தான். ஆனால், ‘‘எங்கள் கட்சியில் 32 எம்.எல்.ஏ-க்களிடம் பி.ஜே.பி சார்பில் பேரம் நடத்தினார்கள். 100 கோடி ரூபாயும் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை காட்டினார்கள்’’ என்றார் குமாரசாமி. ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பெங்களூரு வசந்த் நகரில் உள்ள சாங்லீலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.

2008-ம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் 110 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது பி.ஜே.பி. இதே எடியூரப்பாதான் முதல்வர். பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆறு சுயேச்சைகளை வளைத்தும், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் பலரைக் கட்சி தாவவைத்தும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பி.ஜே.பி. கட்சி தாவி பதவியை இழந்தவர்கள், பிறகு பி.ஜே.பி சார்பில் நின்று ஜெயித்தனர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என இது கர்நாடக அரசியலில் பாப்புலர்.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

இப்போது ‘ஆபரேஷன் லோட்டஸ் 2.0’ என்ற பிளானை வகுத்துள்ளது பி.ஜே.பி. கட்சி மாறி பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து எம்.எல்.ஏ பதவியை இழக்க பலரும் தயாராக இல்லை. போன முறை காங்கிரஸும், ம.ஜ.த-வும் தனியாக இருந்தன. இப்போது அவர்கள் கூட்டணி அமைத்து எதிர்த்தால் தங்களால் மீண்டும் ஜெயிக்க முடியாது என்பது தெரிந்திருக்கிறது. எனவே, எதிர் அணியில் சிலரை நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தில் வரவிடாமல் செய்ய வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி போடும் கணக்கு. குறிப்பாக எடியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒரு டஜன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தன்னைக் கைவிட மாட்டார்கள் என நம்புகிறார் அவர். இன்னொரு பக்கம், ஏகப்பட்ட வழக்கு சிக்கல்களில் உள்ள 20 காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்டையும் தனியாக எடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க பிளான் நடக்கிறது. ஆனாலும், பி.ஜே.பி தலைவர்கள் வார்த்தைகளில் உறுதியும் நம்பிக்கையும் தென்படவில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம்.  

- எம்.வடிவேல், படங்கள்: க.மணிவண்ணன்

காவிரியால் பலனில்லை!

• கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே காலதாமதம் செய்தது மத்திய அரசு. இதனால் கர்நாடகாவில் பி.ஜே.பி-க்குப் பெரும் பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதைத் தவறு என நிரூபித்துவிட்டன. காவிரி நதிநீரால் பலன்பெறும் 27 தொகுதிகளில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி ஜெயித்தது. காங்கிரஸ் ஆறு தொகுதிகளில் ஜெயிக்க, ம.ஜ.த கட்சி 17 தொகுதிகளை இங்கு வென்றிருக்கிறது. ஒருவேளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வரானால், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாதம் இன்னும் மோசமாகலாம். தங்கள் கட்சிக்கு அதிக வெற்றியைக் கொடுத்த பகுதியை குமாரசாமி எப்படிக் கைவிடுவார்?

• கர்நாடகாவில் 21 தொகுதி களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவற்றில் 11 தொகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி ஜெயித்துள்ளது.

• ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றியதால், பி.ஜே.பி-க்கு எதிராக வாக்களியுங்கள்’’ என கர்நாடகாவில் வாழும் தெலுங்கு பேசும் மக்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். கர்நாடகாவில் தெலுங்கு பேசும் மக்கள் 50 ஆயிரம் பேருக்கு மேல் வாழும் தொகுதிகள் என 46 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் ஐந்து தொகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி வென்றுள்ளது.

மூன்று தொகுதிகளில் முழு கவனம்!

தொ
ங்கு சட்டசபையில் எல்லா கட்சிகளும் எண் விளையாட்டில் ஈடுபட்டிருக்க, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளில் முக்கியக் கட்சிகளின் முழு கவனம் பதிந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட பெங்களூரு நகரின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் மே 28-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏ முனிரத்னா மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் - ம.ஜ.த இரண்டும் தேர்தலுக்குப் பிறகே கூட்டணி அமைத்ததால், இந்தத் தொகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இந்த மோதல் விஷயத்தில் கூட்டணி என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.

பி.ஜே.பி வேட்பாளர் விஜயகுமார் இறந்ததால், பெங்களூரு நகரின் ஜெயநகர் தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமநகரா, சென்னபட்னா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட குமாரசாமி, இரண்டு இடங்களிலும் வென்றார். ராமநகரா அவர் எப்போதும் நிற்கும் தொகுதி. ‘‘தன் மனைவிக்கு சென்னபட்னாவில் சீட் தர அப்பா தேவ கவுடா மறுத்ததால், அந்தத் தொகுதியிலும் குமாரசாமி போட்டியிட்டார். சென்னபட்னா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் ஆதரவோடு அவர் தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தக்கூடும். பதிலுக்கு ஜெயநகரில் காங்கிரஸுக்கு அவர் ஆதரவு கொடுக்கலாம்’’ என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள்.

கூட்டணி இருந்தால்!

ர்நாடகா தேர்தல் முடிவு வெளியானதுமே, ‘‘ஒருவேளை தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அமைந்திருந்தால் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும். காங்கிரஸின் அலட்சியத்தால் இப்படி ஆகிவிட்டது’’ என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சொன்னார். குமாரசாமியுடன் மம்தா போனில் பேசி, பி.ஜே.பி-க்கு எதிராக அமைக்க வேண்டிய சில வியூகங்களையும் சொல்லியிருக்கிறார். மம்தா சொன்னது போல கூட்டணி அமைந்திருந்தால், காங்கிரஸ் - ம.ஜ.த அணி 151 இடங்களைப் பிடித்திருக்கலாம். பி.ஜே.பி 69 இடங்களையே பிடித்திருக்கும். இந்தக் கூட்டணி அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடித்தால், கர்நாடகாவில் பி.ஜே.பி-க்கு ஏழு இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி 21 எம்.பி-க்களைப் பெறலாம்.

கணக்கு என்ன?

‘ஏ
ழு எம்.எல்.ஏ-க்கள் பலத்தைக் கூடுதலாகப் பெறுவதற்கு 15 நாள்கள் போதும்’ என்பதுதான் பி.ஜே.பி-யின் கணக்கு. 224 பேர் கொண்ட சட்டசபையில் 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் குமாரசாமி இரண்டு தொகுதிகளில் ஜெயித்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது 221 பேர்தான் அவையில் இருப்பார்கள். எனவே, 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைக் காட்டினால், பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும். பி.ஜே.பி-க்கு இருப்பது 104 எம்.எல்.ஏ-க்கள். சுயேச்சைகள் இருவர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மூவரையும் இழுத்துவிட முடியும் என்று கணக்கு போடுகிறார்கள் பி.ஜே.பி தலைவர்கள். இவர்களை எதிர்முகாமிலிருந்து கழித்தால், காங்கிரஸ் - ம.ஜ.த பலம் 114 எம்.எல்.ஏ-க்கள் என இருக்கும். இவர்களில் எட்டு பேரை வர விடாமல் செய்துவிட்டால் போதும்... பி.ஜே.பி காட்டும் 107 பெரும்பான்மை ஆகிவிடும். இதற்குத்தான் காங்கிரஸ் முகாமில் சிலரை அமைதியாக்க நினைக்கிறார்கள்.

‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0

‘‘குடும்பத்தில் குண்டு வைக்கிறார்கள்!’’

பி
.ஜே.பி-யின் பேரங்கள் அதிகம் நடப்பது ம.ஜ.த முகாமில்தான். 13 எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கட்சியிலிருந்து வெளியில் வந்தால், டெக்னிக்கலாக கட்சித் தாவல் தடைச் சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாது. அதனால், குமாரசாமியின் அண்ணனும், தேவ கவுடாவின் மூத்த மகனுமான ரேவண்ணாவிடம் வலைவீசுவதாகச் சொல்லப்படுகிறது. ஹோலேநரசிபுரா தொகுதியில் ஜெயித்திருக்கும் ரேவண்ணாவின் தீவிர விசுவாசிகளாக அரை டஜன் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அப்பா பேச்சைத் தட்டாத பிள்ளையாகக் கருதப்படுகிறார் ரேவண்ணா.

‘‘உங்கள் தம்பி முதல்வர் ஆனால் உங்களுக்கு என்ன லாபம்? எங்கள் பக்கம் வந்தால் உங்களைத் துணை முதல்வர் ஆக்குகிறோம்’’ என மூத்த பி.ஜே.பி தலைவர் ஒருவர் ரேவண்ணாவிடம் பேசியிருப்பதாகத் தெரிகிறது. மே 12-ம் தேதி கர்நாடகா தேர்தல் நடந்து முடிந்ததும் குமாரசாமி சிங்கப்பூர் புறப்பட்டுப் போனார். அங்கே நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தை குறித்து ரேவண்ணாவிடம் பி.ஜே.பி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம். இதனால், ‘‘கடைசியில் என் குடும்பத்தில் குண்டு வைக்கிறார்களா?’’ என டென்ஷனாகியிருக்கிறார் குமாரசாமி.