Published:Updated:

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

செய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’ என்று நழுவுவதுமாக, தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆல்டைம் அலெர்ட் அரசியல்வாதி! அவரிடம் பேசினேன்.

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

“அநாகரீகக் கருத்துகளை வெளியிட்டு வரும் பி.ஜே.பி தலைவர்கள் மீது, கட்சித் தலைமை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், ‘அது அவர்களது சொந்தக் கருத்து’ என்று நழுவுவது அவர்களது செயல்பாட்டை ஊக்குவிப்பது ஆகாதா?’’

“நிச்சயமாக இல்லை... எதிர்க்கருத்தாக இருந்தாலும்கூட யார் மனதும் புண்படாதவகையில், கருத்துகளை நாகரிகமாக எடுத்து வைப்பதுதான் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு. எனவே, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில், சிலர் பேசிவிடும்போது, ‘அது அவரது சொந்தக் கருத்து’ என்று சொல்லவேண்டியதாயிருக்கிறது. மற்றபடி யார் என்ன தவறு செய்தாலும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குத் தெரிவிக்கப்படும். அங்கு கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.’’

“சமீபத்தில் எந்தத் தலைவர் மீது அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’’

“பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில், எங்கள் கட்சியைச் சேர்ந்த தீவிர கொள்கைப் பிடிப்பு கொண்டவரான முத்துராமன் என்பவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

பத்திரிகை சகோதரர், சகோதரிகள் மீது நடிகர் எஸ்.வி.சேகர் நாகரீகமற்ற வகையில் விமர்சனம் வைத்ததாக எனக்குப் புகார் வந்தது. அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பினேன். தற்போது எஸ்.வி.சேகர் விடுமுறையில் இருப்பதாகவும், விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஹெச்.ராஜா நாகரீகமற்ற முறையில் தி.மு.க தலைவரை விமர்சனம் செய்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டிய ஆர்.எஸ்.பாரதி, பிரசன்னா போன்ற தி.மு.க-வினர், பதிலுக்கு அதைவிட மோசமான முறையில் எதிர் விமர்சனம் செய்தனர். ஆனால், அவர்கள் மீது இதுவரை தி.மு.க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”


“ ‘புராணக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது’, ‘புஷ்பக விமானம் பறந்தது’, ‘இன்டர்நெட் இருந்துள்ளது...’ என்றெல்லாம் பி.ஜே.பி தலைவர்கள் பேசுவதைக் கேட்டு சிரிப்பீர்களா... அல்லது கோபப்படுவீர்களா?’’

“எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. சிலவற்றில் நம்பகத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்து மதத்தின் சில பழக்க வழக்கங்களைப் பார்க்கும்போது ‘அந்தக் காலத்திலேயே எப்படி இவர்கள் இவ்வளவு விஞ்ஞான பூர்வமாக யோசித்திருக்கிறார்கள்....’ என்று வியக்காமல் இருக்கமுடியாது. உதாரணமாக, கோள்கள் மேலே இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்கிறது. ஆனால், அன்றைய காலகட்டத்திலேயே சுசீந்திரம் கோயிலில், கோள்கள் மேலே இருப்பதாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை போல், அன்றைக்கே கண்ணப்ப நாயனார், கண்ணை எடுத்து வைத்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறதே! ஆக, இதிகாசம், ஆன்மிகம், தமிழ்... என்று எப்படிப் பார்த்தாலும் இன்றைய சிந்தனையோட்டம் அன்றைய மனிதர்களிடமும் இருந்திருக்கிறதல்லவா... இதனைப் பொருத்திப் பார்க்கிறோம் அவ்வளவுதான்!’’

“ ‘நீட் தேர்வு எழுதுவதற்கு வெளி மாநிலம் செல்ல மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும்’, ‘காவிரி நீர் வரும்போது அதைச் சேமித்துவைக்க தமிழகம் முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுவரும் தமிழகத்துக்கே அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?’’

“தமிழகத்தில் நடந்தது தவறுதான். தவறு இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், ‘சாதனை படைக்கவேண்டும் என்ற மனநிலையோடு இருக்கும் மாணவர்கள், சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையோடு இருக்கவேண்டும்’ என்றுதான் பேசினேன். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினரோ தேர்வெழுதும் மாணவர்களின் தன்னம்பிக்கையை உருக்குலைக்கும் வகையில், பேசிவந்தனர்.

மாணவர்கள், நீட் தேர்வு எழுத சிக்கிம், ராஜஸ்தானுக்குப் போய்வந்தது மிகவும் பூதாகரமாக சித்திரிக்கப்படுகிறது. ‘மாணவர்களில் பலருக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே பக்கத்து மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன’ என்று சி.பி.எஸ்.சி தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

அடுத்ததாக, இந்தியாவிலேயே அதிகத் தண்ணீர் வரக்கூடிய இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. ஆனால், அந்தத் தண்ணீரை முறையாக சேமித்துப் பயன்படுத்துவதற்கான தடுப்பணை வசதிகள் செய்யப்படவில்லை.  பாண்டியாறு, ஆழியாறு, தாமிரபரணி திட்டங்கள் செயல்படுத்தப்படாமல், நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ‘50 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டிருந்தவர்கள் ஏன் இவற்றில் கவனம் செலுத்தவில்லை?’ என்றுதான் நான் கேட்கிறேன்.’’

“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்!”

“ஆர்.கே நகர் தேர்தல் ரத்து, பேருந்துக் கட்டண உயர்வு விஷயங்களில் நீங்களும் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் நேரெதிர் கருத்துகளை கூறியுள்ளீர்கள். உங்கள் இருவரிடையே மோதல் போக்கு இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மைதானா?’’

(சிரிக்கிறார்) “அப்படியெல்லாம் எந்த மோதலும் கிடையாது. ஆர்.கே.நகரில் நான் களத்தில் இருந்ததால், அங்கிருந்த சூழ்நிலையை வைத்து ‘தேர்தலை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தேன். அதேபோல், பேருந்துக் கட்டண  விஷயத்திலும், ‘கட்டண உயர்வு தவறு’ என்று எங்கள் கட்சிக் குழு கூடி முடிவெடுத்துதான் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்.

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிர்வாகத்தில் இருக்கிறார். அதனால், ‘கட்டணத்தைக் கூட்டினால் வருமானம் அதிகரிக்கும்’ என்ற நிர்வாக ரீதியில் சொல்லியிருந்தார். அதேநேரம் கட்சி ரீதியாக கருத்து சொல்லும்போது, கட்டண உயர்வைக் கண்டித்தே பதிவு செய்திருந்தார். எனவே, அவரவர் கருத்துகளை எடுத்துச் சொல்ல சுதந்திரம் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமே தவிர, இதனை மோதல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.’’

“ 50 ஆண்டுகால கழக ஆட்சியில்தானே சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, சித்தாந்த ரீதியிலான முன்னேற்றம் என இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், ‘கழகங்கள் இல்லாத் தமிழகம் வேண்டும்’ என்கிறீர்களே....?’’

“தமிழர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும், தமிழகத்தின் இயற்கை வளத்துக்கும் ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை நூறு மடங்கு மட்டுமே உயர்த்தியிருப்பது எப்படிப் பெருமையாகும்?

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என அனைத்து விஷயங்களிலும் பக்கத்து மாநிலங்களோடு பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளாமல் இருந்தது கழகங்களின் ஆட்சியில்தானே? இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதும் இந்தக் கழகங்களின் ஆட்சிதானே...?’’

“சமீபகாலங்களில், தொடர்ச்சியாக பி.ஜே.பி-யினர் பாலியல் வழக்குகளில் சிக்கிவருவதன் பின்னணி என்ன?’’

“வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியிலும் ஏதாவது ஒருவர் இப்படிப்பட்ட வழக்குகளில் சிக்கிக் கொண்டுதான் இருப்பார்கள். பிரேமானந்த் என்பவர் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்குகிறார். ஆனால், அவர் இப்போது எங்கள் கட்சியிலேயே இல்லை. ‘இவர்தான் நிர்மலாதேவி’ என்று சம்பந்தமே இல்லாமல், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேறொரு தொண்டரை இணைய தளங்களில் தவறாகச் சித்திரிக்கிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தையும் சமூக அக்கறையையும் பி.ஜே.பி தனது கொள்கையாகவே கொண்டிருக்கிறது. அப்படித் தூய்மையாக உள்ள இந்தக் கட்சியில் ஏதேனும் சிறு துளி மை பட்டாலும் அது பளிச்சென வெளியேத் தெரிகிறது. அதனால்தான் இப்படியொரு கேள்வி கேட்கப்படுகிறது.’’

“நீட், காவிரி, சமஸ்கிருதம்... என தொடர்ச்சியாக தமிழர் விரோதப் போக்கையே கடைப்பிடித்துவந்தால், தமிழகத்தில் எப்படி தாமரை மலரும்?’’


“தமிழர் விரோதப் போக்கு என்ற மாயத் தோற்றத்தை இங்கே இருப்பவர்கள் தோற்றுவித்திருக்கிறார்கள். இங்கேதான் ராணுவக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சிக்கு வந்த 70 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுச் செயலாளர்களை, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவைத்து மரியாதை செய்கிறோம்.

தமிழை முன்னிறுத்திப் பிரதமர் பேசுகிறார். சமீபத்தில் நடைபெற்ற மன்கிபாத் நிகழ்ச்சியில்கூட, ‘நீர் மேலாண்மையில் தமிழர்களைப் போல் பெருமைகொள்ளுங்கள்’ என்று பெருமிதப்படுகிறார். எனவே, பி.ஜே.பி தமிழுக்கான கட்சி; தமிழர்களுக்கான கட்சி.... இல்லையென்றால் தமிழிசை தலைவராக வந்திருக்கமுடியாது.’’

“தமிழ்ப் பற்று, பாரம்பர்யமிக்க காங்கிரஸ் குடும்பம் என பிறந்து வளர்ந்த நீங்கள், அதற்கு நேரெதிரான பி.ஜே.பி கட்சிக்கு தலைமை தாங்குவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?’’


“சிக்கல்கள் என்று நான் எதையும் எடுத்துக் கொண்டதில்லை. மத உணர்வு சம்பந்தப்பட்ட சில கருத்துகளை வலைதளங்களில் நான் வலிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்; அதில் எந்தவிதப் பிரிவினை உணர்வும் இருக்காது. ஆனால், குறிப்பிட்ட மதக் கருத்துகளை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள், ‘இவரது பின்புலம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார்கள். மதம் சார்ந்த கருத்துகளுக்காக நான் பி.ஜே.பி-யை ஆதரிக்கவில்லை; வளர்ச்சிக்காகவும் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்ற காரணத்துக்காகவுமே நான்
பி.ஜே.பி-யை ஆதரிக்கிறேன்.’’

“பெரியார் பெயரைக் கேட்டாலே, பி.ஜே.பி-யினர் பதற்றமாகிவிடுகிறார்களே....?’’

“பி.ஜே.பி-யின் பெயரைக் கேட்டுத்தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் பதற்றமாகிவிடுகிறார்கள். அதனால்தான். பி.ஜே.பி-க்கும் அவர்களுக்கும் நேரடிப் போட்டி இல்லையென்றாலும்கூட, ‘தமிழ்நாட்டைக் காவி மயமாக்க விடமாட்டோம்’, ‘தமிழகத்தில் தாமரை மலர முடியாது’ என்றெல்லாம் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்குத் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் மட்டுமேயல்ல, ஏற்கெனவே 23 மாநிலங்கள் இருக்கின்றன. கொள்கைகள் மீதும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களின் மீதும் எங்களுக்கு உள்ள பற்று உங்களுக்குப் பதற்றமாகத் தெரிகிறது அவ்வளவுதான்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism