அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, சின்ன தாராபுரம்.

‘தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரையறுத்தது பற்றி?


இது பாரதிதாசனின் பெருங்கனவு. தமிழாய்ந்த தமிழ்மகனாக அனைவராலும் இருக்க முடியாது. ஆனால், ‘தமிழ்நாட்டு மக்களின் உணர்வாய்ந்த தமிழ்மகன், தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது தவறானதாக இருக்க முடியாது அல்லவா?

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.


மறைந்த தமிழறிஞர் அ.அறிவொளி குறித்து..
?

பெயரைப் போலவே அறிவும் ஒளியும் கலந்தவர் அவர். அற்புதமான பேச்சாளர். அழகான எழுத்தாளர். ஆழமான கருத்தாளர். சிலர் மிகச் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்; எழுத்து கை கொடுக்காது. வேறு சிலர் பிரமாதமாக எழுதுவார்கள்; அவர்கள் பேசினால் ஆட்கள் எழுந்து ஓடிவிடுவார்கள். ஆனால் இரண்டு திறனும் கைவரப் பெற்றவர். சிலர் படித்ததை வாந்தி எடுப்பார்கள். சிலர், அடுத்தவர் சொன்னதைத் திருடி படையல் வைப்பார்கள். ஆனால், அறிவொளியின் பேச்சில் அவரது சிந்தனை மட்டுமே வெளிப்படும். அவர் சொன்னதைத் திருடி, இன்னொருவர் சொல்ல முடியாது. சொன்னால் மாட்டிக்கொள்வார். அத்தகைய லாகவம் அவரது பேச்சு மொழிக்கு உண்டு.

அறிவொளி, இலக்கியத்திலிருந்து சமூக மேடைக்கு வந்தார். சமூக மேடையிலிருந்து சமய மேடைக்கு வந்தார். இறுதிவரைக்கும் அவரது குரலாய், சிந்தனையாய், இதயமாய் இலக்கியமும் சமூகமும் சமயமும் இருந்தன. அறிவொளி பேச்சைக் கேட்டவர்கள் எல்லோரும் அவரது பொன்மொழியில் ஏதாவது ஒன்றை மறக்காமல் வைத்திருப்பார்கள். அவர்களிடம் வாழ்கிறார் அறிவொளி!

கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

இன்றைக்கு வித்தியாசமான அரசியல்வாதி என்று யாரைச் சொல்வீர்கள்?

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைவிட எட்டு இடங்கள் குறைவாக ஜெயித்திருக்கிறது பி.ஜே.பி. எட்டு தொகுதிகளில் ‘நோட்டா’ வாங்கியதைவிடக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது பி.ஜே.பி. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவர், ‘என்னைப் பிரசாரத்துக்குப் போக அனுமதித்திருந்தால், இது நடந்திருக்காது. எட்டு தொகுதியிலும் வெற்றி பெற வைத்திருப்பேன்’ என்று ட்வீட் செய்துள்ளார். முடியலப்பா ‘சுப்ரமணிய சுவாமி’யோவ்!

சுந்தரவரதன், புதுச்சேரி.

பிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தில் என்ன விசேஷம்?


சார்லஸ்-டயானா தம்பதியின் இரண்டாவது மகனான இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்கெலுக்கும் நடந்த திருமணம் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகைகளில் ஏராளமான கிசுகிசுக்கள். ஆபரேஷன் செய்துகொண்டதால், மேகன் மார்கெலின் தந்தை இந்தத் திருமணத்துக்கு வரமுடியவில்லை. ஆனால், ‘அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை’ எனக் கொளுத்திப் போட்டார்கள். கண்கலங்கிவிட்டார் மேகன்.

கழுகார் பதில்கள்!

இந்தியாவிலிருந்து ஓர் அழகிய பரிசு இந்தத் தம்பதிக்குப் போகிறது. விலங்குகள்நல அமைப்பான பீட்டா, மும்பையில் படுகாயங்களுடன் ஒரு மாட்டை மீட்டது. அது வண்டி இழுத்துக்கொண்டிருந்த மாடு. காயம்பட்டதும், ‘எதற்கும் உதவாது’ என வீதியில் விட்டுவிட்டார்கள். மீட்கப்பட்ட இதற்கு மேகன், ஹாரி இருவர் பெயரையும் சேர்த்து ‘மெர்ரி’ என்று பெயரிட்டு வளர்க்கும் பீட்டா அமைப்பு, இதன் அழகிய புகைப்படத்தைத் திருமணப் பரிசாக அனுப்புகிறது..

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

அந்தக் கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கும் அரசியல் தூண்டில் போடப்பட்டதாமே?


அப்படி நடந்ததாகத் தெரிய வில்லை. ‘இந்துநேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.தியாகராஜ பாகவதரும், ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்கள். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். இவர்கள் இருவரையும் விடுதலை செய்வதற்கான போராட்டங்களை அன்றைய திராவிடர் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்தன. இதற்குக் காரணம், ‘இரண்டு இயக்கங்களின் தலைவர்களோடும் என்.எஸ்.கே தொடர்பில் இருந்தார்’ என்பதுதான். பாகவதருக்கும் அரசியலுக்கும் தொடர்புகள் இல்லை.

இந்த வழக்குக்கு முன்னதாகத்தான் பாகவதர் மிகப்பிரபலமாக இருந்தார். அவர் ரயிலில் பயணம் செய்கிறார் என்றால், கூட்டம் குவியும். சென்னையில் இருந்து திருச்சி சென்ற ரயில் ஒருமுறை இவருக்காக நான்கு மணி நேரம் தாமதமாகப் போனது. சேலத்தில் அவரைப் பார்க்கக் கூடியவர்களில் சிலர் மின்கம்பத்தில் ஏறி நிற்க, இரண்டு பேர் கருகினார்கள். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு திரையரங்கில் ஓடி, மூன்று தீபாவளிகளைக் கண்டது அவரின் ‘ஹரிதாஸ்’ படம். இவை எல்லாமே சிறைக்குச் செல்வதற்கு முன்புதான். இதெல்லாம் நடந்தது பிரிட்டிஷ் ஆட்சியில்.

கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிர்ஷ்ட தேவதை இருக்கிறாரோ?


தமிழ்நாட்டு மக்களுடன்?!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

56 தேசத்து அரசர்கள் ஆண்ட இந்தியாவில் மன்னர்கள் காலம் தொடங்கி பிரிட்டிஷாரின் ஆளுமை வரை இல்லாத காவிரிப் பிரச்னை... தற்போது வர, இயற்கை வஞ்சித்ததுதான் காரணமா? அல்லது மனிதநேயம் மரித்துப் போனது காரணமா?


காவிரி பிரச்னை புதிதாக வந்த பிரச்னை என்று கூறிவிட முடியாது. மன்னர் காலம் அல்ல, புராண காலம் தொட்டே அது இருக்கிறது. அகத்தியர் கதையில் காவிரியும் முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது. பிரிட்டிஷ் காலத்தில்கூட, மைசூர் சமஸ்தானத்துடன் பிரச்னை வந்த பிறகுதான் காவிரி தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. என்ன, அப்போதெல்லாம் ஒரு கட்டுக்குள் இருந்தது பிரச்னை. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு, அது கைமீறிக் கொண்டே இருக்கிறது.  அதாவது , ஒரு மன்னரின் ஆட்சிக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ஒழுங்காக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நிர்வாக அமைப்புக்குள் இருக்கும் இரண்டு மாநிலங்களிடையே இப்படியொரு சிக்கல், கோளாறு, ஓரவஞ்சனை வருகிறதென்றால்... ‘எதனால் ஏற்படுகிறது, யாரால் ஏற்படுகிறது’ என்பதை உற்றுநோக்குங்கள்.

பாஸ், மதுரை.

கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினால் வருமானவரி விலக்கு உண்டா?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ஏ-யின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, பணமாக இல்லாமல் வங்கி மூலம் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80 ஜிஜிசி-க்கு உட்பட்டு 100 சதவிகித வரிவிலக்கு உண்டு.

ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? நிறைய வைத்துள்ளீர்களா? அல்லது கட்சி ஆரம்பிக்கத் திட்டமா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வியக்கும் விஷயம்?


புதிய பேருந்துகளை இயக்கி வைக்கப் போனார் முதல்வர். அப்போது பேருந்துகளைத் தட்டிப் பார்த்துள்ளார். என்னே தொழில் நேர்த்தி!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!