Published:Updated:

ஆம்னி பஸ்ஸில் அதிகக் கட்டணமா? - புகார் தெரிவித்தால் பணம் வாபஸ் #VikatanExclusive

ஆம்னி பஸ்ஸில் அதிகக் கட்டணமா? - புகார் தெரிவித்தால் பணம் வாபஸ் #VikatanExclusive
ஆம்னி பஸ்ஸில் அதிகக் கட்டணமா? - புகார் தெரிவித்தால் பணம் வாபஸ் #VikatanExclusive

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது...சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லவிரும்பும் மக்களின் முதல் விருப்பம் ரயில் பயணமாகத்தான் இருக்கும். ஆனால், ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகி முழுவதுமாகத் தீர்ந்துவிடுகின்றன. அதற்கடுத்ததாகப் பேருந்துப் பயணம் மட்டுமே ஊருக்குச் செல்ல ஒரேவழி. அரசுப் பேருந்துகளையும், விழாக்கால சிறப்புப் பேருந்துகளையும் பெரும்பாலான மக்கள் விரும்பாத நிலையில், அவர்களின் சாய்ஸ் தனியார் ஆம்னிப் பேருந்துகளாகத்தாம் இருக்கின்றன. ஆம்னிப் பேருந்துகளில் சொகுசுப் பயணம் செய்வதைப் பலரும் விரும்பக்கூடிய நிலையில், பண்டிகை நாள்களில், எப்படியும் மக்கள் பயணம் செய்தே ஆகவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிடவும் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதை தனியார் பேருந்து நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. 

இந்த வருடம் சென்னையிலிருந்து தீபாவளிக்காக விடப்படும் ஆம்னிப் பேருந்துகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாகத் தகவல் வர, உண்மை நிலவரத்தை அறிய கோயம்பேடு ஆம்னிப் பேருந்து நிலையத்துக்குச் சென்றோம். காலை முதல் இரவு வரை தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படும் இடத்தில், சுகாதாரம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. கட்டண உயர்வு, தீபாவளிக்கான முன்பதிவு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆம்னிப் பேருந்து சங்கப் பொதுச்செயலாளர் அன்பழகனைச் சந்தித்துப் பேசினோம்.

``அனைத்து ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக, அக்டோபர் 30-ம் தேதி ஆம்னிப் பேருந்து ஓட்டுநர்களுக்குக் கண் பரிசோதனை, மருத்துவம் மற்றும் விழிப்புஉணர்வுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அண்ணாநகர் சரக காவல் இணை ஆணையர் சுதாகர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டார்கள். இதில் 450-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்துகொண்டு, மருத்துவப் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். இந்தக் கூட்டம் நடைபெற்றதை, ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கான கூட்டம் என்று அனைவரும் தவறாகப் புரிந்துகொண்டார்கள். உண்மையில் இப்போது புதிதாகக் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்துப் பேருந்து உரிமையாளர்களுக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தியுள்ளோம். .

இந்த வருடம் தீபாவளிக்காக நவம்பர் 2,3 மற்றும் 4-ம் தேதிகளில்தான் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னைக்குத் திரும்பி வருவோரின் வசதிக்காக நவம்வர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துக் கட்டணம் அதிகமாக வசூலித்தால், நாங்களே ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்.

சாதாரண நாள்களில் இருக்கும் டிக்கெட் கட்டணத்தைவிட, சனி மற்றும் ஞாயிறுகளில் கட்டணம் அதிகமாக இருக்கும். இது கடந்த இரண்டு வருடங்களாக, நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறையில் இருப்பவைதான். ஆம்னி சங்கங்கள் நியமித்த டிக்கெட் கட்டணத்தைத் தருகிறோம். நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் கொடுத்து, மீதிப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அரசின் வரையறைப்படிதான் செயல்படுகிறோம்'' என்றார்.

பண்டிகைகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கடைசி நிமிடத்தில் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் பேருந்துகளையே நம்பி இருக்கும் போது, பயணம் செய்தாக வேண்டும் என்ற சூழலில், பேருந்துக்கான கட்டணம் ஓரளவு அதிகமாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்துவதுகிடையாது. அதுபோன்ற தருணங்களில், கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கு பெரும்பாலும் நாம் முயற்சி செய்திருக்க மாட்டோம். ஆம்னிப் பேருந்து கட்டணங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள சென்னைப் போக்குவரத்துத்துறை இணை ஆணையர் பாலனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``இந்த வருடம் தீபாவளிப் பண்டிகையின்போது, பேருந்துக் கட்டணத்தைக் கண்காணிக்க, போக்குவரத்து இணை ஆணையர்கள் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான கட்டணம் பெறப்பட்டால் ``1800-425-6151'' என்ற டோல் ப்ரீ எண்ணைத்தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். அப்போது, நீங்கள் பயணம் செய்த பேருந்து எண், டிக்கெட், கட்டண விவரம், எங்கிருந்து, எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் மீது தினமும் உரிய நடவடிக்கை எடுத்து, பயணிகளிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்பப்பெறலாம்'' என்று விளக்கமளித்தார்.

ஆனால், இந்தத் தீபாவளிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் டிக்கெட் விற்பனை செய்யும் சில மொபைல் ஆப்களில், சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான டிக்கெட்டுகளின் விலை மலைக்கவைக்கின்றன. சொந்த ஊருக்குச் செல்கிறீர்களா.. பேருந்துப் பயணத்தின் டிக்கெட் விலை அதிகமாக இருந்தால், இந்த எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவியுங்கள்...!