அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

‘‘ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ் என்று செய்தி பரவி வருகிறதே உண்மையா?” என்று கழுகாருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த நொடி நம்முன் அவர் ஆஜராகியிருந்தார். “உமக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் இருந்து தொடங்கும்” என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார்.

‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் புதிதல்ல. நாளுக்கு நாள் அது அதிகமாகிவருகிறது என்கிறார்கள். மனசுக்குள் இருந்த கசப்புகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன என்று சொல்கிறார்கள்.”

‘‘வரிசையாகச் சொல்லும்!”

‘‘சமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர்   ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள். அடுத்து, கொடைக்கானல் மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கும் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அதனால், மனதில் முள் குத்தியதுபோல துடித்துப் போனார் பன்னீர். முதல்வர் கொடைக்கானலில் இருந்த நேரத்தில், பன்னீர் தனது பெரியகுளம் வீட்டில்தான் இருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழாக்களில் கலந்துகொண்டுவிட்டு மதுரை விமான நிலையம் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு, தேனி-திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோட்டில் பூங்கொத்து கொடுத்தார் பன்னீர். இது ஏதோ பெரிய அளவிலான வழி அனுப்பு விழா என்று நினைத்துவிட வேண்டாம்.  பன்னீரின் மகன் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என காட்டுரோட்டில் எடப்பாடிக்காகக் காத்திருந்தோர் மொத்தம் 30 பேர்கூட இல்லை. அந்த எண்ணிக்கையைவிட எடப்பாடியுடன் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சொந்த மாவட்டத்தில் பன்னீரால் இவ்வளவுதான் ஆள் சேர்க்க முடியுமா?’ என்று மனதிற்குள் எடப்பாடி நினைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.!”

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

‘‘இத்தனை பேர் போதும் என்று பன்னீர் நினைத்திருக்கலாம்!”

‘‘நீலகிரி, கொடைக்கானல் மலர்க் கண்காட்சிகள் மட்டுமல்ல, இதுவரை ஏழு அரசு விழாக்களில் திட்டமிட்டு பன்னீரைப் புறக்கணித்துவிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘அரசு விழாக்களில் முதல்வருக்குத் தரும் முக்கியத்துவத்தைத் துணை முதல்வருக்குத் தர முடியாது. புரோட்டகால் படியும் இது முடியாது’ என்று எடப்பாடி  தரப்பினர் சொல்கிறார்களாம். அதனால், கட்சி நிகழ்ச்சிகள் தவிர, அரசு விழாக்களுக்குப் பன்னீரை அழைப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லியிருக்கிறார்களாம்!”

‘‘பன்னீர்தான் அளவுக்கு மீறி பவ்யமாக இருப்பாரே?”

‘‘அதுதான் அவருக்கு வினை ஆகிவருகிறது. அவரை பி.ஜே.பி எப்போது வேண்டுமானாலும் கையிலெடுத்து தனக்குத் தேவையான காரியத்தைச் செய்யும் என எடப்பாடி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். பன்னீரும் அளவுக்கு மீறி டெல்லி பி.ஜே.பி-யுடன் இணக்கம் காட்டி லாபம் அடையப் பார்க்கிறார். இந்தத் தகவல்கள் அனைத்தும் எடப்பாடியை யோசிக்க வைத்துள்ளன. இப்படி பன்னீரை முதல்வர் வட்டாரம் புறக்கணிப்பது பன்னீருக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது!”

‘‘அது என்ன?”

‘‘முன்புபோல் பன்னீர் ஆதரவாளர்களுக்கு நினைத்த காண்ட்ராக்ட் கிடைப்பது இல்லையாம். எடப்பாடி ஆட்கள், அனைத்தையும் அபகரித்து விடுகிறார்கள். இது பற்றி பன்னீரிடம் புகார் செய்தால், ‘பொறுமையா இருங்க’ என்று மட்டுமே பதில் சொல்கிறாராம். ‘எவ்வளவு காலம் பொறுமையா இருக்கிறது?’ என்று பெரியகுளம் ஆட்கள் சிலர் கேட்கிறார்கள். இந்தக் கோபத்தில் தான் எடப்பாடியை வழியனுப்ப அவர்கள் வரவில்லையாம். ‘மேலே மரியாதை குறைந்தால் கீழேயும் மரியாதை குறையும்’ என்பதை பன்னீர் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்திருக்கிறாராம்!”

“23-ம் தேதிக்கு பிறகு பிரேக்கிங்க் நியூஸ் என்று சொன்ன திவாகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?”

“சசிகலாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று திவாகரனுக்கு சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  நோட்டீஸ் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து மன்னார்குடி வந்த திவாகரன், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் சசிகலாவின் படத்தை  நீக்கிவிட்டு புதிய போர்டு வைத்தார். அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சசிகலா போட்டோவும் எடுக்கப்பட்டது. மீடியாக்களிடம், ‘23-ம் தேதிக்குப் பிறகு பெரிய பிரேக்கிங் நியூஸ் இருக்கு’ எனப் புதிர் போட்டார். அ.தி.மு.க-வில் இணையப்போவதாக அறிவிக்கப்போகிறார் என்கிறார்கள். அதைத்தான் பிரேக்கிங் என்று சொன்னாராம். அ.தி.மு.க-வில் பரபரப்பாகச் செயல்பட்டு தற்போது ஒதுங்கி இருக்கும் பல சீனியர்களைத் தொடர்புகொண்டு திவாகரன் பேசுகிறார். தவிர தினகரன் அணியில் இருப்பவர்களிடமும் செல்போன் மூலம் தானே நேரடியாகப் பேசியிருக்கிறார். முதற்கட்டமாக, திவாகரன் தன் ஆதரவாளர்களுடன் விரைவில் அ.தி.மு.க-வில் இணைய உள்ளாராம். மேலும், இரண்டு லட்சம் பேரைத் திரட்டி, பெரிய அளவில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம்  நடந்துகொண்டிருக்கிறதாம்.”

“ஓஹோ”

“இப்போது தினமும் மாலை நேரத்தில் மன்னார்குடியில் உள்ள அம்மா அலுவலகத்துக்கு வந்து எல்லோரிடமும் சகஜமாக திவாகரன் பேசுகிறார். ‘என் பக்கம் வந்துடுங்க உங்களுக்கு நல்ல பதவியும்  நல்ல வழியையும் நான் காட்டுகிறேன்’ என்கிறார். முன்பெல்லாம் திவாகரன் வீடு இருக்கும் கேட் பக்கம்கூடச்  செல்ல முடியாது. இப்போது கேட் எப்போதும் திறந்தே இருக்கிறது. யார் வந்தாலும் வீட்டின் நடுப்பகுதி வரை செல்ல அனுமதிக்கிறார்கள் இது திவாகரனிடையே ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.”     
    
‘‘ரஜினி முகாம் படு வேகமாகச் செயல்படுகிறதே?’’

‘‘ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணியினரை மே 20-ம் தேதி ரஜினி சந்தித்துப் பேசினார். அதற்கு முதல்நாள், மக்கள் மன்றத்தின் மூத்த பெண் உறுப்பினரான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 78 வயதான சாந்தா அம்மாளை நேரில் வரவழைத்துப் பேசினார் ரஜினி. இந்த வயதிலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டிவருகிறாராம் அந்தப் பெண்மணி. மறுநாள், மகளிர் அணியினரிடம் பேசிய ரஜினி, ‘பூத் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடக்கிறது. அதில் ஈடுபடும் மன்ற நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம். வேறு ஏதும் பாலிடிக்ஸ் பேசவில்லையாம். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டார்களாம். ரஜினியும் அவர்களுக்கு வாழ்த்து சொன்னாராம். மத்திய சென்னை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீவித்யா சீனிவாசன்தான் இந்தச் சந்திப்பில் அதிகம் பேசப்பட்டவர். இவருக்கு, ராகவேந்திரா மண்டபத்தில் செயல்படும் தலைமை அலுவலகத்தில் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவரின் கணவர் சீனிவாசன், மன்றத்தின் ஐ.டி பிரிவில் முக்கியப் பணியில் இருக்கிறாராம். மாவட்டங்களிலிருந்து வரும் மன்றங்களின் அன்றாடச் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கேட்டு, மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறாராம் ஸ்ரீவித்யா. அதேபோல், இங்கிருந்து தகவல்களை உடனுக்குடன் மன்றங்களுக்கும் சொல்கிறாராம். கிட்டதட்ட கால் சென்டர் மாதிரி மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடக்கிறதாம். அசுர வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒன்பது பேரை ரஜினி களம் இறக்கிவிட்டிருக்கிறாராம். அதனால், மன்றத்தினர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். இவர்களுடன்  இணைப்பில் எப்போதும் இருக்கிறாராம் ரஜினி. ஏதாவது பிரச்னையென்றால், ரஜினியே தனக்கு அறிமுகமானவர்களுக்கு போன் போட்டு, நடந்தது என்ன என்று கிராஸ் செக் செய்கிறாராம்.”

மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்

“72 வயதுக்காரர் ஒருவரை திடீரென மாநில அமைப்புச் செயலாளர் பதவியில் ரஜினி நியமித்திருக்கிறாரே?’

‘‘அவர், டாக்டர் இளவரசன். இவருக்கு இது மூன்றாவது பதவி. முதலில், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் உறுப்பினர். இப்போது, மூன்றாவது பதவி.  இவர், வடமாவட்ட அரசியல் வி.ஐ.பி-களுக்கு உறவினர் என்கிறார்கள். இவரிடம் ஏற்கெனவே உள்ள பதவிகளைத் தகுதியான வேறு நபர்களுக்கு மாற்றித்தரும்படி ரஜினி சொல்லிவிட்டாராம். மாற்றும் வரை, மூன்று குதிரைகளில் அவர் சவாரி செய்வாராம். ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதில் கறாராக இருக்கிறாராம் ரஜினி.”

“கர்நாடகா முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமி திருச்சி வந்ததில் ஏதும் விசேஷம் உண்டா?”

“முன்னாள் பிரதமர் தேவுகவுடா குடும்பத்துக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் பிடித்தமான ஒன்று. மே 20-ம் தேதி மாலை 6.10 மணியளவில் தனி விமானம் மூலம் குமாரசாமி திருச்சி வந்தார். அங்கிருந்து சங்கம் ஹோட்டலுக்குச் சென்றவர், அங்கு சில நிமிடங்கள் ஓய்வெடுத்தார். அடுத்து, கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகே வந்த குமாரசாமி அங்கிருந்து பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிக்கம்பத்தைத் தொட்டு வணங்கிவிட்டு மூலவரான ரங்கநாதரை பக்தியுடன் கும்பிட்டார். அடுத்து தாயார் சந்நிதி, தன்வந்திரி சுவாமி கோயில்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்தார். இனி, அடிக்கடி அவர் தமிழகம் வருவாராம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகாரிடம், ‘‘அவர் வருவார், காவிரி வருமா?’ என்றோம். சிரித்தபடி பறந்தார் கழுகார்.

படம்: வீ.சிவக்குமார்

Follow-up

‘தகவல் தர முடியாது!’

‘சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது எம்.எல்.ஏ-க்களுக்காக வாங்கப்படும் மினரல் வாட்டர் மற்றும் பயன்படுத்தப்படும் வாடகை ஜெனரேட்டர் குறித்த தகவல்களைத் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தரமாட்டோம்’ என சட்டமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. ஜூ.வி 1.4.2018 இதழில் ‘ஜெனரேட்டர் வாடகை ரூ.42 லட்சம். மினரல் வாட்டர் ரூ.5 லட்சம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். அதில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தார். ‘சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நாள்களில்கூட, ஜெனரேட்டருக்கு ஏன் வாடகை கொடுக்க வேண்டும்? இவ்வளவு தொகையைச் செலவு செய்யும் தமிழக அரசு, புதியதாக ஜெனரேட்டரையே வாங்கிவிடலாமே?’ என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில், அதே விவகாரத்தில், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மேல் முறையீடு செய்தது. அதில், ‘வாடகை ஜெனரேட்டர் மற்றும் மினரல் வாட்டர் எந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது? அதன் விதிமுறைகள் என்ன? இதுகுறித்த தகவல் தேவை’ எனக் கேட்டிருந்தார்கள். இதற்கு சட்டமன்றப் பொதுத் தகவல் அலுவலர், ‘பேரவைத் தலைவரின் ஆணைப்படியே கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களில் பேரவை உறுப்பினர்களுக்கு மினரல் வாட்டர் வழங்கப்படுகிறது. அது பேரவைத் தலைவரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இதை வெளியிட்டால் அவை உரிமையை பாதிக்கும் என்பதால், தகவல் ஏதும் அளிக்க இயலாது’ என்று பதில் தந்துள்ளார்.

இதுதொடர்பாக சிவ.இளங்கோவிடம் பேசியபோது, ‘‘ மக்கள் வரிப்பணத்தைச் செலவழிக்கிறபோது கேள்வி கேட்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. மக்களது வரிப்பணத்தின் செலவு விவரங்களைத் தரவேண்டியது அந்தத் துறை சார்ந்தவர்களின் கடமை. அரசின் தயாரிப்பான அம்மா குடிநீர் இருக்கும்போது, மினரல் வாட்டர் ஏன் வாங்குகிறார்கள்? சொந்தமாக ஜெனரேட்டர் வாங்காமல் ஏன் வாடகைக்கு எடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருப்பது சந்தேகம் எழுப்புகிறது’’ என்கிறார்.

- கே.புவனேஸ்வரி