அலசல்
Published:Updated:

கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!
பிரீமியம் ஸ்டோரி
News
கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

ஒன்று திரளும் கட்சிகள்!

ர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தனது தன்மானப் பிரச்னையாக நரேந்திர மோடி நினைத்தார். எந்தவொரு பிரதமரும் ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு இத்தனை நாள்கள் பிரசாரம் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்குக் கர்நாடகாவில் இருந்தார் மோடி. மத்திய அமைச்சரவையே கர்நாடகாவில்தான் இருந்தது. எடியூரப்பா - சித்தராமையா ஆகிய இருவருக்கு இடையிலான தேர்தல் என்பது மாறி, நரேந்திரமோடி - சித்தராமையா ஆகிய இருவருக்கான தேர்தலாக இது மாறியது. காங்கிரஸின் வாக்குகளை தேவகவுடா உடைப்பார், பி.ஜே.பி வெல்லும் என்பதுதான் மோடி போட்ட கணக்கு. ஆனால், 38 இடங்களை வென்று, தனது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை தேவகவுடாவும் குமாரசாமியும் உருவாக்கினார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருக்கும் என்றும் மோடி நினைத்தார்.

கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

ஆனால், 104 இடங்களில் வென்ற பி.ஜே.பி-யை விட, 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளது. இதனை மிக மோசமான சிக்னலாக பி.ஜே.பி தலைமை பார்க்கிறதாம். மக்களின் மனோபாவம் பி.ஜே.பி-க்கு எதிராக இருக்கிறது என மத்திய உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளதாம்.

வரும் டிசம்பர் மாதத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோன்ற தேர்தலை, ‘மினி பார்லிமென்ட் தேர்தல்’ என்பார்கள். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள்தான் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அப்படிச் சொல்வார்கள். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்குத் தயாராக வேண்டியதுதான் என்று டெல்லி பி.ஜே.பி மேலிடம் நினைத்ததாம். அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள நினைத்தார்களாம். ஆனால், கர்நாடகாவில் வாங்கிய வாக்குகள் மூலமாக இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த நிலைமைதான் எதிரொலிக்கும் என்று நினைத்த மோடி, மனம் மாறிவிட்டார் என்றும் சொல்கி றார்கள். மேலும், பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகள் அனைத்தும் மனரீதியாக ஒன்றுசேர்ந்திருக்கும் இந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதும் நல்லதல்ல என்றும் பி.ஜே.பி தலைமை நினைக்கிறதாம்.

தேசிய அளவில் சில வாரங்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளிடம் மோதல் போக்கு இருந்தது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா, இல்லையா என்பதே இந்த மோதலுக்குக் காரணம். காங்கிரஸைச் சேர்த்துக்கொண்டு சிலரும், காங்கிரஸ் இல்லாமல் சிலரும் கூட்டணிக்கான முயற்சிகளைச் செய்து வந்தார்கள். ‘இவர்களெல்லாம் எங்கே ஒன்றுசேரப் போகிறார்கள்?’ என்ற சந்தேகத்தைத்தான் இவர்களது வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுத்தின. இந்த நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்தது. எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கொடுக்க, ‘நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு’ என்று தேவகவுடாவும் அறிவித்துவிட்டார்.    பி.ஜே.பி-க்கு எதிரான முக்கியக் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர தேவகவுடா முயற்சி செய்துவருகிறார். இதனையும் பி.ஜே.பி எதிர்பார்க்கவில்லை. எனவே, கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவு என்பது அகில இந்தியத் திருப்பங்களை உருவாக்குவதாக அமைந்து விட்டது.

- கே.பாலசுப்பிரமணி

தென்னிந்தியாவில் பி.ஜே.பி-யால் வெற்றிபெற முடியாது!”

அமித் ஷாவின் கனவைக் கலைத்த டி.கே.சிவக்குமார்

பி.ஜே.பி-யின் தேசிய தலைவர் அமித் ஷாவின் கனவைக் கலைத்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார். அமித் ஷா, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் எனப் பெருந்தலைகள் களமிறங்கிய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைக் காத்து நின்று, பி.ஜே.பி தரப்பின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிய டி.கே.சிவக்குமாரைச் சந்தித்தோம்.

“கர்நாடகத் தேர்தல் முடிவுகளை மொத்த இந்தியாவும் எதிர்பார்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல போராட்டங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணிக்கு வெற்றி சாத்தியமாகியுள்ளது. அது எப்படி?”

“தேசம் முழுவதும் எதிர்பார்த்த தேர்தலாக கர்நாடக சட்டசபைத் தேர்தல் அமைந்துவிட்டது. காரணம், 2019-ல் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் கருதப்பட்டது. அதனால்தான், பி.ஜே.பி தனது மொத்த சக்தியையும் தேர்தல் களத்தில் பயன்படுத்தியது. இந்தத் தேர்தலில் காங்கிரஸையும், பிற மதச்சார்பற்ற கட்சிகளையும் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென பி.ஜே.பி நினைத்தது. ஆனால், பி.ஜே.பி-யின் செயல்திட்டம் செயலிழந்துவிட்டது.”

கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

“காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள்தான் முக்கியக் காரணம் என்று சொல்கிறார்களே?”

“நான், முதலில் மாணவர் காங்கிரஸிலும், பிறகு இளைஞர் காங்கிரஸிலும் சேர்ந்து பணியாற்றினேன். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற ஆரம்பித்தேன். கட்சி மேலிடம்  எனக்குக் கொடுத்த அனைத்துப் பணிகளையும் கட்சித் தலைமையின் உள்ளுணர்வுக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நிறைவேற்றிவந்துள்ளேன். கட்சியின் மாநிலத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, முக்கியப் பணிகளை முடித்துள்ளேன். சவாலான பல பணிகளை என்னிடம் கட்சி கொடுத்தது. அந்தச் சவால்களைக் கட்சிக்கு நன்மைகளாக மாற்றியமைத்துக் கொடுத்துள்ளேன். அதற்காக, போதுமான அளவுக்கு அங்கீகாரத்தைக் கட்சி எனக்கு அளித்துள்ளது.”

“2004-ல் பி.ஜே.பி - ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி அமைத்து, 20 மாதங்களில் ஆட்சியை இழந்தது. இந்த முறை, காங்கிரஸுடன் ஜே.டி.எஸ் இணைந்துள்ளது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா?”

“பி.ஜே.பி - ஜே.டி.எஸ் கூட்டணியானது, உள்கட்சிப்பிரச்னைகளால் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அப்போது என்ன நடந்தது என்பது பற்றி, நான் கூற விரும்பவில்லை. இந்த முறை அதுபோல நடக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் -  ஜே.டி.எஸ் கூட்டணியைக் ​கர்நாடக மக்கள் ஆதரிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களுக்குச் சேவை செய்வதற்கும், பிரிவினைவாத பி.ஜே.பி-யை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒன்றிணைந்துள்ளோம். காங்கிரஸ், ஜே.டி.எஸ் கட்சிகளுக்கு 56 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆட்சி செய்வதில் எங்களுக்குள் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.”

“மக்களுக்கான நலத்திட்டங்கள் பற்றி சட்டமன்றத்தில் எடியூரப்பா மிகவும் உருக்கமாகப் பேசினார். அவர் குறிப்பிட்ட திட்டங்களை உங்கள் கூட்டணி ஆட்சி நிறைவேற்றுமா?”

“கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீண்டும் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து, திட்டங்களின் பலனை உண்மையான பயனாளிகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில், எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

“பி.ஜே.பி-யால் தென்னிந்தியாவில் வெற்றிபெற முடியாததற்கு என்ன காரணம்?”

“எத்தனை காலத்துக்கு வகுப்புவாதக் கொள்கைகளையும், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளையும் பி.ஜே.பி செய்து வருகிறதோ, அதுவரைக்கும் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா என எந்தவொரு தென்னிந்திய மாநிலத்திலும் பி.ஜே.பி-யால் வெற்றிபெறுவது கடினம். தென்னிந்திய மக்கள் முதிர்ச்சியான, அறிவுசார்ந்த புத்திசாலிகள். வகுப்புவாதக் கொள்கையைக் கொண்ட ஒரு கட்சியைத் தென்னிந்திய மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.”

- எம்.வடிவேல்
படம்: க.மணிவண்ணன்