அலசல்
Published:Updated:

வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?

வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?

வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?

ர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் கன்னட சலுவாளி வாட்டாள் பக்‌ஷாவின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். எனவே, அவர் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார். எனினும், தேர்தலில் அவர் 5,977 வாக்குகள் மட்டுமே பெற்று படு தோல்வி அடைந்தார். டெபாசிட்டும் இழந்தார். இதே தொகுதியில் இதற்கு முன்பு வாட்டாள் நாகராஜ் மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறார். வாட்டாள் நாகராஜ் தோற்ற செய்தி வெளியானதிலிருந்தே சமூக ஊடகங்களில் தமிழர்கள் மத்தியில் பெரும் உற்சாகக் கொண்டாட்டங்கள் எழுந்திருக் கின்றன. காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் வாட்டாள் நாகராஜை கன்னட மக்களே விரும்பவில்லை என்ற கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?

ஆனால், யதார்த்தம் மிகவும் கசப்பானது. காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாட்டாள் நாகராஜை விடவும் காங்கிரஸ், பி.ஜே.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அதிதீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் அனைத்துத் தலைவர்களும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றாகக் கரம்கோத்து களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது தீவிரத்தன்மையோடு ஒப்பிடும்போது வாட்டாள் நாகராஜ் ஒரு பொருட்டே அல்ல.

இது ஒருபுறம் இருக்க கர்நாடகாவில் பரவலாகப் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர்களும் வெற்றிபெறவில்லை. இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும், சுயேச்சைகளாகவும் 30-க்கும் அதிகமான தமிழர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இவர்களில் பெங்களூருவின் சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட சம்பத் ராஜ் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் தோற்றுவிட்டார். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழும் கோலார் தங்கவயல் தொகுதியில் நின்ற 16 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். பக்தவத்சலம் என்ற தமிழரை மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிறுத்தியது. அவருக்கு டெபாசிட்கூட கிடைக்கவில்லை. இந்தத் தொகுதியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் கன்னடர்களே! கர்நாடகாவில் அ.தி.மு.க நிறுத்திய மூன்று வேட்பாளர்களும் சுயேச்சைகளைவிடக் குறைவாக ஓட்டுக்களை வாங்கிப் பரிதாபமாகத் தோற்றனர்.

வாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா?

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகள் கர்நாடகாவில் நிறைய உண்டு. ஆனால், அங்கெல்லாம் தமிழர்கள் கட்சி சார்ந்தே வாக்களிக்கிறார்கள். ‘யார் தமிழர்’ என்று பார்த்து வாக்களிப்பதில்லை. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் ராஜன், ‘‘வாட்டாள் நாகராஜைவிட தமிழர்களுக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் நடத்தக்கூடிய கன்னட ரக்‌ஷன வேதிகா போன்ற அமைப்புகள் இப்போது வந்துவிட்டன. அதனால்தான் வாட்டாள் நாகராஜ் தோற்றார். தமிழர்களின் திருமண விழாக்கள்ல தமிழ் சினிமா பாட்டு போட்டாலோ, கோயில் மற்றும் தேவாலயங்கள்ல தமிழ்ல வழிபாடு நடத்தினாலோ, தமிழ்ப் படங்கள் வெளியானாலோ, கன்னட ரக்‌ஷன வேதிகா ஆட்கள் வந்து பிரச்னை செய்வாங்க. காங்கிரஸும் ம.ஜ.த-வும் ஒரு தொகுதியிலாவது தமிழர்களை நிறுத்துச்சு. ஆனால், பி.ஜே.பி அதையும் செய்யவில்லை. மாநகராட்சி தேர்தல்ல மட்டும் அரசியல், சமூக, இன, மொழி கண்ணோட்டம் இல்லாத தமிழர்கள் நாலஞ்சு பேரை ஜெயிக்க வச்சாங்க. சட்டப்பேரவையில் பல ஆண்டுகளா தமிழர்கள் காலடி எடுத்து வைக்க முடியலை’’ என்கிறார் ஏக்கத்தோடு. 

- கு.ராமகிருஷ்ணன்