Published:Updated:

`நடிகர் விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்!’ - தினகரன் வியூகம் சொல்லும் அபிமானி

"`இன்னும் இரண்டு வருடங்களுக்கு சும்மா இருப்பதைவிட, தேர்தலையே சந்திக்கலாம்' என்று முடிவெடுத்தோம்" என்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

`நடிகர் விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்!’ - தினகரன் வியூகம் சொல்லும் அபிமானி
`நடிகர் விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்!’ - தினகரன் வியூகம் சொல்லும் அபிமானி

`எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை' என அறிவித்துவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்த வழக்கில் சபாநாயகர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தினகரனின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

`ஏன் இப்படியொரு திடீர் முடிவு?' எனத் தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். 

``நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி, 90 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 89-வது நாளில்கூட முறையீடு செய்யலாம். அதுவரையில் தேர்தல் ஆணையம் ஒன்றும் செய்ய முடியாது. இடைத்தேர்தலை அறிவிக்க முடியாது. அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். தொகுதிவாரியாகப் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறீர்கள். தேர்தல் வரும் என்றுதானே போட்டிருக்கிறீர்கள். அதற்காக இதுவரையில் என்னென்ன வேலைகளைத் தொடங்கியிருக்கிறீர்கள்? அவர்களால் பதில் சொல்ல முடியாது. இவர்கள் நோக்கமே, நாங்கள் அப்பீலுக்குப் போக வேண்டும் என்பதுதான். எங்களுக்கு ஸ்டே கிடைத்தால், `வழக்கு முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது' என இவர்கள் உத்தரவு வாங்குவார்கள். அப்படியோர் உத்தரவு வந்தால், நாங்கள் எம்.எல்.ஏ-வாக தொடரலாம். ஆனால், வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இழுத்துக்கொண்டே போகும். இவர்களது ஆட்சி தொடரும். இதுதான் அவர்களுடைய திட்டம். இது தொடர்பாக, நாங்களும் கூடி ஆலோசித்தோம். `இன்னும் இரண்டு வருடங்களுக்கு சும்மா இருப்பதைவிட, தேர்தலையே சந்திக்கலாம்' என்று முடிவெடுத்தோம்." 

தீர்ப்பு வந்த அன்று மதுரையில் தினகரன் கூட்டிய கூட்டத்தில், மேல்முறையீடு பற்றித்தானே பேசப்பட்டது? 

``அன்று அப்படித்தான் முடிவெடுத்தோம். பிறகு யோசிக்கும்போது அது தவறாகத் தோன்றியது. இந்த அரசு உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய அரசாக இருந்தால், 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வைக்கட்டும். காலக்கெடு 30 நாளோ 90 நாளோ அது முடிந்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். தலைமைச் செயலாளரை வைத்து மறைமுகமாகக் கடிதம் எழுதுவது, வானிலை இயக்குநரை அழைத்து ரெட் அலர்ட் கொடுக்க வைப்பது, நிர்வாகிகளோடு கூட்டம் நடத்தி, `நான் தேர்தலுக்குத் தயார்' என்று சொல்வது என மூன்று வேடம் போடக் கூடாது. ஒருமுறை நடிகர் விஜய் சொன்னார், `முதல்வராக வருகிறவர் நடிக்கக் கூடாது' என்று. அதை எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சொல்லியிருக்கிறார்." 

18 பேரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையைக் காலி செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனாலும், நீங்கள் எல்லாம் அ.தி.மு.க-வுக்குள் வர வேண்டும் என்கிறாரே எடப்பாடி பழனிசாமி? 
 
``இவர்கள் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம், `நீர் அடித்து நீர் விலகாது' என்கிறீர்கள். இன்னொரு பக்கம் 18 எம்.எம்.ஏ-க்கள் உட்பட அனைவரும் எங்களிடம் வாருங்கள் என்கிறீர்கள். எங்களுடைய சட்டமன்ற விடுதி அறைகளுக்குச் சீல் வைக்கிறீர்கள். உங்களை நாங்கள் எப்படி நம்புவது? உண்மையிலேயே சமசரத்துக்கு எங்களை அழைப்பதாக இருந்தால், விடுதி அறைகளை மூடியிருக்கக் கூடாது. சபாநாயகர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் ஏன் கேவியட் மனுவைப் போடுகிறார்கள்?’’ 

அப்படியானால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம்தான் என்ன? 

``இவர்களுக்குத் தேர்தல் வரக் கூடாது. அவ்வளவுதான். நாங்கள் அப்பீலுக்குப் போய்விட்டால், தேர்தல் வராது. அப்படியே தேர்தல் வந்தாலும் திருப்பரங்குன்றத்துக்கும் திருவாரூருக்கு மட்டுமே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற 18 தொகுதிகளுக்கு உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் வருவதற்கே வாய்ப்பு அதிகம்." 

இதனால் 18 தொகுதிகளிலும் பெரிதாக எந்தப் பணிகளும் நடக்கவில்லையே? 

``இதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. இவர் ஒன்றும் மக்களால் உருவான முதல்வர் கிடையாதே. சின்னம்மாவால் பதவியில் அமர்த்தப்பட்ட முதல்வர் இவர். இடைத்தேர்தல் வந்தால் மக்கள் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும்."