அலசல்
Published:Updated:

வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!

வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!

வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!

‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில். இந்தியாவில் அதிக வரி வருவாயை மத்திய அரசுக்குக் கொடுக்கும் டாப் ஐந்து மாநிலங்களில் தமிழகம் ஒன்று. ஆனால், ‘‘மழை, புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்க் காலங்களின்போது தமிழகத்துக்கு நிவாரண உதவி அளிப்பதில் மத்திய அரசு வஞ்சனை செய்கிறது’’ என்ற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.

தமிழகத்திலிருந்து மத்திய அரசு பெறும் வருவாய் எவ்வளவு என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களாகப் பெற்றுள்ளனர். அதன்படி, உற்பத்தி வரி, சுங்க வரி (ஏற்றுமதி), சுங்கவரி (இறக்குமதி), சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வரி இவற்றின் மூலம் மட்டும் 2015-2016-ம் நிதியாண்டில் தமிழகம் சார்பாக ரூபாய் 1,32,683 கோடி வரிப்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.

வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!

தமிழகம் இயற்கைச் சீற்றங்களால் அவதிப்பட்டபோது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் நிவாரணத்தொகை கேட்கப் பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தை உருக்குலைத்த பெருவெள்ளத்தின்போது வெள்ள நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் தமிழகம் கேட்டது ரூபாய் 25,912 கோடி. 2016-ம் ஆண்டு வறட்சிக்காகத் தமிழகம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 39,565 கோடி. அதே 2016-ம் ஆண்டு தாக்கிய வர்தா புயல் நிவாரணத் தொகையாகத் தமிழகம் கேட்டது ரூபாய் 22,573 கோடி. 2017-ம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட ஓகி புயல் நிவாரணத் தொகையாகத் தமிழகம் கேட்டது ரூபாய் 5,255 கோடி.

நாம் இவ்வளவு கேட்டோம். மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு? மாநிலங்களவையில் மத்திய உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் நமக்குக் கிடைத்தன. மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதிக்காக மத்திய அரசின் பங்காகத் தமிழகத்துக்கு 2014-15-ல் 133.795 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது, 2015-16-ல் 643.045 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. (இதில் முந்தைய ஆண்டின் நிலுவைத் தொகையும் அடக்கம்.) 2016-17-ல் 534.75 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. 2017-18-ல் 561 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. மத்தியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழகத்துக்கு 2014-15-ல் ஒரு ரூபாய்கூட கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2015-16-ல் 1,000 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 2016-17-ல் 1,813.66 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. 2017-18-ல் 301.65 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. (2017 டிசம்பர் மாதம் வரை)

2015-16-ம் நிதியாண்டில் வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம்தான். தமிழகத்தில் 470 பேர் பலியானார்கள். 12,030 கால்நடைகள் பலியாயின. 4,75,762 வீடுகளும், 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களும் பாதிப்புக் குள்ளாகின. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டும், மத்திய அரசு தந்த நிவாரணம் மிகமிகக் குறைவு.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுபற்றி பல தகவல்களைப் பெற்றவர், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி. அவரிடம் பேசினோம். “ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்படும்போது, நாம் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்குவதே கிடையாது. ஆனால், நம்மிடமிருந்து அதிக அளவிலான வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். உற்பத்தி வரி, சுங்க வரி (ஏற்றுமதி), சுங்கவரி (இறக்குமதி), சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வரி இவற்றின் மூலம் ஆண்டுக்குள் சுமாராக ரூபாய் 1.5 லட்சம் கோடி மத்திய அரசுக்குப் போகிறது. இதுமட்டுமல்லாமல் என்.எல்.சி., தென்னக ரயில்வே, சேலம் உருக்காலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையச் சேவைகள் போன்றவற்றின் மூலமாகவும் வரி போகிறது.

வரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்!

ஆனால், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நமக்கு மத்திய அரசு கைகொடுப்பதில்லை. 2013-ம் ஆண்டு உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்பதற்கு முன்பே ரூபாய் 1,000 கோடியை உடனடி நிவாரணத்தொகையாக வழங்கியது மத்திய அரசு. உத்தரப்பிரதேசத்தில் ஏற்்பட்ட வெள்ளத்தின்போது நம்மைவிட பல மடங்கு பாதிப்பு குறைவு. ஆனால், மத்திய அரசு கொடுத்த உடனடி நிவாரணத் தொகை ரூபாய் 2,875 கோடி. இதேபோல மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வாரி வாரித் தருகிறது. ஆனால், தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது. ஆனால், நாம் மொத்த பணத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு நமது உரிமைக்காகவும் உதவிக்காகவும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறோம்’’ என்றார்.

இது குறித்து பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனிடம் கேட்டோம். “மத்திய அரசுக்கு அதிக வரி கொடுக்கும் மாநிலங்கள், அதிக நிதியைப் பெறலாம் என்பது போன்று அரசியல் சட்டத்தில் ஏதும் வழிவகைகள் இல்லை. வரிவசூல் என்பது வேறாகவும், நிவாரண நிதி அளிப்பது வேறாகவும்தான் இருக்கிறது. நிவாரண நிதியைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பை மத்தியக் குழுவை அனுப்பி ஆய்வுசெய்து, அதன் பின்னர்தான் அளிக்கிறார்கள். அதிக வரி கொடுக்கிறோம் என்பதால் கூடுதலாகக் கொடுங்கள் என்று கோரிக்கை விடுப்பதற்கும் வழியில்லை” என்றார். 

- ஜெ.அன்பரசன்
படம்: வேங்கடராஜ்