என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம் - மேதைகளும் நந்திகளும்

தலையங்கம் - மேதைகளும் நந்திகளும்

தலையங்கம் - மேதைகளும் நந்திகளும்
தலையங்கம் - மேதைகளும் நந்திகளும்

தேபோன்றதொரு டிசம்பர் 22 வியாழக் கிழமையில்தான் 124 வருடங்களுக்கு முன் ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தார். பாரத பூமிக்கே உரிய அறிவுச் சுடரொளியின் அழிக்க முடியாத ஓர் உதாரணரான அவரை, மிகச் சிறந்த கணித மேதைகள் வரிசையில் வைத்து உலகமே கொண்டாடுகிறது.

கும்பகோணம் புடவைக் கடை குமாஸ்தாவின் ஏழை மகனாகப் பிறந்த ராமானுஜன், அடிப்படைக் கல்வி பெறுவதற்கே தட்டுத்தடுமாறியவர். ஓர் எழுத்தர் வேலையைப் பெறுவதற்கு ஊர்ஊராக அலைந்து திரிந்தவர். சமூகத்தாலும் அரசாங்கத்தாலும் எவ்வித உதவியும் கிடைக்காதபோதிலும், முட்டி மோதிப் போராடி, இந்த தேசத்தின் அறிவுச் செழுமையை உலக அரங்கத்துக்குக் கொண்டுசென்ற ராமானுஜன் - எத்தனையோ இளைஞர்களின் ஆதர்ச நாயகன்.

இன்றைக்கும் எத்தனையோ ராமானுஜன்கள் கனவுகளைச் சுமந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகளுக்குத் தடையாக நமது கல்வித் துறைக்குளேயே இன்று எத்தனை எத்தனை நந்திகள்? தனிப்பட்ட முயற்சியால் எத்தனையோ மாணவர்கள் போராடித் தங்கள் திறமைகளை நிரூபித்து வரும் இந்தப் பொன்னான காலகட்டத்திலும் தமிழகத்தின் முக்கியமான நான்கு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நிரப்பக்கூட அரசுக்கு நேரம் இல்லை என்பதே இதற்கொரு வேதனையான உதாரணம்!  

'முக்கியமான பதவி இது. நேர்மையானவர்கள்தான் இதில் அமர வேண்டும். அதற்கு ஏற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தான் இந்தத் தாமதம்!’ என்று கல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கொடுத்திருக்கும் விளக்கம் கூனிக்குறுகவைக்கிறது.

துணைவேந்தர் பதவி என்பது பணம் காய்க்கும் மரம் என்ற ஓர் அபாயகரமான நிலைமை உருவாகிவருகிறது. 'பணம் கொடுத்துத்தான் இந்தப் பதவியை வாங்கினேன்’ என்று அண்மையில் பதவி நீக்கம்செய்யப்பட்ட ஒரு துணைவேந்தர் பட்டவர்த்தனமாக உண்மையைப் போட்டு உடைத்தது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆக, பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணம், பேரங்கள் படியாமல் இருப்பதுதான் என்று ஏன் சொல்லக் கூடாது? இதுதான் உண்மை என்றால், வளரும் ராமானுஜன்களாக... வாய்ப்புக்குக் காத்திருக்கும் அத்தனை தமிழ் இளைஞர்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகம் அல்லவா இது?