Published:Updated:

அண்ணாவுடன் இந்திராகாந்தி?!

பூ.கொ.சரவணன்படங்கள் : சு.குமரேசன், சொ.பாலசுப்பிரமணியன்

##~##

மிழகத் தலைநகருக்கு வந்த அண்ணா ஹஜாரேயை  வித்தியாசமான அனுபவங்களுடன் அனுப்பிவைத்து இருக்கிறது சென்னை!

ஆச்சர்யமாகக் கறுப்புக் கொடி வரவேற்புக்குப் பிறகு, அண்ணா நேராகச் சென்ற இடம் 'ஃபோர் ஃப்ரேம்ஸ்’ திரையரங்கம். சுமார் 40 வருடங்களுக்குப் பின் அண்ணா பார்த்த சினிமா 'முதல்வர் மகாத்மா’! அவருக்காக 'வெல்கம் பேக் காந்தி’ என்று இந்தியில் மொழிமாற்றம் செய்து இருந்தார்கள். காந்தி முதல்வராகி மாநிலத்தைச் சீர்திருத்தும் அந்தப் படத்தை முழுமையாகப் பார்க்க அண்ணாவுக்கு நேரம் இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாலை. சென்னை பச்சையப்பன் கல்லூரித் திடல் எங்கும் தேசியக் கொடிகளும் காந்தி குல்லாக்களும் நிறைந்து இருந்தன. தேச பக்திப் பாடல்களின் பின்னணி இசை. மேடையில், 'பாரத் மாதா கீ ஜே’, 'வந்தே மாதரம்’ முழக்கங்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் 'ரங் தே பசந்தி’, 'வந்தே மாதரம்’ எனப் பாடல்கள் அதிர... கூட்டத்துக்கு வந்திருந்த இளைஞர்கள் பலரும் ஒருகட்டத்தில் தேசியக் கொடியோடு எழுந்து ஆட ஆரம்பித்தார்கள்.

அண்ணாவுடன் இந்திராகாந்தி?!

கலை நிகழ்ச்சிகள் முடிந்து கூட்டம் தொடங்கியதும் சந்தோஷ் ஹெக்டேவும் கிரண் பேடியும் ஆங்கிலத்தில் பேசினார்கள். சந்தோஷ் ஹெக்டே பேசுகையில், ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்திக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள வெறும் இரண்டு நிமிஷங்களில் நம் நாட்டு நாடாளுமன்றத்தால் முடிகிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான ஒரு மசோதாவை நிறைவேற்ற 42 வருடங்கள் ஆகியும் முடியவில்லை. இதை எதிர்த்துப் போராடினால், நாடாளுமன்றத்துக்குச் சவால்விடுகிறோம் என்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரதிநிதி களாகிய நீங்கள் அவர்களுடைய சேவகர்கள். எஜமானர்கள் சொல்கிறோம். இந்த முன்வரைவை எடுத்துச் செல்லுங்கள், சட்டமாக்குங்கள்!'' என்றார்.

அண்ணாவுடன் இந்திராகாந்தி?!

கிரண் பேடி கிட்டத்தட்ட அரை அரசியல்வாதியாக இருந்தார். பேச்சிலும் சரி, செயல்பாட்டிலும் சரி, அப்படி ஒரு வேகம். ''நூறு ரூபாய், இருநூறு ரூபாய் திருடினால், இந்த நாட்டில் அவர்களைத் திருடர்கள் என்கிறோம். அவர்களைச் சிறையில் வைக்கிறோம். அதுவே நூறு கோடி, இருநூறு கோடி திருடினால், அவர்களை'' என்று அவர் நிறுத்த... ''எம்.பி-க்கள் என்கிறோம். நாடாளுமன்றத்தில் வைக்கிறோம்!'' என்றது கூட்டம். ''இந்த நாடு ஊழல் ஆனதற்கு நாம் ஒவ்வொருவருமே காரணம். எப்படி என்று கேட்கிறீர்களா? ஊழலுக்கு எதிராக இவ்வளவு காலமாக மௌனமாக இருந்தோம் அல்லவா? அந்த மௌனம்தான் நம்முடைய பெரிய குற்றம்!'' என்றபோது கூட்டம் சிலிர்த்தது!

அண்ணா 'வணக்கம்’ என்று தமிழில் சொல்லி விட்டு இந்தியில் பேசத் தொடங்கினார். மேடை யைச் சூழ்ந்து நின்ற அவருடைய குழுவினர் அவ்வப்போது கை தட்டிக்கொண்டு இருந்தார்கள். அண்ணாவின் இந்தி உரை புரியாமல் ஒருகட்டத்தில், கூட்டம் கொந்தளிக்கத் துவங்கியது. நிலைமை எல்லை மீறியபோது, அண்ணாவின் பேச்சு நிறுத்தப்பட்டது. இதற்குப் பின் நடிகர் கிட்டி மொழிபெயர்ப்பில் இறங்க, கூட்டம் அமைதியானது.  வழக்கம்போல தன்னுடைய வாழ்க்கை, பிரம்மச்சரியம், ராலேகான் சித்தி, சிறை அனுபவங்களைச் சொல்லி, ''டிசம்பர் 27-ம் தேதிக்குள் அரசு லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில், அடுத்தகட்டப் போராட்டத்தைத் தொடங்குவேன். சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயாராகுங்கள். அட தம்பிகளா, சிறை என்றால் பயப்படாதீர்கள். மக்களுக்காகச்

அண்ணாவுடன் இந்திராகாந்தி?!

சிறைக்குச் செல்வது ஓர் ஆபரணம். இந்த ஹஜாரேவுக்கு ஒரு தட்டும் போர்வையும்தான் சொத்து. ஆனால், இன்றைக்கு ஒரு நாடே எனக்குச் சொந்தம். எப்படி? எவ்வளவோ காலம் உங்கள் ஒருவரின் நலனுக்காக ஏராளமான கஷ்டங்களோடு வாழ்ந்துவிட்டீர்கள். கொஞ்ச காலம் மக்களுக்காக வாழ்ந்து பாருங்களேன்!'' என்று சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்து அமர்ந்தார் அண்ணா.

கூட்டத்துக்கு முன்னும் சரி, பின்னும் சரி, கூட்டத்தையும் அண்ணாவையும் முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார் கிரண் பேடி.  கூட்டத்துக்குப் பின் தனியே ஒரு  இடத்தில் அண்ணாவின் நல விரும்பிகள் கூட்டம் நடைபெற்றது. பெரும்பாலும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்திலும், கிரண் பேடியின் ஆதிக்கமே!

கூட்டம் முடித்து வந்த ஒரு பெண் நிருபர் கேட்டார், ''கிரண் பேடிக்கு இந்திரா காந்தி மாதிரி ஆகுற கனவு இருக்குமோ சார்?''