Published:Updated:

குட் பை சசிகலா! - ஜெயலலிதாவின் சொல்ல முடியாத கதை

குட் பை சசிகலா
News
குட் பை சசிகலா

ப.திருமாவேலன் - படம் : சு.குமரேசன், ஓவியம் : ஹாசிப்கான்

##~##

ணை பிரியாத நட்பில் இடி விழுந்துஇருக்கிறது!

 சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியதன் மூலமாக 'உடன்பிறவா சகோதரி’யைத் தனது நட்பு வட்டத்தில் இருந்தே ஜெயலலிதா விலக்கிவிட்டார். அரசியலை, போயஸ் கார்டனை, ஜெயலலிதாவை, சசிகலாவை முழுமை யாக அறிந்தவர்களுக்குத் தெரியும் இது எவ்வளவு சிக்கலான காரியம் என்று!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல ஆண்டுகளுக்கு முன் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், 'சசிகலா மட்டும் மொகலாய சாம்ராஜ்யத்தில் இருந்திருந்தால், பிரிட்டிஷ் படைகள் இந்தியாவின் எல்லைக்கு உள்ளேயே வந்திருக்க முடியாது. அத்தகைய காவல் அரணை அமைக்கக்கூடிய தகுதியும் திறமையும் பெற்றவர் சசிகலா!’ என்று எழுதியிருந்தார். அந்த வார்த்தைகளை அழகியலுக்காக அவர் எழுதவில்லை. நிதர்சன யதார்த்தம் அதுதான்! கார்டனுக்குள் ஜெயலலிதாவுக்கு அடுத்து எல்லாமுமாக மாறினார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அடுத்து என்பதைத் தாண்டி, 'அதற்கும் மேலே’ என்று போக முயற்சித்தபோதுதான் சிக்கல் வந்தது சசிக்கு!

குட் பை சசிகலா! - ஜெயலலிதாவின் சொல்ல முடியாத கதை

கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்னையில் இருந்த ஒரு சில அமைச்சர்களை மட்டும் அழைத்துப் பேசிய முதலமைச்சர், ''யாரைக் கேட்டு நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? 'சசிகலா சொன்னதைச் செய்யுங்கள்’ என்று நான் எப்போதாவது உங்களிடம் சொல்லி இருக்கிறேனா?'' என்று கேட்டார். அப்போது எந்த அமைச்சராலும் பதில் சொல்ல முடியவில்லை. சசிகலா பெயரைச் சொல்லி வளையவந்த அவரது உறவினர் ஒருவரை அழைத்துக் கோபப்பட்ட முதல்வர், ''எனக்குத் தெரியாமல்... நான் இல்லாமல்... நீங்களே ஒரு பேர்லல் கவர்மென்ட் நடத்துகிறீர்களா?'' என்று சீறினார். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர் விசாரிக்க ஆரம்பிக்க... புற்றீசல் போல ஏராளமான பூதங்கள் ஆட்சியை மையமாகவைத்துக் கிளம்பின. இதில் பல காரியங்கள் 'அம்மா சொன்னாங்க... அம்மா சொன்னாங்க’ என்று செய்யப்பட்டு இருந்ததுதான் ஜெயலலிதாவின் கோபத்துக்கு முக்கியமான காரணம். ''தி.மு.க-காரங்க தப்பு பண்றாங்கனு சொல்லி நான் நடவடிக்கை எடுத்துட்டு இருந்தா, அதே காரியத்தை நீங்களும் பண்றீங்களா? அதுவும் என் பேரைச் சொல்லியே செய்றீங்களா?'' என்று கேட்டார். அத்தனை கரங்களும் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்தவர்... சசிகலா. ''சின்னம்மா சொன்னதுனாலதான் செய்தோம்!'' என்று மந்திரிகள் சொன்னார்கள். அதிகாரிகள் சொன்னார்கள். சின்னம்மாவின் சொந்தங்கள் சொன்னார்கள். நட்பு முக்கியமா, நாடு முக்கியமா என்று யோசித்த ஜெயலலிதா, நட்பைப் பலி கொடுத்தார். ''நல்ல வேளை அம்மாவுக்கு இந்த உண்மைகள் ஆறு மாதத்தில் தெரியவந்தன. மூன்று வருடங்கள் கழித்துத் தெரியவந்திருந்தால் அதற்குள் எத்தனை கெட்டது நடந்துஇருக்கும்?'' என்று நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்!

ஜெ. ஆட்சி அமைந்த 100-வது நாள் விழா கொண்டாடியதையட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதில், 'அந்த ஐந்து பேர் பெயர்களை இந்த இடத்தில் சொல்லப்போவது இல்லை. கோட்டை யில் போயஸ் கார்டனில்... குறிப்பாக முதல்வரிடத்தில் செல்வாக்கு படைத்தவர்களாகவும், 'நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்பார், இங்கே நாங்கள் வைத்தது தான் சட்டம்’ என்றும் அந்த மனிதர்கள்... அமைச்சர்களிடம் அதிகாரிகளிடம் நடந்துகொள்கிறார்கள். இவர்களை சூப்பர் சுப்ரீம்களாக அங்கீகரிப்பது இந்த ஆட்சிக்கு ஆபத்து!’ என்று எழுதி இருந்தோம். அதன் பிறகு, இத்தகைய நபர்களை அழைத்து முதல்வர் கடுமையான அறிவுரைகளைக் கூறி அனுப்பினார். 'நான் உங்களை உதவி செய்வதற்குத்தான் வைத்துள்ளேன். அதிகாரம் செய்வதற்கு அல்ல’ என்று அப்போது சொன்னார். அவர்கள் அனைவரும் சசிகலா வின் செல்வாக்கைப் பெற்றவர்களாக இருந்ததுதான் அவர்களது பலம். ஒரு வாரம் அமைதியாக இருந்தவர்கள், மீண்டும் தங்களது லீலைகளைக் காட்ட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்தத் தகவல்கள் அரைகுறையாகவாவது போய்ச் சேர்ந்ததுதான் உளவுத் துறை மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராமானுஜத்தின் சாமர்த்தியம். இந்தத் தகவல்களை வைத்து சசிகலாவிடம் ஜெயலலிதா கேட்பார். கோபப்படுவார். பிரச்னை சரியாகிவிடும். ஏனென்றால், அவர்கள் இருவருக்குமான அதீதமான நட்பு, பிணக்கம் உள்ள நீண்ட கால நட்புதான். இதற்குள் நுழைந்து கொம்பு சீவிவிட்டவர்கள் காணாமல் போனதாகத்தான் செய்திகள் உண்டே தவிர, நிரந்தரப் பிரிவு இதுவரை இல்லை!

ஒரே ஒரு முறைதான் சில மாதங்கள் வரை பிரிந்து இருந்தார்கள். 1996 சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய படுதோல்வியை ஜெயலலிதா அடைந்தார். அவரே தோற்றுப்போனார். தோல்விக்கு சசிகலாவும் வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்துக்கொண்ட வி.என். சுதாகரனும்தான் காரணம் என்பதால், 'இனி எனக்கும் சசிகலா குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!’ என்று பகிரங்கமாக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'சில தவறான மனிதர்களின் வழிகாட்டுதல்படி சசிகலா எனக்கு எதிராகச் செயல்படுகிறார்!’ என்றும் குற்றம்சாட்டினார். கால ஓட்டத்தில் எதற்காகச் சேர்ந்தார்கள் என்றே சொல்ல முடியாத நிலையில் இருவரும் மீண்டும் இணைந்தனர். ஆனாலும், சசிகலாவின் கணவர் நடராஜனை மட்டும் கார்டனுக்குள் அனுமதிக்காமல் வைத்திருந்தார் ஜெ.

குட் பை சசிகலா! - ஜெயலலிதாவின் சொல்ல முடியாத கதை

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் எம்.நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனும் சசிகலாவின் உறவினருமான ராவணனும்... அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குத் துள்ளித் திரிந்தார்கள். எம்.எல்.ஏ-க்களாக யார் யாரை நிறுத்துவது என்று இவர்கள் அடித்த கூத்தில்தான் ஜெயலலிதாவுக்கே தெரியா மல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் ஜெயா டி.வி-யில் வெளியானது. ஜெயலலிதா உஷாராக ஆகியிருக்க வேண்டிய தருணம் அது. அப்போது தன்னுடைய இயலாமை காரணமாக பிரச்னையைத் தனக்குள் மென்று விழுங்கினார். இப்போது அது வெடித்துவிட்டது!

அதிகாரத்தைப் பயன்படுத்திக் காசு பார்ப்பதும், தனக்கு வேண்டியவர்களைப் பதவிக்குக் கொண்டுவர பொய்கள் சொல்வதும் காலம் காலமாக நடப்பதுதான். இதில் பல விஷயங்கள் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடந்துள்ளன. பல தெரிந்தும் நடந்திருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிப்பது அல்லது அவர்களை மட்டும் ஒதுக்கிவைப்பதுதான் இதுவரை நடந்துஉள்ளது. ஆனால், இம்முறை சசிகலாவையும் சேர்த்து மொத்த மன்னார்குடியையும் மண்ணைக் கவ்வவைத்ததன் பின்னணியைச் சிலர் சொல்லும்போது நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ''ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதலமைச்சராகக் கொண்டுவரலாம்? என்று இந்தக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் சமீப காலமாகப் பேச ஆரம்பித்த தகவல் ஜெயலலிதாவின் காதுக்கு வந்தது. இதைக் கேள்விப்பட்டதும் அவர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

தஞ்சாவூரில் ஒரு வீட்டில் வைத்து குடும்ப உறுப்பினர்கள் சிலர் பேசியதை உளவுத் துறை கண்டுபிடித்து மேலிடத் துக்குச் சொன்னது. 'உடனே கலைந்து போகாவிட்டால் அவர்களைக் கைது செய்யுங்கள்’ என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு போனது. சில நாட்களுக்கு முன்னால் பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து பேசினார்கள். அப்போதும் இந்த விஷயம் தான் ஓடி இருக்கிறது. 'என்னை வைத்து ஆதாயம் பெறுபவர்கள் எனக்குஎதிராகவே சதி செய்வதா?’ என்று அம்மா கொந்தளித் தார். பெங்களூரு வழக்கில் அம்மாவுக்கு எப்படியும் தண்டனை நிச்சயம் என்று எதிர்க் கட்சிக்காரர்களைவிட இவர்கள் அதீதமாக நம்புவதுதான் அம்மாவைக் கோபப்படுத்தியது. அம்மாவின் இந்தக் கேள்விகளுக்கு சசிகலாவால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை!'' என்கிறார்கள் தோட்டத்தின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

''ஜெயலலிதாவுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. தன்னுடைய குழந்தை பாக்கியத்துக்காக வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்று இருந்த நேரத்தில்தான்... ஜெயலலிதா முதல்முறை முதல்வரானார். 'நீ என்னோடு உடன் இருக்க வேண்டும்’ என்று சொன்ன ஒரே

குட் பை சசிகலா! - ஜெயலலிதாவின் சொல்ல முடியாத கதை

வார்த்தைக்காக அந்தப் பயணத்தை விட்டுவிட்டு உடன் இருந்தவர். அப்படிப்பட்டவரை உதாசீனப்படுத்தியது ஜெயலலிதாவுக்கே நல்லதல்ல!'' என்று இவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

''ஒரு முக்கிய அரசியல் தலைவர் குறித்து ஜெயலலிதா தவறுதலாகப் பேசி, அது பெரிய பிரச்னை ஆக இருந்த நிலையில், அந்த கேசட்டை எப்படியோ கைப்பற்றி எரித்தவர் சசிகலா. அது மட்டும் வெளியே வந்திருந்தால், ஜெயலலிதா அரசியல் தலைவராகவே ஆகி இருக்க முடியாது!'' என்றும் சொல்கிறார்கள். அரசியலில் பழைய கொடுக்கல் வாங்கல்கள் செல்லுபடி ஆவது இல்லை அல்லவா?

ஜெயலலிதா - சசிகலா பிரிவு நிரந்தரமானதா என்பதைப் பொறுத்தே அதன் பிரயோஜனத்தைக் கணக்கிட முடியும் என்பதால், காலத்தின் கைகளில் இந்தக் கட்டுரையின் கடைசி வரி இருக்கிறது!