Published:Updated:

கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?

கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?

ரீ.சிவக்குமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?

ரீ.சிவக்குமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?

ஜூன் 3ல் 95 வயதைத் தொடுகிறார் கருணாநிதி. பெரியாரின் ஆயுள் காலத்தைத் தொடுகிறது அவரது வயது. 14 வயதில் ‘ஓடி வந்த இந்திப்பெண்ணே நீ நாடி வந்த இடம் இதுவல்ல' என்று இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொடி பிடித்ததைத் தன் அரசியல் வாழ்வின் தொடக்கமாகச் சொல்வார் அவர். ஆக, கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு வயது 81.

90ஆம் ஆண்டு பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய கருணாநிதி, 95ஆம் பிறந்தநாளில் குழந்தை நிலையில் இருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயேதான் அவர் வாழ்க்கை. அதற்குமுன்பு வரை தமிழக அரசியலின் அச்சு அவர்தான். அவரைப் பாராட்டியும் விமர்சித்துமே அரசியல் களம் அவ்வப்போது சூடானது. இப்போது தமிழக அரசியல் களத்தின் குவிமையம் அவரை விட்டு சற்று விலகியிருந்தாலும் இப்போதும், 'கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சி நீடித்திருக்காது', `மூன்றாவது அணி முயற்சியில் கருணாநிதி என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார்?', `இந்த விஷயம் குறித்து சாமர்த்தியமும் நகைச்சுவையும் ததும்ப எப்படி அவர் பதிலளித்திருப்பார்?' என்ற கேள்விகள் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன.

கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா?

கலை, இலக்கியம், அரசியல் என்று கால் பதித்த தளங்களில் எல்லாம் தடம் பதித்தவர் கருணாநிதி. அவரது எழுத்துகளில் அலங்காரம் மின்னினாலும் நவீனச் சிந்தனைகளும் நிறைந்திருந்தன என்பதற்கு அவரது ‘குறளோவியம்' சிறந்த எடுத்துக்காட்டு.

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் திருக்குறளுக்கு, ‘தெய்வத்தைக்கூட தொழாமல் கணவனைத் தொழுபவள், பெய் என்று சொன்னால் மழை பெய்யும்' என்றுதான் எல்லா உரையாசிரியர்களும் உரை எழுதினார்கள்.

ஆனால் கருணாநிதி ‘குறளோவியத்தில்' எழுதிய உரை இது. ‘கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.'

மழை என்பது தன்னிச்சையாய்ப் பெய்வது. யாராவது `பெய்' என்று கட்டளையிட்டவுடன் மழை பெய்தால், அது இயற்கையின் தன்மை கொண்ட இயல்பான மழை அல்ல; அது அடிமை மழை. கணவனைத் தொழும் மனைவியும் அப்படிப்பட்ட அடிமைதான் என்கின்ற கருணாநிதியின் உரை, நவீனச் சிந்தனைக்கான அடையாளம்.

கலைத்தளங்களிலும் கருணாநிதி பல நவீனச் சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார். மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் ‘பீகே' திரைப்படம் எடுக்க பாலிவுட்டுக்கு 2014ஆம் ஆண்டு ஆனது. அதுவும் அந்த மூடநம்பிக்கைகளை விமர்சிக்கவும் வேற்றுக்கிரகத்திலிருந்து ஓர் ஏலியன் வரவேண்டியிருந்தது. ஆனால் அதற்கு 62 ஆண்டுகளுக்கு முன்பே, பராசக்தியில் புரோகிதர் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, திராவிட அரசியல் ஆகியவற்றை முன்வைத்தவர் கருணாநிதி. ‘என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது, ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல' என்ற அவரது வசன வரிகளின் கவித்துவ உயரம் மகத்தானது.

பெண்களுக்கும் சொத்துரிமை, ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' சட்டம், அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கான நலவாரியம், நரிக்குறவர் களுக்கான குடியிருப்பு, தொழிற்கல்வி நுழைவுத் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தமிழ்வழிப் பொறியியல் கல்வி, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்துக்குத் துணைநின்றது, காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் காரணமாக இருந்தது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், சமச்சீர்க்கல்வி என கருணாநிதியின் அரசியல் சாதனைகள் ஏராளம். ‘உடல் ஊனமுற்றோர்' என்று அழைக்கப்பட்டோருக்கு ஆங்கிலத்தில்கூட ‘உடல்ரீதியாகச் சவால் நிறைந்தவர்கள்' என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் `மாற்றுத்திறனாளி' என்ற வார்த்தையைப் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததும் அவர்களுக்காக நலத்திட்டங்களை உருவாக்கியதும் அவரது நவீனச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.

தனிநபர் வழிபாடு, ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியல், திராவிட இயக்கம் சாதி ஒழிப்பை நோக்கி நகராமல் இடைநிலைச் சாதிகளின் உறைவிடமாகிப்போனது, திராவிட இயக்கத்தவரின் ஆணாதிக்கச் சிந்தனைகள் என ஏராளமான விமர்சனங்களைக் கருணாநிதியின் மேல் வைக்கலாம். சாதிய அடிப்படைவாதிகள், மதவெறியர்கள், பெரியாரிஸ்ட்டுகள், இடதுசாரிகள், தலித் அரசியல் சிந்தனையாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கருணாநிதி இன்றும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

இத்தகைய விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டே கருணாநிதியை மதிப்பிட முடியும். அவரது தனித்தன்மை, விமர்சனங்களைப் புறக்கணிக்காமைதான். எந்தப் பத்திரிகையாளரின் எந்தக் கேள்வியையும், எப்படிப்பட்ட கேள்வியையும் அவர் தவிர்த்ததில்லை. அவரது பதில் ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம்; மழுப்பலாக இருக்கலாம், ஆனால் கருணாநிதி கேள்விகளில் இருந்து நழுவுபவர் அல்லர். அவரைப்போல் சாமர்த்தியமாகக் கேள்விகளை எதிர்கொள்ளும் ஒரு தலைவர் அவருக்கு முன்பும் இல்லை; இன்றுமில்லை.

நினைவாற்றலுக்கு அடையாளமான கருணாநிதிக்கு,  அவரின் கடந்தகாலத்தையே இன்று நினைவூட்ட வேண்டியிருப்பது நிச்சயமாக வரலாற்றுத்துயரம்தான்.

வரலாற்றில் எல்லாக் குரல்களும் வசீகரமானவை அல்ல. ஆனால் அவரது கரகரத்த குரலின் காந்தத்தன்மை எத்தனையோ தலைமுறையைக் கட்டி இழுத்தது. பொதுக்கூட்டத்தில் மற்றவர்களெல்லாம் பேசி முடித்ததும் ஒலிபெருக்கி முன் வரும் கருணாநிதி, 'இந்தக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கும்...' என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே, திருவிழாக் கொண்டாட்டத்துக்கான மனநிலை தொடங்கிவிடும். அவரும் நிறுத்தி நிதானமாக, தலைமை தாங்குபவர், முன்னிலை வகிப்பவர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என வரிசையாகப் பெயர்களை விளிப்பார். இறுதியில் பரபரப்பும் பரவசமும் நிறைந்த அந்தக் கணம் வரும். ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...' என்று அந்தக் குரல் ஒலிக்கும்போது திருவிழா உச்சத்தை அடையும். அந்தக் கணத்துக்காகத்தான் காத்திருப்பார்கள் உடன்பிறப்புகள்.

‘உயிரினும் மேலான...' என்று ஒலிக்கும் அந்தக் கரகரத்த குரல்தான் எத்தனையோ தோல்விகளை எதிர்கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்குத் தந்தது, போராடிச் சிறைநிரப்பச் செய்தது, தீக்குளித்துத் தியாகம் செய்ய வைத்தது, எந்தப் பதவியும் கிடைக்காவிட்டாலும் ஊரே ஏசினாலும் தலைவருக்காக மீண்டும் மீண்டும் தன்னை அர்ப்பணிக்க வைத்தது, எத்தனை முறை கட்சி உடைந்தாலும் கரைவேட்டியின் வண்ணத்தை மாற்றாமல் கறுப்பு-சிவப்பை ரத்தத்தின் நிறமாக மாற்றியது.

அந்தக் குரலை ஒன்றரை ஆண்டுகளாகக் கேட்காமல் தொய்வடைந்துபோயிருக்கும் உடன்பிறப்புகள் அவ்வப்போது தலைவரின் அசைவுகள் குறித்து வெளியாகும் வீடியோக்களை ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள். மீண்டும் ஒருமுறையாவது ‘அன்பு உடன்பிறப்புகளே' என்று அழைக்க மாட்டாரா என்று தவமிருக்கிறார்கள்.

 இன்னும் ஐந்தாண்டுகளில் நூறாண்டைத் தொடப்போகிறார் கருணாநிதி.

அதற்குள்... அதற்குள்... அந்தக் கரகரத்த குரல் தழுதழுத்த தொனியிலாவது கேட்குமா? குறளோவியத்தின் குரல் கேட்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism