Published:Updated:

``என் மீதான #MeToo புகாருக்குக் காரணம் சபரிமலை ஐயப்பனா?!'' - ராகுல் ஈஸ்வர்

``என் மீதான #MeToo புகாருக்குக் காரணம் சபரிமலை ஐயப்பனா?!'' - ராகுல் ஈஸ்வர்
``என் மீதான #MeToo புகாருக்குக் காரணம் சபரிமலை ஐயப்பனா?!'' - ராகுல் ஈஸ்வர்

சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது முதலே பரபரப்பு கூடிவருகிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தும் சில இயக்கங்கள் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக நின்றதோடு, போராட்டக் களத்திலும் குதித்தன. அதனாலேயே வழிபடச் சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சபரிமலை கோயிலின் மாதாந்திர நடை சாத்தப்பட்டதும் அந்தப் பிரச்னையின் தீவிரம் சற்றே ஓய்ந்திருக்கிறது. சபரிமலையைக் காலங்காலமாக நிர்வகித்துவரும் `தந்திரி’ குடும்பத்தின் தலைமைக் குருக்களான தந்திரி கண்டராரு மஹேஷ்வாராருவின் பேரனும், சபரிமலை கோயிலுக்கு இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தும் `அய்யப்பா தர்மா சேனா' அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். இது தொடர்பாக, இரண்டு முறை கைது செய்யப்பட்டது, சபரிமலைக்கும் அவருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தந்திரி குடும்பம் அறிவித்தது, தன் மீதான பாலியல் புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ராகுல் ஈஸ்வரிடம் அலைபேசியில் பேசினேன்.

``எனக்கும் சபரிமலை கோயிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அறிவித்தவர், என் அம்மாவின் சகோதரர் கண்டரரு மோகனரரு. அதாவது, என் தாய்மாமன். அவர் அப்படிக் கூறியது பற்றி நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவருக்குக் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் மூலம் பல்வேறு வகையில் அழுத்தம் வருகிறது. என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான், என் தாய் வழி பாட்டி இதுகுறித்து முதன்முறையாக ஊடகங்களிடம் பேசினார். அதில் அவர் எனக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், என் தாத்தா காண்டராரு மகேஷ்வராரு உயிருடன் இருந்தபோது, கோயிலின் முன்னேற்றத்துக்காக என்னுடன் சேர்ந்தே செயல்பட்டதாகவும், என்னுடைய செயல்பாட்டில் அவருக்கு முழுநம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனால், சபரிமலை கோயிலுக்காகத் தொடர்ந்து செயல்படுவேன். வருகிற நவம்பர் 5-ம் தேதி, காலை 10 மணி முதல் 6-ம் தேதி, இரவு 10 மணி வரை கோயிலைச் சுற்றி எங்களுடைய அமைப்பு காவலுக்கு இருக்கப்போகிறது. இதைக் காவல்துறை அனுமதியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் அழுத்தமாக.

உலகம் முழுவதும் மீ டு புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் அது எதிரொலித்துவருகிறது. பல பிரபலங்கள் மீது இந்தப் புகார் முன் வைக்கப்படுவதும் அதற்கு அவர்கள் எதிர்வினை புரிவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த அலையில் ராகுல் ஈஸ்வரும் தப்பவில்லை. அவர் மீது ஒரு பெண் மீ டூ புகார் கூறியுள்ளார். ``உங்கள் மீதும் #  metoo புகார் எழுப்பப்பட்டுள்ளதே?" என்று கேட்க, ``என் மீது # metoo புகார் அளித்த பெண்ணுக்கு, அது எந்த வருடம் நடந்தது என்றுகூடத் தெரியவில்லை. `அவர் எனக்கு முத்தம் கொடுக்க முயன்றார்' என்று கூறியுள்ளார். எந்த ஆதாரத்துடன் இந்தப் புகார்களை நிரூபிப்பார்? நல்லவேளை! என் மனைவி எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். நான் சபரிமலைக்காகக் குரல் கொடுக்கிறேன் என்ற காரணத்துக்காகவே, என் மீது சுமத்தப்படும் பொய்யான புகார் இது. கோயிலுக்குள் இத்தகைய பெண்ணியவாதிகளை அனுமதித்தால், மேலும் பல பொய்யான புகார்கள் எழும். நவம்பர் 5-ம் தேதி, எங்களின் போராட்டம் வெற்றிபெற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மூலமும் வெல்வோம்” என்கிறார் ராகுல் ஈஸ்வர்.