Published:Updated:

`மோடி அவர்களே, படேல்சிலை உண்மையில் ஒற்றுமையின் சிலைதானா?'- ஒரு சாமான்யனின் கடிதம்

`மோடி அவர்களே, படேல்சிலை உண்மையில் ஒற்றுமையின் சிலைதானா?'- ஒரு சாமான்யனின் கடிதம்
`மோடி அவர்களே, படேல்சிலை உண்மையில் ஒற்றுமையின் சிலைதானா?'- ஒரு சாமான்யனின் கடிதம்

பல நாடுகளாகச் சிதறுண்டு கிடந்த நிலத்தை, ஒற்றை அரசுக்குக் கீழ், ஒரே தேசமாக மாற்றியவர் சர்தார் வல்லபபாய் படேல். இந்தத் தேசத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் தற்போது அவரின் சொந்த மாநிலத்தில், மிகப் பிரமாண்டமாக, உலகிலேயே மிக உயரமான சிலையாக எழுப்பப்பட்டிருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு,  

இந்தக் கடிதம் சர்தார் படேல் முயற்சியால் இந்தியாவோடு ஒன்றிணைக்கப்பட்டும், 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி' என்ற ரீதியிலே உங்கள் தலைமையிலான மத்திய அரசால் தொடர்ந்து அணுகப்படும் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது.

பல பகுதிகளாகச் சிதறுண்டு கிடந்த நிலத்தை, ஒற்றை அரசுக்குக் கீழ், ஒரே தேசமாக மாற்றியவர் சர்தார் வல்லபபாய் படேல். இந்தத் தேசத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர், தற்போது அவரின் சொந்த மாநிலத்தில் மிகப் பிரமாண்டமாக உலகிலேயே மிக உயரமான சிலையாக எழுப்பப்பட்டிருக்கிறார். மகிழ்ச்சி. 'இரும்பு மனிதருக்கு' தங்கள் ஆட்சியில் உரிய மரியாதை கிடைத்திருக்கிறது. 

சர்தார் படேலுக்கு சிலை வைப்பது உங்களின் நீண்ட நாள் கனவுத்திட்டம். நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்தக் கனவுக்கான விதை தூவப்பட்டு, நீங்கள் பிரதமராக நான்கரை ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில், இந்த ஆட்சி முடியும் தருவாயில் மாபெரும் விருட்சமாக விரிந்து நிற்கிறது. இந்தச் சிலையின் மூலம் ஒரு வார்த்தை தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. அது - 'ஒற்றுமை'.

ஒற்றுமைக்கான அடையாளமாக படேல் சிலை எழுப்பப்பட்டிருக்கும் இதே குஜராத்தில்தான், சில மாதங்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்த தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். படேல் சிலைக்காக உழைத்த நான்காயிரத்து 500 பேரில், பாதிப் பேருக்கும் மேற்பட்டோர் குஜராத் அல்லாத வெளிமாநிலத்தவர்களே. ஒற்றுமைச் சிலையின் மீதிருந்த அவர்களின் வியர்வைத்துளி காய்வதற்குள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க குஜராத்தை விட்டு, ஓடிக் கொண்டிருந்தார்கள்.

வெளிமாநிலத்தவர்களின் நிலை இப்படியிருக்க, நீங்கள் படேல் சிலையைத் திறந்து வைத்து பெருமிதத்துடன் உரையாற்றிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியைச் சுற்றியிருந்த 72 பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் சமையல் செய்யாமல், போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். துக்க நாள்களைக் கடைப்பிடிக்க வீட்டில் சமையல் செய்யாமல் இருப்பது அந்தப் பழங்குடி மக்களின் வழக்கம். 

உங்கள் கனவுத்திட்டம் பழங்குடி மக்கள் கடவுளாக வழிபட்டு வந்த 'சாது பெத்' என்ற தீவின் மீது அமைந்திருக்கிறது. அது நிறைவேற அவர்களின் நிலம் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு, அதற்கான முறையான இழப்பீடு எதுவும் பெறாமல் உங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். படேல் சிலையின் கீழ், பழங்குடி மக்களுக்கான அருங்காட்சியத்தையும் நீங்கள் திறந்து வைத்திருப்பது  மிகப்பெரிய முரண். 'ஒரே இந்தியா - சிறந்த இந்தியா!' என்று பெருமையாக நீங்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோது, அந்தப் பழங்குடி மக்கள் தங்கள் கோரிக்கைகளை உயர்த்திப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

இந்த இரண்டு சம்பவங்களையும் முன்வைத்து, இந்தச் சிலை ஒற்றுமையைப் போதிக்கவில்லை என்று நான் கூற மாட்டேன். பல்வேறு சாதிய, மத வேற்றுமையிலும் ஒற்றுமையாகச் செலுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. எல் அன்ட் டி நிறுவனமும், அமெரிக்காவின் டர்னர் நிறுவனமும் இந்தச் சிலையை மக்கள் பணத்தில் பிரம்மாண்டமாக வடிவமைத்து உருவாக்கி இருக்கிறார்கள். 

படேல் சிலையை உருவாக்க, இரும்பு அனுப்பக் கோரி நீங்கள் நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்தீர்கள். எனினும், அது இவ்வளவு உயரமான சிலைக்கு போதுமானதாக அமையாமல் போகவே, பொதுத்துறை நிறுவனங்கள் நிதி தர வேண்டும் என வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. சி.ஏ.ஜி நிறுவனம் படேல் சிலை விவகாரத்தில், பொதுத்துறையை அரசு நிர்பந்தம் செய்திருப்பதைக் கண்டுபிடித்து, அதனைக் கண்டித்திருக்கிறது. 

எங்களைப் போன்ற இளைஞர்களை `மேக் இன் இந்தியா' என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்திவிட்டு, படேல் சிலையின் மேற்பூச்சுக்காகச் சீன நிறுவனமான டி.க்யூ ஆர்ட்ஸைப் பயன்படுத்தியிருப்பதை உங்கள் அரசியல் எதிரியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்திருக்கிறாரே? 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை எங்கள் கழுத்தை நெருக்கி வருகின்றது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக எதிர்த்து, ஆட்சிக்கு வந்தது உங்கள் கட்சி. இந்நிலையில் படேல் சிலைக்காக பொதுத்துறைப் பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து 148 கோடி ரூபாயை வசூல் செய்து, எங்கள் மீது சுமையை ஏற்றி வைத்திருக்கிறீர்கள்.

சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்குப் பதிலாக இந்தியாவில் நிதிப் பற்றாக்குறையால் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பஞ்சம் இல்லை. எனினும் நெருங்கி வரும் தேர்தல், இட ஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடத்தும் படேல் சமூகத்தவர்கள், காந்தி - படேல் முரண்பாடுகள் எனப் பல காரணங்களால் இந்தச் சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. 

இனி 182 மீட்டர்களில் உயர்ந்து நிற்கும் சர்தார் வல்லபபாய் படேலால் சுதந்திர இந்தியாவில் தகுதி இருந்தும் மருத்துவர் ஆக முடியாமல் போன அனிதாக்களையும், சாதிவெறியாலும், ஆணாதிக்கத்தாலும் கொல்லப்பட்ட ராஜலட்சுமிகளையும் பார்க்க முடியும். `ஒற்றுமை' என்பது, ஊருக்கு வெளியே கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும், சமத்துவத்துக்காக வாழ்நாளெல்லாம் குரல்கொடுத்த அம்பேத்கர் சிலைகளை ஊருக்குள் கொண்டு வருவதிலும், மானுட விடுதலையின் குரலாக ஒலித்த பெரியாரின் சிலைகளை உடைக்கச் சூளுரைக்கும் உங்கள் கட்சித் தலைவர்களின் அட்மின்களைக் கட்டுப்படுத்துவதிலும் இருக்கிறது. பழங்குடியினர், சிறுபான்மையினர், வெளிமாநிலத்தவர் முதலானோரை விரட்டுவதில் வன்மம்தான் நிறைந்திருக்கிறது.

இப்படிக்கு,

படேல் சிலையின் உருவாக்கத்துக்காக வரிசெலுத்திய சாமான்ய இளைஞன்

அடுத்த கட்டுரைக்கு