Published:Updated:

`திருமங்கலம் ஃபார்முலா போலத்தான் 18 தொகுதிகளும்!’ - நம்பர் 1 இடத்தைத் தேடும் எடப்பாடி பழனிசாமி

`கைது செய்யக்கூடிய அளவுக்கு தினகரன் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டார் என நினைக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

`திருமங்கலம் ஃபார்முலா போலத்தான் 18 தொகுதிகளும்!’ - நம்பர் 1 இடத்தைத் தேடும் எடப்பாடி பழனிசாமி
`திருமங்கலம் ஃபார்முலா போலத்தான் 18 தொகுதிகளும்!’ - நம்பர் 1 இடத்தைத் தேடும் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலுக்கு இன்று விளக்கமளித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'பேனர் கிழிப்பு விவகாரத்தில் தினகரன் அணியினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அமைச்சர்களிடமும் அவர் தீவிரமாக விவாதித்திருக்கிறார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவுக்காக மதுரை ஹோட்டலில் தங்கியிருந்தார் தினகரன். அதே ஹோட்டலில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினை தினகரன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் பரவியது. இந்தச் சந்திப்புக்குப் பிறகே, `மேல்முறையீடு செய்யப்போவதில்லை' என்ற முடிவுக்கு தினகரன் வந்ததாகவும் செய்தி வெளியானது. இதற்குப் பதில் அளித்த தினகரன், "ஹோட்டலில் வைத்து ஸ்டாலினை ரகசியமாகச் சந்திக்கவும் இல்லை, சந்திப்புக்கான அவசியமும் இல்லை. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவு 12 மணிக்கு மேல்தான் ஹோட்டலுக்கு வந்தேன். சந்தேகம் இருப்பவர்கள் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துகொள்ளலாம். ஒரே ஹோட்டலில் தலைவர்கள் தங்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை" என்றவரிடம்,

பசும்பொன்னில் அ.தி.மு.க பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறித்துக் கேட்டபோது, "பேனர் கிழிப்பு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்" என்றார். பசும்பொன் சம்பவம் குறித்துப் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், "பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்த தினகரன் சென்றபோது 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாகக் கூடினர். அப்போது மக்கள்தான் பேனரைக் கிழித்துள்ளனர். எங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பிலேயே மக்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை அமைச்சர் உதயகுமார் புரிந்துகொண்டால் போதும்" என்றார். 

தினகரனின் இந்தப் பேட்டி குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``முதுகுளத்தூரில் கழகப் பேனர்களைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதை எதிர்த்து தினகரன் போராட்டம் நடத்தினால், அவரையும் கைது செய்யும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அமைச்சர்கள் சிலரிடம் அவர் பேசும்போது, 'கைது செய்யக்கூடிய அளவுக்கு தினகரன் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டார் என நினைக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித்தவர், 'பேனரைக் கிழித்தவர்கள் யார் என்பதைத் தெரிந்த பிறகுதான் அவர்கள் மீது வழக்கு போட்டோம். அவருடைய கட்சிக்காரர்கள் கிரிமினல் நடவடிக்கையில் இறங்கியதால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் வந்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு முழுக்கவே அவர் போராட்டம் நடத்தட்டும். அதை எப்படி எதிர்கொள்வது என எனக்குத் தெரியும்.பசும்பொன்னில் கழகப் பேனர்களைப் பொதுமக்கள் கிழித்தார்கள் என்கிறார்கள். அப்படியானால், பரமக்குடியிலும் மற்ற பகுதிகளிலும் பொதுமக்கள் ஏன் பேனரைக் கிழிக்கவில்லை?. தேவர் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்த அ.ம.மு.க-வினர்தான் பேனர் கிழிப்பு நடவடிக்கையில் இறங்கினார்கள். அதற்குப் பதிலடியாக சட்டப்படியான நடவடிக்கையில் இறங்கினோம். தினகரன் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்துகொண்டா நான் சி.எம் பதவியில் இருக்கிறேன். இவர்களது வெற்றுக் கூச்சல்களையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' எனக் கொதிப்போடு பேசினார்" என்றவர், 

``தினகரன் தரப்பினர் மீது அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு நெருக்குதல் கொடுத்து வருகிறது ஆளும்கட்சி. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக அனைத்து வியூகங்களையும் அமைத்து வருகிறார் முதல்வர். 18 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்தித்து அரசியல் களத்தில் நாம்தான் நம்பர் ஒன் என்ற இடத்துக்கு வர நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படியொரு வெற்றியைக் கொடுப்பதன் மூலம் பா.ஜ.க-வுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் நாம்தான் செல்வாக்கானவர்கள் என்பது புரியும் எனக் கணக்குப்போடுகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் சில அதிரடியான நடவடிக்கைகள் மூலம் 20 தொகுதிகளையும் கைப்பற்றிவிட முடியும் என அவருக்கு சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால்தான், தினகரன் தரப்பினரின் செயல்பாடுகளை முடக்கும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. தினகரன்-ஸ்டாலின் ரகசிய சந்திப்பை வெளிப்படுத்துவதன் மூலம் அ.தி.மு.கவின் அடிப்படைத் தொண்டர்களை அவர் பக்கம் செல்லாமல் தடுக்கும் வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இனி வரக்கூடிய நாள்களில் அ.ம.மு.க-வினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக.