Published:Updated:

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...

தூத்துக்குடி துறைமுகத்துக்கு எம்.வி.ரிஸா கப்பல் தாதுப்பொருட்களை ஏற்றி வந்ததை தீரத்துடன் எதிர்த்து

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

அதனை முறியடித்த மக்கள் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 1996 மார்ச் 18 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடிக்கு அவர் வரும் தினத்தை கருப்பு தினமாக அறிவித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு. காவல்துறையின் தீவிர முயற்சியால் அவரது பயணம் தடைபடாமல் போனாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்ல இருந்த ஜெயலலிதாவின் பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.

போராடும் மக்களிடம் கடுமை
 
அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மென்மை போக்கையும்,  போராடும் மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டது. அதனால் ஆலையை மூடக்கோரி மக்கள் இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களை எல்லாம் ஆலை நிர்வாகம் தட்டிக் கழிப்பதை வழக்கமாக்கியது.சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் விதி முறைகளை மீறி ஆலையை கட்டி இருப்பதையும் அதன் செயல்பாடுகள் இருப்பதையும் எதிர்ப்பு இயக்கத்தினர் பல முறை சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக, ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஆலை நிர்வாகம்மறுப்பதற்கு முன்பாக அரசு அதிகாரிகள் ‘இல்லை’ என தெரிவிப்பதில் அக்கறை காட்டினார்கள். அதற்கான அதாரங்களை அடுக்கடுக்காக விளக்கினார்கள்.

குற்றச்சாட்டை சமாளிக்க ஆய்வு குழுக்கள்

ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கடலில் கொட்டப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. இதுபோன்ற சமயங்களில் அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலையின் உள்ளே சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.அப்படி ஆய்வு செய்த குழுவினர், ‘ஆலையில் இருந்து க்டல் வரைக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான்.ஆனால், அந்த குழாய்களில் அவர்கள் கழிவுகளை வெளியேற்றவில்லை.மாறாக உள்ளேயே அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்’என மக்களுக்கு ‘விளக்கம்’(?) அளித்தார்கள்.

இது தவிர,ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைக் காடுகளை அமைக்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வலியுறுத்தியது.ஆனால், அப்படி செய்ய வேண்டுமானால் 150 ஏக்கர் பரப்பளவு தேவைப்படும் என்பதால் பசுமை வளைய பரப்பளவை குறைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் கேட்டுக் கொண்டது.உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,பசுமை வளைய பரப்பளவு 25 மீட்டராக இருந்தால் போதுமானது என தாராளம் காட்டியது.

சாகும் வரை உண்ணாவிரதம்

மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் ஆலையை செயல்படுத்த துணிந்து செயல்பட்ட ஆலை நிர்வாகத்தை அ.தி.மு.க அரசும், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசும் அளவுக்கு அதிகமாக உற்சாகப்படுத்தின.ஆனால், விதி முறைக்கு மாறாக அமைக்கப்பட்டு உள்ள இந்த ஆலை செயல்பட தொடங்கும் போது சிறிய விபத்து ஏற்பட்டால் கூட தூத்துக்குடி நகரமே மற்றொரு போபாலாக உருமாறி விடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சினார்கள்.

இந்த விவரங்களை சமூக ஆர்வலர்கள் மக்களிடம் விளக்க தெருமுனை பிரசாரம், சைக்கிள் பேரணி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்தனர். அதனை எல்லாம் முறியடிக்கும் வகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில் காவல்துறை தயக்கம் காட்டியது. அத்துடன் முன்கூட்டியே திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.ஆனால், அதை எல்லாம் மீறி பல கட்டமாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்பட்டன. கழிவு நீர் குழாய்களை அகற்ற வலியுறுத்தி 15 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பயன்படுத்தப்படாமல் வெறுமனே பதித்து மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும் அந்த குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்த பின்னரே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டங்களில் புஷ்பராயன் (தற்போது, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழு உறுப்பினராக இருப்பவர்), தியாகி கோமதியா பிள்ளை போன்றோர் பங்கெடுத்தனர்.

மவுனம் காத்த மதத் தலைவர்கள்

போராடும் மக்கள் மீதும், அதை ஊக்கப்படுத்தும் அமைப்புகள் மீதும் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன.போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது சரமாரியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.ஒரு சிலரை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று மிரட்டி அனுப்பினார்கள்.இதை எல்லாம் சந்திக்க பயந்து பல அமைப்புகள் பின்வாங்கிக் கொண்டன.சில அமைப்புகள் ஆலை நிர்வாகத்தின் மூலமாக கிடைக்கும் சலுகைகளுக்காக போராட்டத்தை முடித்துக் கொண்டன.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

தொடக்கத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்தில் ஆர்வமாக செயல்பட்ட சில மத தலைவர்களும் மத நிறுவனங்களும் கூட அரசின் அடக்குமுறைக்கு பயந்து மவுனம் காக்க தொடங்கினார்கள்.'கோடிகளை கொட்டி தொடங்கப்பட்ட ஆலையை இழித்து மூட் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?’ என்று உள்ளூர் தலைவர்கள் சிலரே மக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள்.ஆனாலும் கத்தோலிக்கமத குருமார்கள் சிலர் கடைசி வரையிலும் போராட்டக் களத்தில் மக்களோடு தீவிரமாக நிற்கவே செய்தார்கள். ஆனாலும் அவர்களின் மதத் தலைமை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பதும் ஆலையை எதிர்த்து சிறு அறிக்கை கூட கொடுக்கவில்லை என்பதும் மதத்தின் மீதும் அந்த தலைமையின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த மீனவ மக்களை வருத்தம் அடைய வைத்தது.

கலக்கம் அடைந்த ஆலை நிர்வாகம்

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் 1989-ல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கட்டப்பட்டபோது எதிர்ப்பு இயக்கம் வலுவாக இருந்தது.அந்த பகுதியில் இருந்த விவசாய மற்றும் மீனவ மக்கள் கொண்ட 35,000 பேரை ஒன்று திரட்டி போராட்டக் குழு அமைக்கபப்ட்டது.அந்த குழுவினர் தொடக்கத்தில் பல்வேறு வடிவங்களில் அமைதியான போராட்டங்களை நடத்திப் பார்த்தனர்.ஆனால் எதற்கும் வளைந்து கொடுக்காத ஆலை நிர்வாகம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இருந்தது. இதனால் கொதிப்படைந்த ரத்னகிரி மாவட்ட மக்கள், கையில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அதிரடியாக ஆலைக்குள் அத்துமீறி நுழைந்து அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.

அதே போன்ற நிலைமை தமிழகத்திலும் வந்து விடுமோ என்கிற அச்சம் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு வந்து விட்டதால் போராட்டங்களை ஆரம்பத்திலேயே முடக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாடியது.இந்த போராட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டமாக மாறுவதை திசை திருப்பும் வகையில், தூத்துக்குடியின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க இந்த ஆலை உதவும் என்கிற கருத்தை பரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் நல்ல பலன் கிடைக்கவே செய்தது. போராட்ட குணம் நீர்த்து போக ஆரம்பித்ததால் போராட்டக்குழுவினர் நீதி மன்றத்தை மட்டுமே நம்பும் நிலைமை உருவானது.

போராட்டம் ஒரு பக்கம் நடக்கும் போதே செயல்பாட்டை தொடங்கி விட்ட ஸ்டெர்லைட் ஆலையில் விபத்துகள் அடிக்கடி நடக்க தொடங்கின..

அந்த விவரங்களை நாளை பார்க்கலாம்..