Published:Updated:

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்...! கட்சிகளுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், அந்த அமைப்புகளுக்குப் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில், அந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்த முன்வரவேண்டும்.

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்...! கட்சிகளுக்குக் காத்திருக்கும் சவால்கள்!
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்...! கட்சிகளுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

மிழகத்தில் தினகரன் ஆதரவாளர்களான 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்த 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கோரஸாக எழுப்பத் தொடங்கி இருக்கின்றன.

``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதையடுத்து, "அ.தி.மு.க. கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்று அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கமளிக்குமாறு எம்.எல்.ஏ-க்களுக்குச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்த நிலையில், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர எஞ்சிய 18 பேரும் விளக்கம் அளிக்காததால், அவர்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். 

இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன், அவர்கள் 18 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்று அண்மையில் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு வெளியானதும், அ.தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேருடன் ஆலோசனை நடத்திய டி.டி.வி தினகரன், "18 பேருக்கு எதிரான தீர்ப்பு, தங்களுக்கு ஏமாற்றம் அளித்தபோதிலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை" என்று கூறினார். 

மேலும் அவர், ``இந்த 18 பேர் தவிர, தி.மு.க. தலைவராக இருந்த மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என மொத்தம் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் யார் மண் குதிரை என்பது தெரிந்துவிடும். இந்த 20 தொகுதிகளுக்கும் ஏற்கெனவே நாங்கள் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயாராகவுள்ளோம். ஆளுங்கட்சியினர் தரப்பில் 20 தொகுதிகளிலும் டெபாசிட்கூடப் பெறமாட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் போன்றே இந்த 20 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேலை செய்தார்கள். ஆனால், மக்கள் அவர்களுக்குத் தோல்வியைத்தான் கொடுத்தார்கள். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டு, இடைத்தேர்தல் வேண்டாம் என்று தலைமைச் செயலாளரை விட்டுத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியதுதான் அவர்கள் இருவரின் வீரம். இந்த முறையாவது சாக்குப்போக்கு சொல்லாமல் இடைத்தேர்தலை நடத்துங்கள்" என்றார். 

இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "இடைத்தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. தயார். 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க.-வே வெற்றிபெறும்" என்று குறிப்பிட்டார். இதற்கிடையே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை அ.தி.மு.க-வும் நியமித்திருக்கிறது. ஆளும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்கும், தினகரனுக்கும் இடையே இடைத்தேர்தல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பரபரப்பான விவாதம் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், "20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் அது தி.மு.க-வுக்கும், அ.ம.மு.க-வுக்கும்தான் போட்டியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இதே கருத்தைத்தான் அரசியல் விமர்சகர்களும் முன் வைக்கிறார்கள். "தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் மட்டுமல்லாது, திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் இப்போது காலியாகவே இருக்கின்றன. இந்த 20 தொகுதிகளிலும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல், வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இது, தமிழகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், அந்த அமைப்புகளுக்குப் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில், அந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்த முன்வரவேண்டும். அப்படி தேர்தல் நடத்தாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகும். இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் அ.தி.மு.க., அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தினகரன் தலைமையில் செயல்படும் அ.ம.மு.க. மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி ஏற்படும். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், விரைவில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அதனைப் பயன்படுத்தி தன் செல்வாக்கை உயர்த்தித்கொள்வதில் உறுதியாக உள்ளார். எப்படியாவது தி.மு.க.-வை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருக்கும். அதேநேரத்தில், ஆளும் கட்சியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஒரே கொள்கையில் தினகரனும் களமிறங்குவார்.

எனவே, இந்த இடைத்தேர்தல் மூன்று கட்சிகளுக்குமே முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். தி.மு.க-வைப் பொறுத்தவரை, அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகச் செயலாற்றும். தி.மு.க-வின் வாக்குச் சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. அ.தி.மு.க.-வும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராடும். உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறிவரும் தினகரனும், தன் கூற்றை நிரூபிக்க போராடி வேண்டி வரும்.  அவர், 'ஏற்கெனவே அ.தி.மு.க. தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது' என்று சொல்லிவருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின்மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், தன்னுடைய ஆதரவாளர்களை எப்படியும் ஜெயிக்கவைத்து தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார். எனவே, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகிய மூவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதுகுறித்து பேசிய தினகரன் ஆதரவாளர்கள், "20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால், அனைத்திலும் ஜெயிக்கப்போவது நாங்கள்தான். ஏனெனில், அ.தி.மு.க-வுக்கு தமிழக மக்களைப் பற்றிக் கவலையில்லை. இருக்கும்வரை சுருட்டிக்கொண்டு போவதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். அதனால், இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் நாளை இடம்தெரியாமல் போய்விடுவார்கள். இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றி மக்கள் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், எங்கள் அண்ணன் டி.டி.வி.-க்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. அத்துடன், அவரது ஆதரவாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே (18 தொகுதிகள் மட்டும்) இடைத்தேர்தல் நடக்கயிருப்பதால், அவர்களே மீண்டும் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்ய நினைப்பார். ஆனால் தி.மு.க.-வோ, அ.தி.மு.க-வோ மக்களைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காது. குறிப்பாக, தி.மு.க. இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஆட்சியமைக்க நினைக்காது. அதற்காக இந்தத் தேர்தலில் அது பெரிய அளவில் ஈடுபடாது. அதுபோல அ.தி.மு.க-வும் ஏனோதானோவென்றுதான் தேர்தல் பணிகளில் ஈடுபடும். தினகரன் மட்டும்தான் இந்தத் தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வேலைகளில் இறங்குவார். இந்தத் தேர்தலில் தன் பலத்தை நிரூபிப்பதோடு, எதிர்காலத்தில் அ.தி.மு.க-வையும் கைப்பற்றுவார்" என்றனர், நம்பிக்கையுடன்.

இடைத்தேர்தல் வந்தால் மட்டுமே தெரியும் இந்தக் கட்சிகளுடைய நிலைமை?