Published:Updated:

``யாருக்காக ஊழல் விழிப்புஉணர்வு வாரம்?" சாட்டையைச் சுழற்றும் சமூக ஆர்வலர்

``யாருக்காக ஊழல் விழிப்புஉணர்வு வாரம்?" சாட்டையைச் சுழற்றும் சமூக ஆர்வலர்
``யாருக்காக ஊழல் விழிப்புஉணர்வு வாரம்?" சாட்டையைச் சுழற்றும் சமூக ஆர்வலர்

ழல் செய்தவர்களே பல தருணங்களில் ஊழலுக்கு எதிரான விளம்பரம் கொடுப்பதுதான் இந்த நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு. அப்படியான சூழலில்தான், இங்கு ஆளக்கூடியவர்கள் நம்மை நிற்க வைத்துள்ளார்கள் எனலாம்.     

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் ``ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புஉணர்வு வாரம்" அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி நவம்பர் 4-ம் தேதிவரை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில் ``நேர்மை தவறாமை" குறித்த உறுதிமொழியை மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் எடுத்துக்கொண்டனர். ரயில்வே, சுங்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்களில் அடங்குவர். ஊழல் கண்காணிப்பு விழிப்புஉணர்வு வாரம் குறித்த விளம்பரங்கள், அனைத்துச் செய்தித் தாள்களிலும் வெளியாகியிருந்தன. 

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த ஊழல் கண்காணிப்பு வார விழிப்புஉணர்வு நிகழ்ச்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், ``ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகளாக இருக்கும்போது, இதுபோன்ற விளம்பரங்கள் எதற்காக? அவை மக்களை ஏமாற்றவா?" எனக் கொதிக்கிறார்கள்.  

இதுகுறித்து மேலும் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம், `` `ஊழலை ஒழிப்போம், புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற முழக்கத்துடன் ஊழல் கண்காணிப்பு வார நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தியுள்ளது. அந்த வாசகத்துக்கு ஏற்றவாறு என்ன மத்திய-மாநில அரசுகள் என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளார்கள்? 

நான்கு ஆண்டுகளுக்கு ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் ஊழல் மலிந்து இருப்பதாகவும், லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்றும் பி.ஜே.பி. அப்போது மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் இருக்கும்' என்று இப்போது பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடி பேசினார். ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ள நிலையிலும், இதுவரை லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரவில்லை. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாராகி விட்டார் மோடி. அப்போதும் லோக்பால் கொண்டு வருவோம் எனப் பேசுவார். இது ஒருபுறம் என்றால் ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக அரசுத் துறையில் பணியாற்றுகையில் ஒரு அதிகாரி ஊழல் செய்திருப்பது, அவர்  ஓய்வு பெற்ற பின் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோன்ற பல திருத்தங்களை இந்தச் சட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். `ஊழல் ஒழிப்புச் சட்டம்' என்பதை `ஊழல் பாதுகாப்புச் சட்டம்' என்று மத்திய திருத்தி அமைத்து விட்டது. 

இதேபோன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊழலை அம்பலப்படுத்துகிறார்கள் என்பதால், அந்தச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு இப்போது தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு பிரிவாகச் சேர்த்து, அந்தச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 

மத்திய அரசின் நடவடிக்கை இது என்றால், `ஊழலை ஒழித்து விடுவோம்' என்று அறைகூவல் விடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் பல்வேறு கொள்கைரீதியிலான நடவடிக்கைகளும் நீர்த்துப் போய்விட்டன. குறிப்பாக, இந்த அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி சட்டம் போன்றவை செல்லாக் காசாகி விட்டன. தவிர, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற மிகப்பெரும் தொழிலதிபர்கள், வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர். அவர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையே தற்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்குக்கூட எதுவும் தெரியவில்லை. அதைப்பற்றிக் கேட்டால், `உயர்மட்ட அளவில் முடிக்கப்பட்ட ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்' என்று தெரிவிக்கிறார்கள். முன்னாள் மத்தியஅமைச்சர்கள் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்கா, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ இயக்குநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கைக்குப் பதிலாக சி.பி.ஐ உயர் அதிகாரிகளே மாற்றப்படுகிறார்கள்.

மத்திய அரசின் நிலை இப்படி என்றால், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மீதான ஊழல் பட்டியல் இன்னும் பெரிய உச்சத்தைத் தொடுகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் வழங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக முதல்வருக்கு எதிராக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யும் அறிக்கையைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலை தெரியவரும்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் உள்ளது. தவிர, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மீது சாலைகள் போடுவது தொடர்பான ஒப்பந்த ஊழல், ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்கு என ஊழல் பட்டியல் நீள்கிறது. குட்கா வழக்கில் காவல்துறை டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில் தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எனத் தமிழகம் முழுவதும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஊழல் தடுப்பு விழிப்புஉணர்வு வாரம் யாருக்காகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை" எனக் கேள்வி எழுப்பினார்.