Published:Updated:

` ஜெயலலிதா - விஜயகாந்த் மாதிரி ஸ்டாலினும் நானும்!' - தினகரன் திட்டம் பலிக்குமா?

வி.சி.கவை வெளியேற்றுவதன் மூலம் இந்த அணியை பலவீனப்படுத்திவிட முடியும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். அது எங்கள் மீதான டார்கெட் கிடையாது. தி.மு.க மீதான இலக்கு இது.

` ஜெயலலிதா - விஜயகாந்த் மாதிரி ஸ்டாலினும் நானும்!' - தினகரன் திட்டம் பலிக்குமா?
` ஜெயலலிதா - விஜயகாந்த் மாதிரி ஸ்டாலினும் நானும்!' - தினகரன் திட்டம் பலிக்குமா?

` ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் சந்திப்பு' என வெளியான தகவல் ஒன்று அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ` தி.மு.கவுக்கும் தினகரனுக்கும் இடையில் பாலமாக செயல்பட்டு வருகிறார் திருமாவளவன். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் தினகரன் தரப்பில் விவாதித்து வருகின்றனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலிலும் கூட்டணி விஷயங்கள் இன்னும் இறுதி வடிவத்துக்கு வரவில்லை. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இந்த அணிக்குள் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற விவாதமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் சமீபத்திய பேட்டி ஒன்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் நிர்வாகி ஒருவர், ` முத்துராமலிங்கத் தேவர் நினைவஞ்சலிக்குச் சென்றபோது, ஸ்டாலினும் தினகரனும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் இருவரும் அரசியல் தொடர்பாக விவாதித்ததாகவும் தகவல் பரவியது. அந்த ஹோட்டலில் பலமுறை தங்கியிருக்கிறேன். ஆனால், அவருடன் பேசவில்லை என தினகரன் மறுப்பு தெரிவித்தார். தி.மு.க தரப்பில் துரைமுருகனும் இந்தத் தகவலை மறுத்தார். பா.ஜ.க தலைவர் தமிழிசையும், ` சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. சந்திப்பு ரகசியமாக இருந்திருந்தால் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்பாக இருக்கும்' எனப் பேட்டி அளித்திருந்தார். இப்படியொரு மாற்றத்துக்காகத்தான் தினகரன் காத்திருக்கிறார். அதையொட்டியே சில அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார்" என விவரித்தவர், 

`` நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குள் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். ஆனால், அ.ம.மு.கவை அணிக்குள் கொண்டு வருவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை. இதுதொடர்பாக, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த தினகரன், ` தி.மு.க விலகிவிட்டால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி' எனக் கூறியிருந்தார். அதே பேட்டியில், `தேசியக் கட்சிகளான பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் மாநிலக் கட்சிகளை மதிப்பதில்லை' எனவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், `கூட்டணி குறித்து மாநிலக் கட்சிகளுடன் பேசி வருகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். தினகரன் குறிப்பிடும் கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. ` ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையில் பாலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் திருமாவளவன்' எனவும் சொல்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பில் வி.சி.க-வின் முக்கிய நிர்வாகியிடம் விவாதித்துள்ளனர் தினகரன் தரப்பினர். அப்போது, ` ஸ்டாலினுக்காகத்தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை, தினகரனை சந்திக்கத் தயங்குகிறது. ஸ்டாலின் வெற்றிக்கு அவர் குறுக்கே நிற்கப் போவதில்லை. எங்களுடைய பிரதான எதிரி எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும்தான். சின்னம்மா காலில் விழுந்து பதவியைப் பெற்ற பிறகு எங்களுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒழிப்பதுதான் எங்களுடைய லட்சியம். இதை நீங்கள் ஸ்டாலினிடம் சொல்ல வேண்டும். எங்களுடைய பலத்துக்கு ஏற்றவாறு ஸ்டாலின் டிக்கெட் கொடுத்தால், நிச்சயமாக பெரிய அணியாக மாறும்.

பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க அ.ம.மு.க தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய அவசியமும் தி.மு.க-வுக்கு இல்லை. எங்களுக்கு அதிக சீட்டுகளைக் கொடுத்தால் அந்த அணிக்குள் வருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. கிறிஸ்துவ, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்கிறது. நாம் ஒன்று சேர்ந்தால் நாற்பது தொகுதிகளிலும் வெல்ல முடியும். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் 2011 தேர்தலில் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வென்றனர். அதுவே, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி அமைத்திருந்தால் அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்க முடியும். தி.மு.க-வும் வந்திருக்காது. மத்திய அரசின் அதிகாரமும் அப்போது விஜயகாந்த் பக்கம் வந்திருக்கும். இப்போது தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒன்று சேர்ந்தால் மத்திய அரசு நம்பக்கம் வந்துவிடும். இதைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறுங்கள். மத்திய அமைச்சரவையில் உங்களை எம்.ஓ.எஸ் (இணையமைச்சர்) ஆக்கவும் முயற்சி எடுப்போம்' எனக் கூறியதாகவும் தகவல் வந்தது" என்றார் விரிவாக. 

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். `` இது முழுக்க தவறான தகவல். நாங்கள் தி.மு.க அணியில் இருக்கிறோம். அதில் எந்தவித மாறுபாடும் இல்லை. அ.ம.மு.கவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்தில் பா.ம.க மற்றும் தினகரன் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எனவே, கூட்டணிக்கான வாய்ப்பு என்பது அவர்களுக்குள்தான் இருக்கிறது. கமல், பா.ம.க, தினகரன் ஆகியோர் ஓரணியில் சேருவதற்கான வாய்ப்பு இருக்கலாம். இதைத்தான் தினகரன் கூறியிருக்கிறார். தேசம் காப்போம் மாநாட்டுக்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

நேற்று கூட சந்திரபாபு நாயுடுவைத் தலைவர் திருமாவளவன் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். தி.மு.க அணியில் இருந்து வி.சி.கவை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். காரணம், வி.சி.கவை வெளியேற்றுவதன் மூலம் இந்த அணியை பலவீனப்படுத்திவிட முடியும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். அது எங்கள் மீதான டார்கெட் கிடையாது. தி.மு.க மீதான இலக்கு இது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்படிப்பட்ட தகவல்கள் வெளியாகிறது. காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க, ம.ம.க, முஸ்லிம் லீக் ஆகிய ஏழு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இது வெற்றிக் கூட்டணி என அனைவருக்கும் தெரிகிறது. இதை பலவீனப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்கள் ஒதுக்கப்படுவதாகப் பேசி வருகின்றனர். இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றார் பொறுமையாக.