Published:Updated:

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”
பிரீமியம் ஸ்டோரி
“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”
பிரீமியம் ஸ்டோரி
“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு என்று தமிழகமே தகித்துக்கிடக்கும் நேரத்திலும், சி.எஸ்.கே கேப்டன் தோனியைச் சந்தித்து, கூலாக ஆட்டோகிராப் வாங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். ‘இந்த ரணகளத்திலும் எப்படி இப்படி..?’ என்ற கேள்வியோடு அவரைச் சந்தித்தேன்.

“பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கிரிக்கெட்னா என்னன்னே தெரியாது எனக்கு. ‘எத்தனை கோல் போட்டிருக்கான்?’னுதான் கேட்டிருக்கேன். ‘அட இது ஒண்ணும் கஷ்டமானது இல்லைய்யா. பக்கத்துல உட்காரு... நான் சொல்லித்தர்றேன்’னு தலைவர் கருணாநிதிதான் அரைமணி நேரத்துல கிரிக்கெட் ரூல்ஸையெல்லாம் சொல்லித்தந்தாரு. அப்புறம் எனக்கும் கிரிக்கெட் பிடிச்சுப்போச்சு.

சமீபத்தில் காலில் அடிபட்டுப் பத்து நாள்களாக நடக்க முடியாமல் போய்விட்டது. அப்போ, ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துமுடித்தேன். ஃபைனல் அன்று வேலூரில் இருந்தேன். சன் ரைசர்ஸ் அணி அடித்த அடியில், ‘இனி எங்கே சி.எஸ்.கே ஜெயிக்கப்போகிறது’ என்ற நினைப்போடு மேட்ச் பார்க்காமலேயே சென்னைக்குக் கிளம்பிவிட்டேன். சென்னை வந்தபிறகுதான் ஸ்டாலினுக்கு போன் பண்ணி, ‘என்னப்பா ஆச்சு மேட்ச்?’ என்று கேட்டேன். ‘அண்ணே தெரியாதா உங்களுக்கு... ஜெயிச்சாச்சு அண்ணே’ என்றார்.’’

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

“நாடே பரபரப்பாக இருக்கும் இந்தச் சூழலில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர், விளையாட்டு வீரரைச் சந்தித்து டி-ஷர்ட்டும் ஆட்டோகிராப்பும் வாங்கிவந்தது சரிதானா?’’

“இதென்ன பஞ்சமா பாதகமா... இதிலென்ன இருக்கிறது? எனக்கு கிரிக்கெட் மட்டுமா பிடிக்கும், கர்நாடக இசைகூடத்தான் பிடிக்கும். டிசம்பர் மாதம் எல்லாக் கச்சேரிகளுக்கும்தான் போய்வருகிறேன். கார் பயணங்களில்கூட சினிமா பாடல்கள் கேட்கமாட்டேன்.... நாதஸ்வர  இசைதான் கேட்கிறேன்.

புதிய சட்டசபைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட புதிதில், தமிழகம் வந்திருந்த தோனிக்கு தலைமைச் செயலகத்தை நானும் ஸ்டாலினும்தான் சுற்றிக்காட்டினோம். இப்போது சென்னை வந்திருந்தவரிடம் அந்தப் பழைய சம்பவங்களை எல்லாம் எடுத்துச் சொன்னேன். ‘என் பேரன், பேத்திகள் எல்லோருமே உங்கள் ரசிகர்கள்தான். அவர்கள் வெளியூரில் இருப்பதால் அழைத்துவர முடியவில்லை’ என்றேன். உடனே டி ஷர்ட்களில் கையெழுத்துப் போட்டுத் தந்த தோனி, அவற்றை என் பேரன் - பேத்திகளிடம் கொடுக்கச்சொல்லித் தந்தார். அவ்வளவுதான்!’’

“அரசியலுக்கு வரும் எல்லோரும் ‘வெற்றிடம் வெற்றிடம்’ என்கிறார்களே, உண்மையிலேயே வெற்றிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா?’’


“ ‘வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ என்பது விஞ்ஞானம். எனவே, இயற்கையிலேயே வெற்றிடம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ‘காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தின் மதிப்பைப் பெற்றிருக்கக்கூடிய தலைவராக இப்போது யாரும் இல்லை’ - என்ற நினைப்பில் இப்படிச் சிலர் சொல்கிறார்கள்.

‘சுதந்திரா கட்சி’யின் தலைவர் ராஜாஜி  திறமைசாலி. ஆனாலும் ஒரு தேர்தலில் அந்தக் கட்சி தோற்றபிறகு அந்தக் கட்சியும் அழிந்துவிட்டது; அவரும் காணாமல் போய்விட்டார். அதன்பிறகு வந்த கா.கா.தே.கா., மா.கா.மூ.கா-ன்னு எத்தனையோ கட்சிகளும் வந்த இடம் தெரியாமலே போய்விட்டன. ஆனால், தி.மு.க என்பது கட்சியல்ல, இயக்கம்! சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட  இயக்கம். அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, அந்த இடத்தை நிரப்ப கருணாநிதி வந்தார். இப்போது 95 வயதில், செயல்பட முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அதனாலேயே இயக்கமும் செயல்படாமல் இருந்துவிடாது.

தி.மு.க-வில் கருணாநிதியின் இடத்தில், இன்றைக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கிறார். நாளை ஸ்டாலினுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இன்னொருத்தர் வருவார்!’’

“கருணாநிதியின் இடத்தை மு.க.ஸ்டாலினால் நிரப்ப முடியும் என்று நினைக்கிறீர்களா?’’

“ஸ்டாலின், பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே, அவரது வளர்ச்சியை அணு அணுவாகப் பார்த்துவருகிறேன். 50 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதியோடு இணைபிரியாமல் இருந்துவருகிறேன். அந்தவகையில் அவரது ராஜதந்திரங்கள், அணுகுமுறைகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.

ஒரு பிரச்னையை விடா முயற்சியோடு தொடர்வதில், கருணாநிதி கெட்டிக்காரர் என்றால், அதில் கொஞ்சமும் குறையாதவர் ஸ்டாலின்.  செயின் ஸ்மோக்கர் எப்படி ஒரு சிகரெட் முடிந்துபோவதற்குள் அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்துத் தொடர்வானோ, அதேபோல், கோட்டையிலிருந்து வெளிநடப்பு செய்து வெளியே வரும்போதே, ‘நாளை அறிவாலயத்தில், மாதிரி சட்டசபையை நடத்திடலாம்’ என்று சொல்லிவிட்டார்.  ‘ஐயோ... விடமாட்டே போலிருக்கே’ன்னே சொல்லிட்டேன்.

ஒரு தலைவனுக்கான முதல் தகுதியே, சோம்பல் இருக்கக்கூடாது; போதும் என்ற மனமும் இருக்கக்கூடாது. அந்தவகையில், தொடர்ந்து தனது முழு பலத்தையும் பிரயோகப்படுத்திப் போராடுபவர் ஸ்டாலின். இதனாலேயே, ‘உங்க அப்பாவாவது கொஞ்ச நேரம் கேப் விடுவார். ஆனால், நீ அதைக்கூட விடமாட்டேன் என்கிறாயே’ என்று ஸ்டாலினிடமே சொல்லியிருக்கிறேன்.’’

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

“சமீபகாலமாகத் தி.மு.க மேடைகளில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறாரே?’’

“அவரை நாங்கள் ஒன்றும் முன்னிறுத்தவில்லையே. தி.மு.க-வில் எல்லா வீட்டுக் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். என் பையன் வந்தான், யாரும் கேட்கவில்லை.பொன்முடி பையன் வந்தான், யாரும் கேட்கவில்லை. இப்போது உதயநிதி ஸ்டாலின், அவரது அப்பா செயல் தலைவராகி மாநாடு நடத்துவதால் மகிழ்ச்சியோடு வந்து கலந்துகொள்கிறார். உடனே எல்லோரும் கேள்விமேல் கேள்வி கேட்கிறீர்களே, ஏன்?”

“அனல் பறக்கும் அரசியலின் இறுக்கமான சூழ்நிலையையும் தனிப்பட்ட உங்களது நகைச்சுவையால் கலகலப்பாக்கிவிடுகிறீர்களே?’’

“எனக்கு எப்போதுமே சீரியஸ் பிடிக்காது. எம்.எல்.ஏ தேர்தலில், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் ஜெயித்திருக்கிறேன். ராஜீவ்காந்தி இறந்துபோன 1991 தேர்தலில் மட்டும்தான் தோல்வியுற்றேன். ஆனால், தேர்தல் முடிவு என்னவென்று தெரியாமல், எனக்கு  சுற்றுவதற்காக வீட்டில் ஆரத்தி தயார் செய்து எனக்காகக் காத்திருந்தார்கள்.

‘போனால் போகட்டும் போடா...’ என்று பாடிக்கொண்டே நான் வீட்டுக்குள் நுழைந்தேன். ‘என்னங்க, சும்மா விளையாடாதீங்க...?’ என்று எல்லோரும் அதிர்ச்சியாகிக் கேட்டார்கள். ‘அட ஆமாம்மா... தோற்றாச்சு... ஆனாலும் பரவாயில்லை... ஆரத்தியை வேஸ்ட் பண்ணாம சும்மா சுத்துங்க’ன்னு கேட்டு வாங்கி சுத்திக்கிட்டேன். அப்புறமா வீடே சகஜமாயிடுச்சு...’’

“இணையத்தில், ‘ஓவியா ஆர்மி’யை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் ‘துரைமுருகன் ஆர்மி’யைக் கவனித்தீர்களா....?’’

(குலுங்கிச் சிரிக்கிறார்) “நானும் கேள்விப்பட்டேன். ஆனாலும் கட்சி வேலை பரபரப்பில் இன்னமும் நானே அந்த வீடியோக்களைப் பார்க்கவில்லை’’

“ ‘ஸ்டாலின் தலைமையில் தி.மு.க டெபாசிட்கூட வாங்காது’ என்ற அழகிரியின் கருத்துக்கு தி.மு.க தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையே...?’’

(நீண்ட யோசனைக்குப் பின்...) “நோ கமெண்ட்ஸ்...’’

‘’தமிழகத்திலிருந்து தோசை சுட்டுத்தரச் சொல்லிக் கேட்கும் பிரதமர் மோடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லையே...?’’


“அவர் சொல்வது இருக்கட்டும், 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமும் கொடுத்ததாகச் சொல்கிறது ஆளுங்கட்சி. ஆனால், சட்டசபை கவன ஈர்ப்புத் தீர்மான அறிக்கையிலோ, ‘தண்ணீர் பீய்ச்சியடித்தோம், தடியடி நடத்தினோம்’ என்றெல்லாம்தான் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு இடத்தில்கூட துப்பாக்கிச் சூடு குறித்த ஒரு வார்த்தையைக்கூட குறிப்பிடவில்லை. ஆக முதல்வரே சொல்லவில்லை என்கிறபோது, பிரதமர் சொல்வதற்கு என்ன இருக்கிறது?’’

“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!”

“இன்னும் மூன்று மாதங்களில் காட்சி மாறும், ஆறு மாதங்களில் ஆட்சி மாறும் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து நீங்கள் யூகம் தெரிவிக்கிறீர்கள். ஆனால், அவர்களோ சாதனை விழா எடுக்கிறார்களே?’’

“மத்தியஅரசுக்கு அ.தி.மு.க அமைச்சர்களைப் போன்ற அரபு நாட்டு அடிமைகள் யாரும் கிடைக்கமாட்டார்கள். ஆட்சியைக் கலைப்பது என்பது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. ஆனால், கலைந்து போவதென்பது இவர்கள் கையில் இருக்கின்றது. ஏனெனில், 18 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வருவார்கள், அவர்கள் பக்கம் போகிறார்கள் என்றெல்லாம் மாறி மாறி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், கலைந்துபோகிறவர்கள் இவர்கள்; கலைக்கிறவர்கள் அவர்கள். இந்த இரண்டில் எது நடக்கிறதோ... அதுவரை வண்டி ஓடும்!’’

“ ரஜினிகாந்தின் அரசியல் எப்படி இருக்கிறது?’’

“ ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்கிறார். ‘எப்படித் தெரியும்...’ என்று எதிர்க் கேள்வி கேட்டால், ‘அது எனக்குத் தெரியும்!’ என்கிறார். தெரிந்தால், சட்டத்துக்கு முன் அவர்களைக் காட்டிக் கொடுக்கவேண்டும். மாறாக ‘சமூக விரோதி’களை மறைத்துவைத்தால், அது மிகப்பெரிய தவறு. இதுகூட அவருக்குத் தெரியவில்லை... பாவம்!

‘அ.தி.மு.க வண்டி இனி எடுபடாது’ என்று நினைத்து இப்போது ரஜினியை வைத்துக்கொண்டு ஓட்டலாமா என்று பி.ஜே.பி நினைக்கிறது. ஆனால், கமல்ஹாசனாவது ஏதாவது வசனம் பேசிக்கொண்டு சமாளித்துவருகிறார். ரஜினிகாந்த் முதல்முறையாக வாயைத் திறக்கும்போதே பிளாப் ஆகிவிட்டார்”

‘’அரசியலில் ரஜினி - கமல் இருவரில் யார் பெஸ்ட் என்று நினைக்கிறீர்கள்?’’

‘’ரெண்டு பேருமே பெஸ்ட் கிடையாது.’’