Published:Updated:

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4

தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அபாயம் விளைவிக்கும் ஆபத்து கொண்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறையை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விட்டு மத்திய, மாநில அரசுகள் ஆலை அமைக்க அனுமதி கொடுத்தன. மக்களின் கடுமையான எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. ஆலையை தடை செய்யக் கோரி போராட்டங்கள் வலுத்தபோதிலும், ஆலை செயல்பட தொடங்கியது.

அரசாங்கம், அதிகாரிகள், சில சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள் என முக்கியமான அங்கத்தினர் அனைவரும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக களம் இறங்கியதால் ஏழைகளில் கூக்குரல் எடுபடவில்லை. இதனால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997 நவம்பர் 7-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4

தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், "ஸ்டெர்லைட் நிர்வாகம் விதிமுறையை மீறி செய்லபட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறி விட்டனர்.ஆலையில் விபத்து ஏற்பட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படாமல் அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு இருக்கும் மன்னார் வளைகுடாவுக்கு வெகுஅருகில் இருக்கும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதே அடிப்படையான தவறு. மத்துய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வர்ரியமும் விதிமுறைகளை மீறி இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்து இருக்கின்றன. அதனால் இந்த ஆலையை தடை செய்ய வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


விபத்தும் உயிரிழப்பும்

இதனிடையே,ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கியதில் இருந்தே தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்வதற்கு பழகி விட்டனர்.1997-ல் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் திடீரென ஆலையில் ஏழு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.அந்த சமயத்தில் அந்த ப்குதியில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி நூலிழையில் உயிரை தக்க வைத்துக் கொண்டனர்.

சில மாதங்களுக்கு பின்னர் கந்தக குழாய் வெடித்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உடல் வெந்து உயிரிழந்தார்.அதே வருடம் ஜூலை 5-ம் தேதி ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேறியது. இதில் அருகில் உள்ள பூ கம்பெனியில் வேலை செய்த 165 பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக இதில் தலையிட்ட அதிகாரிகள் மறுநாளே ஆய்வு செய்து அங்கு நடந்த விபத்து காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டனர்.38 நாட்களுக்கு பின்னர் ஆலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.ஆனால், அடுத்த மாதமே மற்றொரு விபத்து.அங்குள்ள செம்புக் கலவை உலை வெடித்து சிதறியதில் நெருப்பு ஜுவாலை பனை அளவுக்கு எரிந்தது.தூத்துக்குடி நகர மக்கள் இந்த விபத்தை கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.

இந்த விபத்தில் சிக்கிய பெருமாள், சங்கர் என்ற இரு தொழிலாளர்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தனர். மூன்று பேர் பலத்த தீ காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தூத்துக்குடி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.இதனை சமாளிக்க நினைத்த மாவட்ட நிர்வாகம்,உடனடியாக ஆலைக்கு சென்று சோதனை நடத்தியது. அத்துடன் மறுநாளில் ஆலையை மூடவும் உத்தரவிட்டது.இரண்டு மாதத்துக்குள் மக்களிடன் கோபம் சற்று மறைய தொடங்கியதும் மீண்டும் ஆலை திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியது.
 
1998 நவம்பர் மாதத்தில் கசல்ஃப்யூரிக் அமிலம் செல்லும் குழாய் வெடித்து சிதறியது. அப்போது அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டு இருந்த 5 பொறியாளர்களும் ஒரு கூலித்தொழிலாளியும் அமிலம் தெறித்ததில் உடல் முழுவதும் வெந்து போனார்கள். அடுத்த சில நாட்களிலேயே ஆயில் டேங்க் வெடித்து தீப்பற்றியதால் தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்கள். 1999 மார்ச் 3-ம் தேதி மீண்டும் ஆலையில் இருந்து நச்சுப்புகை அதிகமாக வெளியேறியது.இதனால் ஆலைக்கு அருகில் உள்ள ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றிய ஊழியர்கள் 11 பேர் மயக்கம் அடைந்தனர்.உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.

அனுமதி இல்லாமலே விரிவாக்கம்

ஆலையில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை கொண்ட அமிலங்கள் கலந்து இருக்கின்றன.இந்த புகை காற்றில் கலந்து விட்டல் அதனை கண்டு பிடிக்க முடியாது.ஆனால், அதனை சுவாசிப்பவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்.இந்த புகையானது காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்து விட்டால், அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால், ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் அளவு அடிக்கடி அதிகரித்து வந்ததால் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நெஞ்சக நோய்கள்,தலை சுற்றல்,வாந்தி, கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகளை சுட்டிக் காட்டி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4

இத்தகைய கொடூரமான பக்க விளைவுகளை கொண்டிருக்கும் ஆலையின் செயல்பாடு லாபத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.இந்த ஆலை தொடங்கப்பட்டபோது, காப்பர் உருக்கு ஆலையில் இருந்து வருடத்துக்கு 70,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2005-ல் இந்த ஆலை நிர்வாகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,"ஆலையின் திறனை அதிகரித்து 3 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.இது தவிர காப்பர் கம்பிகள உற்பத்திக்காக புதிய பிரிவு தொடங்கபப்ட்டு இருக்கிறது" என தெரிவித்து உள்ளனர்.

ஆலைகளை பொறுத்தவரை, அதன் உற்பத்தியை அதிகரிக்கும் போது அதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டியது அவசியம்.அதே போல அந்த ஆலைக்கு அதன் துணை அமைப்புக்கான பிரிவுகளை புதிதாக நிர்மாணிக்கவும் அனுமதி அவசியம். ஆனால் இந்த அடிப்படை விதிகள் கூட ஆலை நிர்வாகத்தால் கடைபிடிக்கப்படவில்லை என்கிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

விதிமுறை மீறல்களுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் குட்டுப்பட்ட விவரங்களை நாளை பார்க்கலாம்..