‘அண்ணா திராவிடர் கழகம்’ என்று அதிரடியாக புதிய கட்சியைத் தொடங்கிய திவாகரன், அடுத்த அதிரடியாக தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை ஒட்டுமொத்தமாக வளைக்கப்போகிறார் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்.
அரசியலில் பரபரப்பான செய்தி வரும் என்று கூறிவந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி ‘அம்மா அணி’யைத் தனிக் கட்சியாக அறிவித்தார் திவாகரன். ‘நிழல் நிஜமாகிறது’, ‘வருங்காலத் தமிழகமே’ என்று திவாகரனின் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இன்னொருபுறம் புதுமனை புகுவிழா, திருமணம், இப்தார் நோன்பு திறப்பு, கோயில் வழிபாடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜூன் 9-ம் தேதி மன்னார்குடிக்கு வந்தார் தினகரன். ‘நாளைய முதல்வரே’ என்று தினகரனுக்கு அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
ஜூன் 10-ம் தேதி காலை எட்டு மணிக்கு மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திவாகரனின் கட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. எம்.ஜி.ஆரின் காதல் பாட்டுகள் ஸ்பீக்கரில் ஒலிக்க, முகம் சுளித்த நிர்வாகி ஒருவர், ‘‘தலைவரோட கொள்கைப் பாடல்களைப் போடுங்க’’ என்று கத்தினார். அதன்பிறகு, ‘நான் ஆணையிட்டால்...’ பாடல் ஒலித்தது. ‘‘அண்ணன் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அவரது அறையில் ஏ.சி போட்டுவிட வேண்டும்’’ என்று திவாகரன் உதவியாளர் பரபரத்துக் கொண்டிருந்தார். காலை 7.30 மணிக்கெல்லாம் சுந்தரக்கோட்டைப் பண்ணை வீட்டிலிருந்து கிளம்பிய திவாகரன், நேராக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலுக்குச் சென்று செங்கமலத் தாயார் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், தன் ஆதரவாளர் ஒருவரின் திருமண மண்டபத்தைத் திறந்துவைத்துவிட்டு, கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

‘‘நேரம் சரியாக இருக்கு. இப்பவே கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவிடலாம்’’ எனக் கொடிக் கம்பம் ஊன்றப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் திவாகரன் ஏற, அப்போது ஒருவர், ‘‘இனிமேல் அண்ணனுக்கு அரசியலில் ஏறுமுகம்தான்’’ எனக் கத்தினார். இடது ஓரத்தில் நீள் பட்டையாகக் கறுப்பு நிறமும், வலது புறம் மேலே சிவப்பு - கீழே வெள்ளை நிறங்களும் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரமும் இருப்பது போல் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடி சரியாகக் கட்டப்படாததால் கொடியின் ஒரு பகுதி லேசாகக் கிழிந்து தொங்கியது. அதனால், கொடி இறக்கப்பட்டது. ‘‘நான் தைத்துக் கொடுத்த கொடி எங்கே? யார் பார்த்த வேலைடா இது?’’ எனத் தன் உதவியாளரைப் பார்த்துச் சத்தம் போட்டார் திவாகரன். அதற்குள் கொடி சரி செய்யப்பட, மீண்டும் கொடியை ஏற்றி, ‘‘எப்படி பறக்குது பாருங்க’’ எனப் புன்னகைத்தார் திவாகரன்.
‘‘அம்மா அணி, இனிமேல் ‘அண்ணா திராவிடர் கழகம்’ எனத் தனிக் கட்சியாகச் செயல்படும். அதன் பொதுச்செயலாளராக நான் இருப்பேன். என் மகன் ஜெயானந்த், மாநில மாணவர் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பார்’’ என்றவர், கொடிக்கு விளக்கமும் சொன்னார். ‘‘கொடியில் உள்ள கறுப்பு நிறம் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், சிவப்பு நம் ரத்தத்தையும் குறிக்கிறது. வெள்ளை என்பது சமாதானத்தையும் அறிவையும் குறிக்கிறது. கொடியின் நடுவே உள்ள பச்சை நட்சத்திரம் சுற்றுச்சூழலைக் குறிக்கிறது. அதன் ஒவ்வொரு கூர்மையும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் நினைவில் வரும் திராவிடத் தலைவர்களையும் குறிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்ற திவாகரன், ‘‘யாரைப் பற்றியும் நாம் பேசத் தேவையில்லை. நம் வேலையைப் பார்த்தாலே போதும்’’ என்று அழுத்தமாகச் சொன்னார். அதுபோலவே, தினகரன் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை..
திவாகரன் தனி அலுவலகம் திறந்தபோதே இங்கு வர நினைத்த தினகரனுக்கு, இப்போதுதான் நேரம் அமைந்தது. தவிரவும், தன் சொந்த ஊரான மன்னார்குடியில் தன் பவரைக் காட்ட நினைத்த தினகரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடாகியது. தினகரனிடம் அவரின் ஆதரவாளர்கள், ‘‘திவாகரன் கட்சி பெயரை அறிவித்த பிறகு பேட்டி கொடுக்கலாம்’’ என்றனர். அதற்கு தினகரன், ‘‘அவர் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். அவரை ஃபாலோ செய்ய வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு பிரஸ்மீட்டுக்கு வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘என் முன்னாள் மாமா இப்போது கட்சி ஆரம்பிப்பதால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று மட்டும் கூறிவிட்டு, திவாகரனை விமர்சித்துப் பேசாமல் ஆளும்தரப்பை மட்டும் தாக்கிப் பேசினார். உள் விவரம் அறிந்தவர்களோ, “திவாகரனின் மூவ்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தினகரன். மன்னார்குடி வருவது முடிவு செய்யப்பட்டதுமே ஜூன் 6-ம் தேதி சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை செய்தார். அப்போது சசிகலா, ‘கட்சி வேலையை மட்டும் பார். திவாகரன் குறித்து எதுவும் பேச வேண்டாம்’ என்றிருக்கிறார். மேலும், தன் கணவர் நடராசனின் சகோதரர்கள் மூலமாக திவாகரனுக்கும் சில கட்டளைகளைச் சொல்லியிருக்கிறார் சசிகலா. ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். நம் குடும்பங்களைப் பற்றியோ தினகரனைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது’ என முக்கியமாகச் சொல்லியிருக்கிறார். அதனால், திவாகரனும் தினகரன் குறித்து எதுவும் பேசவில்லை’’ என்றனர்.
திவாகரன் வட்டாரத்தில் பேசினோம். ‘‘பிரிந்து கிடப்பவர்களை ஒன்றாகச் சேர்த்து நேரம் வரும்போது தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணைப்பேன் என்று திவாகரன் சொன்னார். அதன்படி, தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணையத் தயாரானார். அதற்கு எடப்பாடியும் பன்னீரும் ஒப்புக்கொண்டாலும், சில சீனியர் அமைச்சர்கள் சம்மதிக்கவில்லை. ‘பொறுமையாக இருந்து உங்கள் பலத்தைக் காட்டுங்கள். அப்புறம் கட்சியில் இணையலாம்’ என்று திவாகரனுக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான், அண்ணன் கட்சி ஆரம்பிச்சுட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ-க்களில், நான்கு பேரை திவாகரன் வளைத்து விட்டார். இன்னும் சிலருடனும் பேசிக்கொண்டிருக்கிறார். தீர்ப்பு வந்தவுடன், திவாகரனின் வழிகாட்டுதல்படி அவர்கள் அ.தி.மு.க-வில் இணைந்துவிடுவார்கள். அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் கட்சிப் பதவிகளும் கொடுக்கப்படும். அவர்களை அழைத்துச் சென்று, கம்பீரமாக திவாகரன் தன் கட்சியை அ.தி.மு.க-வுடன் இணைத்துக்கொள்வார். இதுதான் தற்போதைய திட்டம்’’ என்றனர்.
ஆளும்தரப்பிலோ இதைக் கேட்டு சிரிக்கிறார்கள். ‘‘இப்போது தினகரன் பக்கம் இருக்கும் 18 பேரும் ஆரம்ப காலத்திலிருந்து எங்களுடன் இருந்தவர்கள்தான். அவர்களுடன் பேசுவதற்கு எதற்கு திவாகரன். நாங்களே நேராகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தால், அது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும். இது எங்களுக்குத் தெரியாதா? அதனால் நாங்கள் அதிரடியாக அவர்களை நெருங்கியிருக்கிறோம். தீர்ப்பு வரும்போது என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். சசிகலா குடும்பத்தில் எல்லோரையும் மிரட்டுவதற்கு திவாகரன் எங்கள் பெயரைத் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்’’ என்கிறார் சீனியர் அமைச்சர் ஒருவர்.
- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி