Published:Updated:

``பி.ஜே.பி-க்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாத மாநிலம் தமிழகம்தான்!’’ - சொல்கிறார் வானதி சீனிவாசன்

``பி.ஜே.பி-க்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாத மாநிலம் தமிழகம்தான்!’’ - சொல்கிறார் வானதி சீனிவாசன்
``பி.ஜே.பி-க்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாத மாநிலம் தமிழகம்தான்!’’ - சொல்கிறார் வானதி சீனிவாசன்

மிழகத்தில்தான் பி.ஜே.பி-க்கு எம்.எல்.ஏ-க்களே இல்லை என்று தமிழக பி.ஜே.பி பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் சொல்லிப் புகழ்ந்தாலும், வானூர்தி ஊழல் பற்றி கேள்வி கேட்டாலும், முதல் பதிலாகப் புன்னகையைத் தந்துவிட்டே பேச ஆரம்பிக்கிறார் வானதி சீனிவாசன்!

``பாசிச பி.ஜே.பி என்று முழக்கமிட்ட ஷோபியாவைக் கைது செய்த காவல்துறை, ஷோபியா தொடுத்த புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையே?''

``பி.ஜே.பி-யை விமர்சனம் செய்ய எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால், விமானத்தில்  அப்படி ஒரு கோஷத்தை ஷோபியா எழுப்பலாமா... இது பற்றி யாருமே பேச மறுக்கிறார்கள். சட்டத்தின்படி முதலில் யார் புகார் கொடுக்கிறார்களோ அதுதான் 'முதல் தகவல் அறிக்கை'யாகப் பதியப்படும். அந்தவகையில், பி.ஜே.பி தலைவர் முதலில் புகார் கொடுக்கிறார். அடுத்தகட்டமாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் ஷோபியா கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாகச் சட்டத்துக்கு உட்பட்டு காவல்துறையும் நீதித்துறையும்தான் நடவடிக்கை எடுத்து வருகிறதே தவிர, இதில், `பாசிச பி.ஜே.பி’ என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை!
ஷோபியா தரப்பில், வழக்குப் பதியப்பட்டால், அதை எதிர்கொள்ள எங்கள் தலைவரும் தயாராக இருக்கிறார்! ஆனால், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எங்களிடம் கேட்டால், நாங்கள் என்ன பதில் சொல்வது?''

``பெட்ரோல் விலையேற்றம் நியாயம்தானா... என்ற கேள்வியைக் கேட்டதற்காகவே ஒரு சாமானியரை பி.ஜே.பி-யினர் தாக்குவதென்பது என்னவகையான அரசியல்?''

``தமிழிசை சௌந்தரராஜன், பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பின்னணியில்தான் இந்தச் சம்பவம் நடக்கிறது; அவரது கண் முன்னால் நடக்கவில்லை. பின்னர் இந்த விவரம் அவருக்குத் தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே செல்கிறார்.
அந்த ஆட்டோ டிரைவர் முன்வைத்தக் கேள்வி நியாயம்தான். எல்லாத் தரப்பிலிருந்து கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான உரியப் பதிலையும் எங்கள் கட்சித் தரப்பில் நாங்கள் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். எங்கேயுமே பதில் சொல்வதைத் தவிர்க்கவில்லை. ஆனால், ஒரு கட்சியின் தலைவர், நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென பின்னாளிலிருந்து கேட்கப்படும் கேள்விக்குத் திரும்பிப் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.’’

``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்க்கச்சொல்லி பிரதமர் மோடி நிர்பந்தப்படுத்தியதாகப் பிரான்ஸ் அதிபரே கூறுகிறாரே..?''

`` `அந்த மாதிரி நாங்கள் எதுவும் சொல்லவில்லை' என்று மறுத்தும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... டசால்ட் நிறுவனமும்கூட, `முழுக்க முழுக்க எங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் இந்திய நிறுவனங்களைத் தேர்வு செய்தோம்' என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி, விலை நிர்ணயம் முடிவு செய்யப்பட்டதுதான். ஆனாலும்கூட கடைசிவரை அவர்கள் விமானத்தை வாங்கவே இல்லை. ஏன் வாங்கவில்லை? நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொள்ள நினைத்தார்களா?

மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ராணுவ பலத்தை சரிவரக் கட்டமைக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், இந்திய அரசும் பிரான்ஸ் அரசும் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை முடிவு செய்கிறது. அதிலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட விலையைவிடவும் 67,000 கோடி ரூபாய் விலை குறைவாகத்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உடனே காங்கிரஸ்காரர்கள், அப்படி அந்த விமானத்தில் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன... என்று கேட்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு கருதி இதன் விவரங்களை வெளியே சொல்ல மறுக்கிறது பா.ஜ.க.

ஏற்கெனவே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே இதுபோன்ற ராணுவ விஷயங்களில், பாதுகாப்பு கருதி வெளியே சொல்லப்படாத விஷயங்கள் இருந்தன. அப்போது பா.ஜ.க-வும் 'அரசியலைத் தாண்டி நாட்டின் பாதுகாப்பு முக்கியம்' என்று அமைதிகாத்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும்கூட, ஊழல் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துடன் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.''

''ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லையெனில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டி உயர்மட்ட விசாரணை நடத்துவதில் பா.ஜ.க-வுக்கு என்ன தயக்கம்?''

''நடக்காத ஒரு விஷயத்தைச் சொல்லிக் குழப்பம் ஏற்படுத்துகிறது காங்கிரஸ் கட்சி. ஆனாலும்கூட பா.ஜ.க தரப்பிலிருந்து அதற்கும் தெளிவான விளக்கம் தரப்படுகிறது. இத்தனையையும் தாண்டி நாடாளுமன்றக் கூட்டுக்குழுவையும் கூட்டச்சொல்லி அழுத்தம் செய்கிறார்கள் என்றால், இது எந்தவிதமான அரசியல்? நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தை வீணடித்து ஒரு குழுவை உருவாக்குவது, அதையே சாதனையாக மக்களிடம் எடுத்துச்சொல்லி அரசியல் செய்வது... இதுதானே அவர்களது திட்டம்? இதற்கு நாங்கள் தயாராக இல்லை! நடக்காத ஊழலுக்கு நாங்கள் ஏன் குழு அமைக்க வேண்டும்? இத்தனையும் தாண்டி ஊழல்தான் நடைபெற்றுள்ளது என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால், அதற்கான ஆதாரங்களைக் கொண்டு வாருங்களேன்...''

``இறுதிப் போரில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி ராஜபக்‌சேவை பேசவைத்தது, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியைப் பலவீனப்படுத்தும் நோக்கம்தானே?''

''ராஜபக்‌சேவின் பேச்சுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம்? 

இறுதிப்போரின்போது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க அதை வேடிக்கை மட்டுமே பார்த்தது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க மட்டும் வைக்கவில்லை... ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுமே வைத்திருக்கிறார்கள். 'கடைசி நேரத்தில்கூட இந்திய அரசாங்கம் உதவி செய்திருந்தால், எங்கள் மக்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டிருப்பார்களே' என்று வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் வேதனையோடு கேட்கிறார்கள்.  

'இந்தியா மட்டும் எங்களுக்கு உதவியிராவிட்டால், இந்தப் போரில் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்ற விஷயத்தை ராஜபக்‌ஷே இப்போதுமட்டும் சொல்லவில்லை.... ஏற்கெனவே அவரது சகோதரரும், இலங்கைப் படைகளை வழிநடத்திய பொன்சேகாவும்கூட சொல்லியிருக்கிறார்களே....''

''இப்போது ராஜபக்‌ஷேவை இந்தியாவுக்கு வரவழைத்து இதுகுறித்துப் பேச வைத்ததன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறதா, இல்லையா?''

''இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு, பேச வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விஷயத்துக்குள் போக நான் விரும்பவில்லை. அதேசமயம், அவரது பேச்சில் உண்மை இருக்கிறதா, இல்லையா... என்ற கேள்வியை மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன். 

இந்திய அரசின் உதவி பற்றிய உண்மையை ராஜபக்‌ஷேவே ஒப்புக்கொள்கிறார். ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் வைகோ, திருமாவளவன் போன்றோர் 'தி.மு.க செய்தது பச்சைத் துரோகம்' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுவார்களா?''

''துன்பகரமான கேரள வெள்ளப்பெருக்கின்போதும்கூட, ஆர்.எஸ்.எஸ். மீட்புப் பணி என்று ஊடகத்தில் பொய்யாகப் புகைப்பட செய்திகளைப் பரப்புவதும், 'ஐயப்பன் கோபம்தான் வெள்ளத்துக்குக் காரணம்' என்று 'கண்டுபிடித்து'ச் சொல்வதும் மனிதாபிமானம்தானா?''

``நாட்டில் எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் முதலில் களத்தில் வந்து நிற்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். தன்னலம் கருதாது அவர்கள் ஆற்றும் பணிக்கு சுனாமி, சென்னை வெள்ளப்பெருக்குச் சம்பவங்கள் எல்லாம் உதாரணம். ஆனாலும்கூட தாங்கள் செய்துவரும் நற்பணிகள் - உதவிகள் பற்றி பிரபலப்படுத்துவது கிடையாது... பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதும் கிடையாது. சமூக ஊடக வளர்ச்சி அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட இடங்களில் உதவி செய்கிற ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்கள் அதிகாரபூர்வமாக அந்தக் களத்தில் இருந்திருக்கிறார்கள்... இந்த விஷயத்தைச் சொல்வதில் ஒன்றும் தவறு கிடையாது. யார் செய்தாலும் உதவி, உதவிதான்! எதையும் குறைத்து மதிப்பிடாது, பாராட்டப்படக் கூடியதுதான்!

அடுத்ததாக, 'ஐயப்பனின் கோபம்' என்றெல்லாம் நாங்கள் எங்கேயும் அதிகாரபூர்வமாகச் சொல்லியது கிடையாது. யாரோ ஒருசிலர் சொல்கிற கருத்துக்கு நாங்கள் பொறுப்பேற்கவும் முடியாது!''

''குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'என்னைக் கொலைசெய்ய மணி சங்கர அய்யர் சதி செய்தார்' என்ற பிரதமர், உ.பி தேர்தலின்போது 'கான்பூர் ரயில் விபத்தை ஏற்படுத்திய தீவிரவாதிகள் நேபாளுக்கு ஓடிவிட்டனர்' என்றார். இதுபோன்ற பொய்யானக் குற்றச்சாட்டுகள் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைத்துவிடாதா?''

''நிச்சயமாகக் குறைக்காது... இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பாகிஸ்தான் செய்துவரும் சதிச் செயல்களை யாரும் மறுக்க முடியாது. சமீபத்தில்கூட, நம் நாட்டுப் பிரதமரைக் கொலை செய்யும் முயற்சியில் இங்குள்ள நக்சலைட் இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலும் வந்திருக்கிறது. ஏற்கெனவே நம் நாட்டுப் பிரதமர்கள் இதுபோல், தீவிரவாதத்துக்குப் பலியான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனவே, இதுபோன்ற செய்திகளை நாங்கள் கற்பனையாகச் சொல்லவில்லை; பல்வேறு தகவல்களின் அடிப்படையில்தான் சொல்கிறோம். அதைக்கூட, 'பிரதமர் பொய் சொல்கிறார்' என்று சொல்வதென்பது, 'பாதுகாப்பு' மீது நாம் வைத்திருக்கும் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.''

``தேர்தல் நேரத்தில், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பிரதமர் பேசிவருவதன் நோக்கம் என்ன?''

``தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல... மற்ற நேரங்களிலும்கூட பா.ஜ.க தொடர்ந்து இவ்விஷயங்களை முன்வைத்துதான் வருகிறது. ஆனால், பிரதமர் எப்போது மக்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த நேரத்தில் வரும் தகவல்களை அவர்களோடும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறார்... அவ்வளவுதான்!''

``பிரதமரைக் கொல்ல சதி செய்ததாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் 5 பேரைக் கைது செய்தது, 'பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வி'யை திசை திருப்பும் முயற்சிதான் என்கிறார்களே?''

``அர்பன் நக்சல்களுக்கும் அவர்களது சித்தாந்தத்தோடு தொடர்புடைய வெளிநாட்டு இயக்கங்களுக்கும் இடையே உள்ள மின்னஞ்சல் தொடர்புகளைக் காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நேரத்தில், ஒரு எஸ்.எம்.எஸ், சின்ன குறியீடு வழியாகக்கூட ஒரு நபரைக் கொலை செய்யும் தகவல்கள் பரிமாறப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? எனவே, இதுபோன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றத்தின் ஆழத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அது ஒரு வரி தகவலா, பத்து பக்க தகவலா என்ற ஆராய்ச்சிக்குள் எல்லாம் போக வேண்டிய தேவையில்லை.''

``இஸ்லாமியப் படையெடுப்புகளால் தாக்கத்துக்கு உள்ளான வட இந்தியாவில் பா.ஜ.க-வின் மதவாத பிரசாரம் எடுபட்டது. தென்னிந்தியாவில் அது நிறைவேறவில்லை என்பது உண்மைதானே..?’’

``இஸ்லாமிய படையெடுப்புகள் மட்டுமே பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் காரணம் என்று சொன்னால், வடகிழக்கு மாநிலங்களில் எப்படி பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது? வெறுப்பு அரசியல் வாயிலாகவே ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். எனவே அது ஒரு மாயமான கற்பனை. 

தென்னிந்தியாவைப் பொருத்தவரை, கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க, ஆட்சியமைக்கும் வாய்ப்பு கடைசி நேரத்தில் பறிபோயிருக்கிறது. ஆந்திராவில் கூட்டணி ஆட்சியாக இருந்திருக்கிறோம். தெலங்கானாவிலும் எங்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். கேரளாவில் ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். ஆனால், பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாத மாநிலமாகத் தமிழகம்தான் இருக்கிறது. ஆனால், தற்போது இங்கேயும் பா.ஜ.க பலம் பெற்று வருகிறது. ஆக, தென்னிந்தியாவிலும் பா.ஜ.க கூடிய விரைவில் கால் பதிக்கும்!''

``தமிழகத்தில், திராவிட இயக்கங்களைத் தாண்டி பா.ஜ.க-வினால், வளரமுடியவில்லையா..?''

``வெறுமனே சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இங்குள்ள திராவிடக் கட்சிகள் ஜெயித்துக்கொண்டிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில், திராவிடர் கழகத்தின் அடிப்படையில் வந்த தி.மு.க-கூட இன்றைக்குக் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து விலகி வெகுதூரம் போய்விட்டது. அ.தி.மு.க பற்றிச் சொல்லவே வேண்டாம். கோயிலுக்குச் சென்று கையில் கயிறு கட்டிக்கொள்வது, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதையெல்லாம் பா.ஜ.க-வினர் செய்கிறார்களோ இல்லையோ... அ.தி.மு.க-வினர் தங்களது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்திக்கொள்ள என்றைக்கும் தயங்கியதே இல்லை! 

ஆக, இன்றைக்குத் தமிழ் மண், தொன்மையான தமிழர் நாகரிகம், தமிழ் மொழி ஆகியவை பற்றி மட்டும்தான் திராவிடக் கட்சிகள் இங்கே பேசிக்கொண்டிருக்கின்றன. நாங்களும்கூட, தமிழர் நாகரிகத்தின் தொன்மையைத்தான் பெருமை பேசுகிறோம். `சம்ஸ்கிருதத்தைவிடவும் தொன்மையான தாய் மொழி தமிழ்' என்றுதான் பிரதமரே சொல்கிறார். திருவள்ளுவரையும் பாரதியையும் இந்தியா முழுக்க எடுத்துச் சென்றிருக்கிறோம். அதனால், நிலைமை மாறியிருக்கிறது.

50 ஆண்டுக்காலமாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் முக்கியமானத் தலைமைகள் இன்றைக்கு இல்லாத சூழலில், மெதுவாக மாற்றத்துக்குத் தயாராகியிருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்!

ஒருகாலத்தில், பா.ஜ.க என்றாலே தீண்டத்தகாத கட்சியாகத்தான் இங்கே பார்க்கப்பட்டது. 'பா.ஜ.க-வுடன் கூட்டணியா... என்று அதிர்ச்சியாகக் கேட்ட சூழல் மாறி, பா.ஜ.க-வுடன் யார் யாரெல்லாம் கூட்டணி வைக்கலாம்... நாங்கள் ரெடி, நீங்க ரெடியா... என்றெல்லாம் கேட்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. பா.ஜ.க-வைச் சுற்றித்தான் தமிழக அரசியலே என்ற சூழ்நிலைக்கு வந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வைப் பற்றிப் பேசாத, விமர்சனம் செய்யாத நாள் இல்லை என்ற அளவில், ஒரு மையப் பகுதிக்கு பா.ஜ.க வந்திருக்கிறது!''

``இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று முத்தலாக் சட்டத்தை எதிர்க்கும் பா.ஜ.க, இந்து மதத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்வம் காட்டுவதில்லையே?''

``தீவிர இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கிற நாடுகளில்கூட கடைப்பிடிக்கப்படாத வகையில், நம் நாட்டில் 'முத்தலாக்' பழக்கம் நடைமுறையில் இருந்துவந்தது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நீதிமன்றமும் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு என்ற வகையில், பா.ஜ.க அரசும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்துகிறது... அவ்வளவுதான். 

அதேபோல், வன்கொடுமை சட்டத் திருத்தத்தில் நீதிமன்றத் தீர்ப்பு அம்மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருப்பதை அறிந்து, சட்டத்தின் வாயிலாக அதைச் சரிசெய்து கொடுத்திருப்பதுவும் பா.ஜ.க அரசுதான். எனவே, எங்கே யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகப் பா.ஜ.க நிற்கும். அதில் பாலின வேறுபாடுகளோ மத பாகுபாடுகளோ கிடையாது. இந்துக்கள் என்பதாலேயே பெண்களை அடிமைப்படுத்துவதற்கோ, இரண்டாம் தரமாக நடத்துவதற்கோ பா.ஜ.க ஒருநாளும் ஒப்புக்கொள்வதில்லை. 

கட்சியிலேயே 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துள்ள கட்சி பா.ஜ.க ஆட்சியிலும்கூட முக்கியமானத் துறைகளில் பெண்கள்தான் தலைமை வகிக்கிறார்கள்!''

``தன் பாலின ஈர்ப்பு, திருமண பந்தம் மீறிய உறவு, சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்பது உள்ளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``மூன்றாம் வகை பாலினத்தவர்களுக்கான பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கும் வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது. மூன்றாம் பாலினத்தவர்களுக்குள்ளேயே 23 வகையான பிரிவுகள் உள்ளன. அதில், தன் பாலின ஈர்ப்பாளர்களும் அடக்கம். இரண்டு தனிப்பட்ட நபர்களின் விருப்பம் - சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. ஆனால், தன்பாலின ஈர்ப்பு என்ற பதம் மிகைப்படுத்தப்பட்டு அந்தத் தீர்ப்பு இங்கே தவறாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தன் பாலின ஈர்ப்பாளர்களையும் மூன்றாம் பாலினத்தவர்களாகப் பாவித்து, பாலின சமத்துவத்தை அங்கீகரித்திருக்கும் இந்த வழக்கையே பொத்தாம் பொதுவாக 'தன்பாலின ஈர்ப்புக்கான அங்கீகார'மாக மட்டுமே பிரதானப்படுத்துவது அபத்தமாக இருக்கிறது. மற்றபடி தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 

அடுத்ததாக, திருமணப் பந்தம் மீறிய உறவை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது என்பதையும் சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இந்தத் தீர்ப்புகளில் மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்பட்டாலும்கூட, பா.ஜ.க-வின் கருத்தாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை!''

``இறந்து 45 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும்கூட பெரியார் சிலையின் மீது காலணியை வீசி வன்மத்தைத் தணித்துக்கொள்ளும் அளவுக்கு 'பெரியார்' என்ற அந்த ஒற்றைச் சொல் பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறதா..?''

``பெரியார் என்ற தனி மனிதரையும், அவர் கூறிய கருத்துகளைப் பின்பற்றக்கூடியவர்களையும் பா.ஜ.க மதிக்கிறது. நாட்டில் தோன்றிய பல்வேறு சிந்தனா முறைகளையும் இந்த நாட்டின் தேசியம் அனுமதித்திருக்கிறது. அந்தவகையில், பெரியாரும் அவரது கொள்கையை இங்கே மக்களிடம் பரப்பியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றக்கூடியதற்கான மிகப்பெரிய வலுவான அடித்தளத்தையும் இங்கே அவர் வைத்திருக்கிறார். எனவே, தனிப்பட்ட முறையில் பெரியார் மீது தரக்குறைவான முறையில் தாக்குதல் நடத்துவதையோ அல்லது அவரது சிலையை அவமதிப்பதையோ பா.ஜ.க ஒருபோதும் அனுமதியாது. அதற்கு எங்கள் ஆதரவும் கிடையாது. பெரியாரும் இந்த சமூகத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார் என்றால், அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் அவரது சிந்தனையோடு, தத்துவத்தோடு முரண்படுகிற உரிமையும் எங்களுக்கு உண்டு! அதையும் நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமே தவிர... சிலையைச் சேதப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களை ஒருபோதும் ஒரு விழுக்காடுகூட நாங்கள் ஒப்புக்கொள்வதில்லை. அதை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறோம்!''

``பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?''

``தன்னுடைய உடம்பு இயலாத காலத்திலும்கூட, இடைவிடாது சுற்றுப்பயணம் செய்து, தான் கொண்ட கொள்கையை மக்களிடையே பிரசாரம் செய்த அவரின் அர்ப்பணிப்பு உணர்வுதான் எனக்குப் பிடித்தது!''