Published:Updated:

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)
மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

பல மாதம் கழித்து சொந்த ஊருக்கு போகப்போகிறோம் என்றால் நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்வது இயல்பு. ஆனால், திருநங்கைகளின் ‘மெக்கா’வான கூவாகத்திற்கு வரும் போது அந்த ஊருக்கே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சித்திரை மாதம் வந்து விட்டால் போதும் விழுப்புரமே இந்திய திருநங்கைகளால் திமிலோகப்பட்டுப் போய்விடும். விழுப்புரம் வீதி எங்கும் திருநங்கைகளால் விழாக்கோலம் பூண்டு உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே, இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்தனர்.  ஒரு மாதத்திற்கு முன்பே விழுப்புரத்தில் உள்ள அனைத்து லாட்ஜிகளையும் புக் செய்துவிட்டு,  ஒரு வாரத்திற்கு லாட்ஜிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். கேரவனில் இருந்து வெளிவரும் ஹீரோயின்கள் போல் தங்களை பார்த்து கை அசைக்கும் இளைஞர்களுக்கு ஆரவாரத்தோடு கையாட்டி கொண்டே, கடை வீதிகளை வலம் வருவார்கள். அப்போதும் மறக்காமல் கூடவே ஒரு மேக்கப் கிட்டை கொண்டு டச்சப் செய்து  கொண்டே வருவார்கள்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

சாரை சாரையாக பூ, கிலோ கணக்கில் பவுடர் ஜிகினா என ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பும் போது விழுப்புரத்துக்கே பவுடர் போட்டது போல் வாசம் ஊரை தூக்கும். இப்படி பார்த்து பார்த்து தங்களை அலங்கரித்து கொள்வது இந்த திருவிழாவின் உச்சகட்டமான ‘மிஸ் கூவாகம்’ பேஷன் ஷோவிற்கு தான். 23ஆம் தேதி கொண்டாட்ட களைகட்டலுடன் ஆரம்பமானது தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த,  "மிஸ் கூவாகம்" பேஷன் ஷோ. ‘நங்கைகள் நிலாவின் தங்கைகளாக’ வலம் வந்த இந்த பேஷன் ஷோவில் ஹோம்லி மல்லி  முதல் கிளாமர் கில்லி வரை வரிசை கட்டி ராம்ப் வாக், கேட் வாக்’ என ஓய்யார நடைவந்து  அசத்தினர். லிப்ஸ்ட்டிக்கில் ஆரம்பித்து ஹேண்ட் பேக் வரை வித வித வித்தியாச வெரைட்டி காட்டினர். பெரும்பாலான திருநங்கைகளுக்கு பிடித்த நிறம் கறுப்பு தான் போலும் பல பேர் அந்த நிற ஆடையையே அதிகம் அணிந்து இருந்தனர்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

கொல்கத்தா முதல் கோவை வரை பல ஊர்களில் இருந்தும் வந்திறங்கி இருந்த இந்த பேஷன் ஷோவில் புடவைக்கே அதிக முக்கியத்துவம்.மொத்தம் 60 பேருக்கும் மேல் கலந்துகொண்டனர். இந்த பேஷன் ஷோ அழகை தவிர்த்து நடத்தப்படும் பேஷன் ஷோ. திருநங்கைகளின் நடை, உடை அவர்களின் அறிவுத்திறனை வைத்து மிஸ் கூவாகம் பட்டத்தை கொடுக்கின்றனர். ‘‘இந்த தடவை நான் எப்படியும் ‘மிஸ் கூவாகம்‘ பட்டத்தை ஜெயிச்சுடனும்னு வந்தேன் பட் ‘மிஸ் கூவாகம்‘ மிஸ் ஆயிடுச்சு அடுத்த தடவை உங்கள ‘மிஸ் கூவாகம்‘ பட்டத்தோட சந்திக்கிறேன்" என்று லிப்ஸ்டிகை சரிசெய்து கொண்டு சிரிக்கிறார்’’ மூன்றாம் இடம் பிடித்த சென்னை தீபிகா.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

‘அக்கட’ பூமியைச் சேர்ந்த அனுஷ்கா இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். ‘‘நானும் உங்க அனுஷ்கா உயரம் தாங்க இருப்பேன்’’ என்று வெட்கம் வழிய பேசியவர் திடீர் என சீரியஸ் டாபிக் மாறினார். பெண்கள் பங்கேற்கிற பேஷன் ஷோவில முதல் இடம் வந்தா போதும் அவங்களை அப்படியே சினிமாவிற்கு இறக்குமதி பண்ணுறாங்க ஆனா இந்த பேஷன் ஷோ ஏதோ எங்க சந்தோஷத்துக்காக மட்டும் பண்றதா நினைச்சு விட்டுடறாங்க எங்களையும் கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

போன முறை திருவண்ணாமலையை சேர்ந்த ‘ஹரினி’ பட்டத்தை வென்றார். அவரிடம் இருந்து இந்த முறை தருமபுரியைச் சேர்ந்த சாயா சிங் ‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை தட்டிச் சென்றார். ‘‘எங்களுக்கான மிகப் பெரிய அங்கீகாரம்னா அது ‘மிஸ் கூவாகம்’ அதை வாங்கி இருக்கிறது மிகப் பெரிய சந்தோஷத்தை தருது. போன தடவை இதே போட்டியில் மூன்றாம் பரிசு வென்றேன். இந்த வருடம் எப்படியாவது மிஸ் கூவாகம் பட்டம் வெல்ல வேண்டும் என்று ஆவலோடு இருந்தேன் என் கனவு நிறைவேறிடுச்சு. உங்களுக்கு டிரீட் வைக்க டைம் இல்லை கோச்சுக்காதீங்க’’ என்று பறந்தார்.

ஒரு மாதமாக உற்சாகமும் கொண்டாட்டமுமாக கழிந்த திருநங்கைகளின் திருவிழாவின் சோகமான கிளைமாக்ஸ் தாலியறுக்கும் சடங்காகும். முதலில் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக கூத்தாண்டவரை கணவனாக ஏற்று அனைத்து திருநங்கைகளும் தாலிகட்டிக்கொள்வார்கள். மணப்பெண்னைப் போல் தங்களை ஜோடித்து கொண்டு கோவிலுக்கு சென்று கூத்தாண்டவர் சன்னதியில் பூசாரியிடம் தாலிக்கட்டிக் கொள்கிறார்கள்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

மகாபாரதத்தில், குருஷேத்திர போருக்கு முன் சர்வலட்சணமும் பொருந்திய ஒருவரை பலி கொடுப்பது வழக்கம். பலி கொடுத்த பிறகு தான் போரை துவங்க முடியும். கிருஷ்ணன் அரவானை பலி கொடுக்க முன் வருகிறார். அரவான் சாவதற்கு முன் கிருஷ்ணனிடம் மூன்று வரம் கேட்கிறார். அதில் ஒன்று தான்‘ தான் திருமணம் செய்த பிறகு தான் சாக வேண்டும்’ என்பது. மறுநாள் சாக போகும் அரவானுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வராததால், கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறார். கிருஷ்ணனை போல திருநங்கைகளும் அரவானை திருமணம் செய்து கொள்கிறார்கள். தாலி கட்டிகொள்ளும் இரண்டு நாட்களும் திருநங்கைகளை கிருஷ்ணனின் அவதாரம் என்கிறார்கள்.

மறு நாள் தன் கணவனாக பாவிக்கும் அரவான் பலியிடப்படுவதால் வெள்ளை புடவை உடுத்தி கொண்டு சோகம் அப்பிய முகத்துடன் ஒப்பாரி பாடி கும்மியடித்து தாலியறுத்து கொண்டு கதறுகிறார்கள்.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

நூற்றுக்கணக்கான திருநங்கைகள் ஆர்வத்துடன் தாலிக்கட்டிகொண்டிருக்க, சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா மட்டும் தாலி கட்டி கொள்ளாமல் இருந்தார். "அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி பெண்ணா மாறணும்னு சொல்லி அரவானிடம் வேண்டி தாளி கட்டிக்கிட்டேன். அடுத்த வருஷமே ஆப்ரேஷன் நல்லபடியா நடந்தது. அடுத்த வருடம் வெள்ளி தாலி கட்டிகொண்டேன். அதற்கு அடுத்த வருடம் தங்கத்தில் கட்டினேன். அதோடு என் வேண்டுதல் முடிஞ்சிடுச்சு. இப்போ எனக்கு எந்த வேண்டுதலும் இல்லாததால் தாலி கட்டிக்கல. மத்தவங்க யாருக்காவது வேண்டுதல் நிறைவேறணும்னா தாலி கட்டிக்க தயாரா இருக்கேன்" என்றார் ஐஸ்வர்யா.
 

மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொட்டி தீர்த்த திருநங்கைகள் (படங்கள்)

தாலி கட்டியவுடன் மூத்த திருநங்கைகளிடம் பெண்கள் ஆசீர்வாதம் பெற்று கொள்கிறார்கள். திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்தால் உடனே பலிக்கும் என்று கூவாகம் மக்கள் அழுத்தமாக நம்புகிறார்கள். யதார்த்தத்தில் நிறைவேறாத தங்களின் திருமணக் கனவை இந்த ஒரு நாள் நாடகத்தின் மூலம் அரங்கேற்றிக் கொள்கிறார்கள்.

தங்களின் பாலைவன வாழ்க்கையை இந்த இரண்டு நாட்களுக்காகவே வாழ்ந்து மொத்த மகிழ்ச்சியையும் சோகத்தையும் கொட்டி தீர்த்துவிட்டு அடுத்த வருடம் இதே நாளை எதிர்பார்த்து சோகத்தை சேகரிக்க கிளம்பி விடுகின்றனர் மதிப்பிற்குரிய இந்த ‘திரு’நங்கைகள்.

ஆ.நந்தகுமார், அ.அச்சனந்தி

படங்கள்: தே.சிலம்பரசன்