Published:Updated:

`நடிகர் விஜய் நன்றியோடு இல்லை!' - அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

`அண்ணா தி.மு.க-வை வைப்ரன்ட் ஆக வைத்திருக்க இந்த விவகாரம் உதவும். சர்கார் விவகாரத்தில் தன்னுடைய தலைமை பேசப்பட வேண்டும்' எனவும் கணக்குப் போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

`நடிகர் விஜய் நன்றியோடு இல்லை!' - அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி
`நடிகர் விஜய் நன்றியோடு இல்லை!' - அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

யர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். `டாவின்ஸி கோடு, டேம் 999 போல படத்துக்கு எதிராக அரசு முடிவெடுக்கலாம். அதைவிடுத்துக் கைது செய்ய முயல்வது எந்த வகையில் நியாயம்?' எனக் கொந்தளிக்கின்றனர் முருகதாஸ் தரப்பினர். 

சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் தீவிர ஆலோசனையை நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `சர்கார்' திரைப்படத்துக்கு எதிராக நேற்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை, வேலூர், மதுரை உட்பட பல மாவட்டங்களில் விஜய் பட பேனர்களைக் கிழித்தெறிந்தனர். போலீஸார் முன்னிலையிலேயே இந்த விவகாரம் நடந்ததால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். `சர்கார்' படம் ஓடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய பட பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில், நேற்று இரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்குப் போலீஸார் சென்றது திரையுலக வட்டாரத்தின் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

`அவரைக் கைது செய்யவில்லை. பாதுகாப்புக்காகவே சென்றனர்' என போலீஸ் அதிகாரிகள் கூறினாலும், ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவிட்ட முருகதாஸ், ``போலீஸார் என் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிருக்கிறார்கள். நான் வீட்டில் இல்லாததால் திரும்பிச் சென்றுவிட்டனர்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினி, `தணிக்கைக் குழு படத்தைத் தணிக்கை செய்து வெளியிட்ட பிறகு அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்துவதும் திரையிடத் தடுப்பதும் படத்தின் பேனர்களைச் சேதப்படுத்துவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ரஜினியின் நேரடி ஆதரவு முருகதாஸ் தரப்புக்கு ஆறுதல் அளித்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய முருகதாஸ் தரப்பினர், ``வீட்டுக் கதவை இரவு நேரத்தில் போலீஸார் தட்டியதில் கடும் கோபத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விவகாரத்தை நடிகர் ரஜினிகாந்தின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார். அப்போது, `சமூகரீதியாக இந்த அரசு செயல்படுகிறது. இதை சமூகநீதி பிரச்னையாக மாற்ற முடியும். டாவின்ஸி கோட், டேம் 999 ஆகிய படங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போல இந்த விவகாரத்திலும் அரசு செயல்பட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கைது செய்ய முயல்வது எந்த வகையில் சரியானது. இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். உங்கள் ஆதரவு வேண்டும்' என விளக்கினோம். விவகாரத்தின் சீரியஸைப் புரிந்துகொண்டு உடனே ரியாக்ட் செய்தார் ரஜினி" என்கின்றனர். 

அதேநேரத்தில், சர்கார் விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை. இதைப் பற்றி அமைச்சர் ஒருவரிடம் அவர் பேசும்போது, `இலவச நலத்திட்டங்களுக்கு எதிரான வசனங்களைப் படத்தில் வைத்திருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். அம்மாவின் விசுவாசிகளாவும் களத்தில் இருக்கிறோம். அதனால்தான் சர்கார் படத்துக்கு எதிராக கழகத் தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். `மெர்சல்' விவகாரத்தில் பா.ஜ.க-வினர் எதிர்ப்பையும் மீறி நடிகர் விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம். அதற்கு நன்றியோடு அவர் (விஜய்) இல்லை. சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடினாலோ ஓடாவிட்டாலோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும்' எனக் கூறியிருக்கிறார். அதாவது, `அண்ணா தி.மு.க-வை வைப்ரன்ட் ஆக வைத்திருக்க இந்த விவகாரம் உதவும். சர்கார் விவகாரத்தில் தன்னுடைய தலைமை பேசப்பட வேண்டும்' எனவும் கணக்குப் போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

ஆளும்கட்சியின் தொடர் நெருக்குதல் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், `சர்காரைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காட்சிகளை நீக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது' எனப் பேசியிருக்கிறார். இன்று மதியம் உயர் நீதிமன்றத்தில் வரவிருக்கும் முருகதாஸின் முன்ஜாமீன் மனுவும் ஆளும்கட்சியின் அடுத்தகட்ட நிகழ்வுகளுமே சர்காரின் போக்கைத் தீர்மானிக்க உள்ளன.