Published:Updated:

`தமிழக அரசு சர்காரை எதிர்ப்பது சரியா?’  - தணிக்கை விதிகளை விவரிக்கும் வானதி

படத்தில் வரக்கூடிய வசனமோ காட்சிகளோ சம்பந்தப்பட்ட தரப்பினரைப் புண்படுத்துவதாக இருந்தால் நீதிமன்றத்தின் மூலம்தான் நிவாரணம் தேடிக்கொள்ள முடியும். அப்படிச் செய்யாமல் தியேட்டருக்குச் சென்று பேனர்களைக் கிழிப்பதோ ஆர்ப்பாட்டம் நடத்துவதோ சட்டத்துக்கு உட்பட்ட செயல் கிடையாது.

`தமிழக அரசு சர்காரை எதிர்ப்பது சரியா?’  - தணிக்கை விதிகளை விவரிக்கும் வானதி
`தமிழக அரசு சர்காரை எதிர்ப்பது சரியா?’  - தணிக்கை விதிகளை விவரிக்கும் வானதி

`சர்கார்' படத்தை மறு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது மத்திய தணிக்கை வாரியம். `படத்தின் காட்சிகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். அதைவிடுத்து அரசாங்கமே போராட்டத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது' என்கிறார் பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தணிக்கை வாரியத்தில் `சர்கார்' படத்தை மறு தணிக்கை செய்யும் பணிகள் இன்று நடந்தன. அதில், நடிகை வரலட்சுமியின் பெயரான கோமளவல்லி என்பது மியூட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, `தியேட்டர்களில் எந்தவித சச்சரவும் இல்லாமல் படம் ஓடும்' என எதிர்பார்க்கின்றனர் திரையுலக பிரமுகர்கள். இருப்பினும், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. திரையரங்குகளில் படத்தை ஓடவிடாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். சேலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் உட்பட பல இடங்களில் பேனர் கிழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், `தணிக்கைக் குழு படத்தைத் தணிக்கை செய்து வெளியிட்ட பிறகு அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்துவதும் திரையிடத் தடுப்பதும் படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

`சர்கார்' படத்துக்கு எதிரான போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரும் பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளருமான வானதி சீனிவாசன், ``சர்கார் படம் மட்டுமல்ல, குறிப்பிட்ட தொழில் செய்பவர்களையோ அரசின் செயல்பாடுகளை விமர்சனமாக முன்வைக்கப்படும்போதோ எதிர்ப்பு கிளம்புவதைப் பலமுறை பார்த்து வருகிறோம். தணிக்கை வாரியமானது, ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. கவர்ச்சிகரமான நடனம் என்றால், அதற்கேற்ப பல இடங்களில் கத்தரி போட்டிருப்பார்கள். சில சமயங்களில் ஆபாசக் காட்சிகள் இருந்தும் `ஏ' சான்றிதழ் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவருவதையும் பார்க்க முடிகிறது. சமுதாயத்தின் பல்வேறு தரப்பு பிரதிநிதிகள்தாம் சென்சார் போர்டின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களும், மாறிவரும் உலக நடைமுறைக்கு ஏற்ப சினிமாவைப் பார்ப்பது வழக்கம். முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். `A' 'A/U' `U' எனப் பெயரிடப்பட்ட சான்றிதழ்கள் எல்லாம் தியேட்டரில் மட்டுமே ஓடும். முன்பெல்லாம் 'A' படம் எனச் சான்றிதழ் வாங்கிய படங்கள் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. அதன்பிறகு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கட்டுப்பாடு கொண்டு வந்தார்கள். `A' படத்தை 'U' வாக மாற்றினால் மட்டுமே ஒளிபரப்ப முடியும் என்ற சூழல் வந்தது. 

இதில், சம்பந்தப்பட்ட படத்தில் சில காட்சிகளை சட்டத்துக்குப் புறம்பான வகையில் தணிக்கையில் வெட்டியிருக்கிறார்கள் என்றாலோ, சான்றிதழ் கொடுத்ததில் தவறு இருக்கிறது என நினைத்தாலோ அதற்கென இருக்கும் கமிட்டியில் அந்தப் படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ முறையிட முடியும். மூன்றாவது மனிதர் இதில் தலையிட முடியாது. இந்த கமிட்டியானது, ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. படத்தில் வரக் கூடிய வசனமோ காட்சிகளோ சம்பந்தப்பட்ட தரப்பினரைப் புண்படுத்துவதாக இருந்தால் நீதிமன்றத்தின் மூலம்தான் நிவாரணம் தேடிக்கொள்ள முடியும். அப்படிச் செய்யாமல் தியேட்டருக்குச் சென்று பேனர்களைக் கிழிப்பதோ ஆர்ப்பாட்டம் நடத்துவதோ சட்டத்துக்கு உட்பட்ட செயல் கிடையாது. இது அவர்களின் உணர்வுகளைக் காட்டும் செயலாக மட்டுமே பார்க்கலாம்.

சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்வது என்பது வாரியத்தின் விதிகளில் இல்லை. பத்மாவத் திரைப்படத்துக்கு ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டது. இங்கும் விஸ்வரூபம் படத்துக்காக அமெரிக்க தூதரகத்தையே தாக்கும் அளவுக்குச் சென்றது. எல்லா நேரத்திலும் சினிமாக்காரர்கள் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என நினைத்தால், அது சுதந்திரமான விஷயமாக இருக்க முடியாது. அரசாங்கமே முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது துரதிஷ்டவசமான செயல். நீதிமன்றத்துக்குச் சென்று நிவாரணம் தேடுவதுதான் சரியான செயலாக இருக்கும்" என்றார் நிதானமாக.