Published:Updated:

`மோடியைவிட ஸ்டாலின் சிறந்த தலைவர்!' - சென்னையில் சந்திரபாபு நாயுடு பேச்சு

`மோடியைவிட ஸ்டாலின் சிறந்த தலைவர்!' - சென்னையில் சந்திரபாபு நாயுடு பேச்சு
`மோடியைவிட ஸ்டாலின் சிறந்த தலைவர்!' - சென்னையில் சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த நிலையில், இன்று சென்னையில் தி.மு.க தலைவரை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. இந்தச் சந்திப்பின்போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தினர். அப்போது பேசிய ஸ்டாலின்,  ``பா.ஜக வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். அதை நான் அப்போதே வரவேற்றேன். மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த, அனைத்து மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். நீதிமன்றம், சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதைத் தடுக்க, அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சந்திரபாபு நாயுடு என்னைச் சந்தித்தார். தி.மு.க-வின் ஆதரவு உண்டு என உறுதி அளித்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக டெல்லியிலோ அல்லது வசதியான வேறு மாநிலத்திலோ, ஆதரவளிக்கும் அனைத்து மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் தேர்தல் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்” என்றார்.

அதன் பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, ``இந்த நாட்டைக் காப்பற்ற எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டாலினை சந்திக்க வந்தேன். ஜனநாயகமும், தேசியமும் ஆபத்தில் உள்ளது. அதைத் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். சி.பி.ஐ. ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளில் இன்று அரசின் தலையீடுகளைப் பார்க்கிறோம். இதுபோன்று இதற்கு முன்னதாக நடைபெற்றதாக வரலாறு இல்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்துகிறார்கள். ஆளுநர்களையும் தவறாக பயன்படுத்துகிறார்கள். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிலர் தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளனர். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. விவசாயிகள் ஆபத்தில் உள்ளனர். அதனால்தான் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டவர்களைச் சந்தித்தேன். இன்னும் மம்தா உள்ளிட்ட  பல தலைவர்களைச் சந்திக்க உள்ளேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. 

தி.மு.க-விடம் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அவர்களும் இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும். பல தலைவர்கள் ஒன்றிணைந்து தேசத்தை காக்க இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துகள் மாறுபடலாம்.. ஆனாலும், தேசத்தின் நலன் கருதி ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. தற்போதைய ஆட்சியாளர்களால் நாட்டுக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. தமிழகத்துக்கு எதாவது செய்தார்களா?. நீங்கள் எத்தனைக் காலம் ஏ.டி.எம் வாசலில் நின்றீர்கள். உங்களின் பணத்தை எடுக்கக் காத்துக்கிடந்தீர்கள். 

இந்த அணியில் பல நல்ல  தலைவர்கள் உள்ளனர். இங்கிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், மோடியைவிட சிறந்த தலைவர். அவரிடம் நான் சொன்னேன், நாம் ஒன்றிணைந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவருவோம். தேவைப்பட்டால், கோதாவரி நதியையும் சென்னை கொண்டுவருவோம். இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என பலர் கேட்கிறார்கள். நீங்கள் அரசியல் குறித்துப் பேசுகிறீர்கள். நான் தேசம் குறித்துப் பேசுகிறேன். பிரதமர் ஆசையால் நான் அணிகளை இணைப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான் கிடையாது” என்றார். 

தமிழக அரசை எப்படி பார்க்கிறீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சந்திரபாபு நாயுடு, ``அரசாங்கம் எங்கே இருக்கிறது?. ரிமோட் கன்ட்ரோலில்தான் ஆட்சி நடக்கிறது” என்றார்.