Published:Updated:

`சர்கார்' விமர்சிக்கும் இலவசங்கள் தமிழக அரசியலில் செய்தது என்ன?

`சர்கார்' விமர்சிக்கும் இலவசங்கள் தமிழக அரசியலில் செய்தது என்ன?
`சர்கார்' விமர்சிக்கும் இலவசங்கள் தமிழக அரசியலில் செய்தது என்ன?

`நாங்கள் ஆட்சி அமைத்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி!' என்று அறிவித்தார்கள். தேர்தலில் வென்று, ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, குறைந்த விலைக்கு அரிசி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டம்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில், திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த பல்வேறு இலவசத் திட்டங்களின் ஆதி புள்ளியாக மாறிப்போனது!

இலவசங்களை `சர்கார்' விமர்சனம் செய்துள்ள சூழ்நிலையில், தமிழக அரசியலில் இலவசங்கள் எத்தகைய மாற்றங்களை செய்துள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ந்தியாவில் உணவுப் பொருள் உற்பத்தியின் பற்றாக்குறையும், மக்களின் வறுமையும் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கிய காலத்தில், தங்களின் மூன்றாவது தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது தி.மு.க.! 

தேர்தல் பிரசாரத்தில், 'நாங்கள் ஆட்சி அமைத்தால், ரூபாய்க்கு மூன்று படி அரிசி!' என்று அறிவித்தார்கள். தேர்தலில் வென்று, ஆட்சிப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, குறைந்த விலைக்கு அரிசி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டம்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில், திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த பல்வேறு இலவசத் திட்டங்களின் ஆதி புள்ளியாக மாறிப்போனது!

அரிசியின் அரசியல் வளர்ந்து 2006-க்குப் பிறகு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ, ரூபாய்க்கு ஒரு கிலோ என மாறி இன்று இலவச அரிசி என்ற நிலையை எட்டியுள்ளது. அண்ணாவுக்குப் பிறகான முதல்வர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இலவசத் திட்டங்களை மக்களுக்கு வழங்குபவர்களாகவே இருந்துள்ளனர். காமராசர் தன் ஆட்சிக் காலத்தில், வறுமையின் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாததைக் கண்டு மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகக் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.  எம்.ஜி.ஆர் அவருடைய ஆட்சிக் காலத்தில், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு மதிய உணவுத் திட்டத்தையே சத்துணவுத் திட்டமாக மாற்றினார். 

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பச் சூழலில் வாழ்ந்துவரும் பெண்களுக்கு, திருமணங்கள் தடைப்பட்டு வருவதையறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி, திராவிட இயக்கப் பெண் போராளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில், திருமண நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு முதல்வர் பதவியை வகித்தவர்களும் இந்த நிதியுதவித் திட்டத்தின் தொகையை உயர்த்தி வழங்கினார்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருகையில் தங்களின் அரசியல் குருவாக காமராசர் மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோரைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தத் தலைவர்கள் கொண்டு வந்த இலவச மதிய உணவுத் திட்டம்தான் தமிழகக் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது என்பது கவனிக்கத்தக்கது. தமிழக அரசின் பட்ஜெட்டில் அதிகம் செலவிடப்படும் திட்டங்களில் இவையும் ஒன்று. உலகமயமாதலின் சூழலில், மக்களின் தேவைகள் பொருள் சார்ந்தவையாக மாறிவருகின்றன. இவற்றில்  நிலவும் பொருளாதாரத் தீண்டாமையை ஏதோ ஒருவகையில் சமன் செய்ய இந்த இலவசத் திட்டங்கள் பயன்படுகின்றன.

தமிழகத்தின் இலவச அரசியலில், பெரும்பான்மையானவை பெண்கள் சார்ந்தவையாக அமைந்துள்ளன. இவற்றை திராவிட இயக்கங்களின் முதன்மையான கொள்கைகளில் ஒன்றான பெண் சுதந்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. 'இலவச கேஸ் அடுப்பு' திட்டம் கிராமப்புறங்களைச் சென்றடைந்த பிறகு, பெண்களிடையே நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்துள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். விறகு அடுப்புகளால் ஏற்படும் புகையை சுவாசித்து  நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவது குறைந்துபோனதுதான் இதற்கான பின்னணி. 

இலவசங்களுக்கு எதிராக இன்று பொது சமூகத்திலும், தேர்தல் களத்திலும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மற்றொரு வெளிப்பாடாகத்தான் `சர்கார்' திரைப்படத்திலும் இலவசங்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனிடம் இதுகுறித்துப் பேசுகையில், ``ஒரு மக்கள் நல அரசு, மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே செலவு செய்வது எப்படி இலவசமாக மாறும்? மனித வளக் கூறுகளான கல்வி, சுகாதாரம், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் வளர்ச்சி சாத்தியமாகும். நம் நாட்டில் வறுமையில் உள்ள மக்களின் உழைப்புக்கும், ஊதியத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. இதைச் சமன் செய்ய அரசுகள் இதுபோன்றத் திட்டங்களை கொண்டுவருகின்றன.

இலவசக் கல்வி, கல்வியில் புரட்சியைக் கொண்டுவந்தது. இலவச மின்சாரம், விவசாயிகளின் வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இலவச வண்ணத் தொலைக்காட்சி, தொலைத்தொடர்பில் புரட்சியைக் கொண்டுவந்தது. பொதுவிநியோகத் திட்டம் என்பது ஏழை மக்களின் உணவு பாதுகாப்பையும், சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. இதை வீண் செலவு என்பவர்கள் சமூக புரிதலற்ற முட்டாள்கள்.  இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இந்த இலவசங்களைப் பெறுபவர்கள் எல்லாம் கடுமையான உழைப்பாளிகள். இலவசங்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது எந்தப் பயனுள்ள மாற்றத்தையும் விளைவிக்காது” என்றார்.

இதே பிரச்னை குறித்துப் பேசும் எழுத்தாளர் அசோக்.ஆர், ``இதன் பெயர் இலவச அரசியல் அல்ல சமூகநீதி அரசியல். இன்று இலவசத் திட்டங்களை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலவசமாகப் போன்களை வழங்கியபோது முதலில் வாங்க வரிசையில் நின்றவர்கள்தான். ஓட்டுக்குக் காசு கொடுப்பதுதான் தவறு. ஆனால், சமூகநீதித் திட்டங்கள் என்பவை மக்களை முன்னேற்ற வழித்தடம் அமைப்பவை. இலவசம் என்ற உடன் மிக்ஸி, கிரைண்டர்தான் சொல்லப்படுகிறது. ஆனால், பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து இலவசக் கல்வி அளிப்பதும்கூட இலவசங்கள்தான். தொலைக்காட்சிகள் வெறும் பொழுதுபொக்கு சார்ந்தவை மட்டுமல்ல... தொலைக்காட்சியை அரசு இலவசமாக வழங்கியபிறகு, சமூகத்தில் நிலவும் பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. பொதுச் சமூகத்தோடு தொடர்பு அற்று வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடி மக்களின் வளர்ச்சிக்குத் தொலைக்காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் அறியாமல் அரைகுறை அரசியல் பேசுவதற்குப் பேசாமல் இருப்பதே நல்லது!” என்றார்.

இலவச கேஸ் அடுப்பின் தேவையைப் பற்றிப் பேசும் மருத்துவர் எழிலன் ``பெண்கள் விறகு அடுப்புகளில் சமைப்பதால் அவர்களுக்கு சி.ஓ.பி.டி எனும் நுரையீரல் பிரச்னை அதிகமாக வந்தது. இந்தப் பிரச்னையால், சுத்தமானக் காற்றை சுவாசித்து அசுத்தக் காற்றை வெளியிடும் நுரையீரலின் செயல்பாடு முடக்கத்துக்குள்ளாகிவிடும். தன்னுடைய நாட்டின் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில், 2006-ம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கையில், திட்டக்குழுவில் இருந்த முனைவர் நாகநாதன் உள்ளிட்டோர்களால் கொண்டு வரப்பட்டதுதான் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் திட்டம். அதன் பிறகு பரவலாகக் கிராமப்புறப் பெண்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் வெகுவாகக் குறைந்தன. தன்னுடைய தாய்மார்களைப் பாதுகாக்க அரசு செலவிடும் தொகை எப்படி இலவசமாகும்?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

2006-ம் ஆண்டு தேர்தலில், 'கேஸ் அடுப்பு, டி.வி' மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 'மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி' போன்ற பொருள்கள் இலவசத் திட்டங்களில் இடம் பெற்றிருந்த நிலையில், 2016-ம் ஆண்டு தேர்தலில், இது மாதிரியான பெரிய  திட்டங்கள் இடம் பெறாமல் போனது, கட்சிகள் தங்கள் கொள்கையிலிருந்து விலகுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது!

அடுத்த கட்டுரைக்கு