
த.கதிரவன் - ஓவியங்கள்: ஹாசிப்கான், பிரேம் டாவின்ஸி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, காஸ்ட்யூமில் ஆரம்பித்து பால்கனி தரிசனம் வரை அச்சு அசல் ஜெ. அவதாரம் எடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் ஜெ.தீபா!
‘மக்கள் தலைவி...’, ‘இளைய புரட்சித் தலைவி...’ என்றெல்லாம் அ.தி.மு.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டவர், தற்போதைய தமிழகத்தின் தடதடக்கும் பிரச்னைகளில் தொடர்ந்து மௌனம் காத்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. ‘என்னதான் ஆச்சு இந்தத் தீபாவுக்கு?’ என்று தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்தேன்...

“ ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ இருக்கிறதா?’’
“என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பேரவையை ஆரம்பித்த காலகட்டம் என்னவென்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். தனித்தனிப் பெயர்களோடு செயல்பட்டுக்கொண்டிருந்த என் நலம் விரும்பிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாகத்தான் இந்தப் பேரவையையே ஆரம்பித்தோம்.’’
“ ‘தீபா நடத்துவது கட்சி அல்ல... ரசிகர் மன்றம்’ என்று உங்கள் கணவர் மாதவன் ஏற்கெனவே கூறியிருந்தாரே?’’
“பேரவை என்பதன் விளக்கத்தைத்தான் அப்படிக் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு முழுக்க ‘எம்.ஜி.ஆர் மன்றங்கள்’ அடிப்படையாக இருந்தன. அதுபோல், எங்களுக்கு இந்தப் பேரவை.’’
“உங்கள் பேரவைக்குப் போட்டியாக, மாதவன் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படியிருக்கிறது?’’
“அதுபற்றி எனக்குத் தெரியாது. அப்போதைய சூழலில், பலரின் தூண்டுதல்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி அது. எங்களுக்குப் போட்டி என்றெல்லாம் அந்தக் கட்சியைச் சொல்ல முடியாது!’’
“தமிழக அரசியலில், உங்கள்மீதான ஆரம்பகால எதிர்பார்ப்புகள் எல்லாமே ஏமாற்றமாகிப்போனதாக உணர்கிறீர்களா?’’
“உண்மையைச் சொல்லவேண்டுமானால், நல்லதொரு வளர்ச்சியைப் பெற்றுவந்த நாங்கள், மிகப்பெரிய வீழ்ச்சிக்கு உள்ளாகிவிட்டோம்தான். இந்த மிகப்பெரிய சரிவிலிருந்து மீளமுடியாமல், நான் அரசியலை விட்டே ஓடிவிடவேண்டும் என்று சசிகலா தரப்பினர் விரும்பினார்கள். ஆனால், அது நடக்கவில்லை. காரணம்... அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர்.’’
“சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் வெளியில் வந்தபோது உங்கள் ஆதரவாளர்களேகூட அவருக்கு ஆதரவாக மாறிப்போனார்களே...?’’
“சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் வெளியில் வந்தபோது, தொண்டர்களிடையே அவருக்கு மிகப்பெரிய ஆதரவு ஏற்பட்டது உண்மை. என்னைத் தேடிவந்த ஆதரவாளர்களைக்கூட அவர் பக்கம் இழுத்துக்கொண்டார் என்பதும் உண்மைதான். இதை மறைத்துப் பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏனெனில், இதனால் பாதிக்கப்பட்ட நபராக நான் மட்டும்தான் இருக்கிறேன்.
அ.தி.மு.க தொண்டர்கள்தான் என்னை அரசியலுக்குள் அழைத்துவந்தனர். ஆனால், அந்தத் தொண்டர்களைப் பயன்படுத்தி அரசியல் நாடகம் நடத்தினார் ஓ.பி.எஸ். நாளடைவில், உண்மை தெரிந்தபிறகு எல்லாத் தொண்டர்களும் மறுபடியும் என்னிடமே திரும்பி வந்துவிட்டனர். அந்தவகையில், பெரும் சரிவிலிருந்து நான் மீண்டுவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்!’’
“ ‘தர்மயுத்தம்’ ஓ.பி.எஸ் - துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.... என்ன வித்தியாசம்?’’
“ஓ.பி.எஸ்-ஸோடு நான் ஒருநாளும் நட்பும் பாராட்டவில்லை; விரோதமும் பாராட்டவில்லை. அ.தி.மு.க-வினர் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவளாகத்தான் இருந்தேன். சசிகலாவை எதிர்த்து அவர் போராட்டம் நடத்தியபோது, கட்சியைப் பற்றி அவருக்குள்ளும் ஒரு தெளிவு - அக்கறை இருந்தது. அதனால்தான், ‘ஓ.பி.எஸ் சந்திக்க விரும்புகிறார்’ என்று அழைத்ததும் நானும்கூட அவரைப் போய்ச் சந்தித்தேன். ஆனால், இப்போது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட பிறகு கட்சியைப் பற்றிய கவலை அவருக்குப் போய்விட்டது. பதவியைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அவரது நோக்கமாக மாறியிருக்கிறது!’’
“ ‘ஓ.பி.எஸ் ஒரு சிறந்த நடிகர்; பதவியைப் பிடிப்பதற்காகத்தான் ‘தர்ம யுத்த’ நாடகம் நடத்துகிறார்’ என்று இன்றைய ஆளுங்கட்சியினரே அப்போது பேசியதெல்லாம் சரிதான் என்று உணர்கிறீர்களா...?’’
“இல்லை. பதவி ஆசையினால் அவர் தர்ம யுத்தம் நடத்தியதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில், 2001 ஆம் ஆண்டிலேயே, ஜெயலலிதா அவருக்கு ‘முதல்வர்’ பதவியைக் கொடுத்திருக்கிறாரே! அந்தக் காலகட்டத்தில், நான் எழுதிய ‘இளவேனில் பூக்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தைக் கொடுப்பதற்காக அத்தையை (ஜெயலலிதா) நேரில் சந்தித்தேன். அப்போது அத்தையே என்னிடம், ‘அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாயா?’ என்று கேட்டார். ஆனால், அப்போது அதுபற்றிய எந்த எண்ணமும் எனக்குக் கிடையாது என்பதால், ‘அப்படி எந்த ஆசையும் இல்லை’ என்று நானும் கூறிவிட்டேன்.
ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால், அன்றைய சூழலில், முதல்வர் பதவிக்கு என் பெயரும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, ஓ.பி.எஸ் மீதிருந்த நம்பிக்கையில்தான் ஜெயலலிதா அவரை முதல்வராக்கினார்!’’

“ஜெயலலிதாவின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்காகத்தான் நீங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே?’’
“சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்கிறபடியே பார்த்தாலும்கூட, அத்தையின் சொத்துகள் மட்டுமா எங்களுக்கான உரிமை...? அவரேகூட எங்களுக்குச் சொந்தமானவர்தானே! ‘தனக்கென்று ஒரு குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டதே’ என்ற ஏக்கம் ஜெயலலிதாவுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான் நான் பிறந்தபோதே என்னைத் தத்தெடுக்க விரும்பினார்.
2014ல் பெங்களூரு சிறையிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு சந்தித்துப் பேசினேன். அப்போதும்கூட குடும்பப் பாசம் குறித்த அவரது மன ஏக்கம்தான் வெளிப்பட்டது. ‘ஃபேமிலி சென்டிமென்ட் விஷயத்தில், நீங்கள் இன்னும் மாறவே இல்லை’ என்று நான் சொன்னதும் ரொம்பவே நெகிழ்ந்துபோனார். சொத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஜெயலலிதாவுக்குத் தவறான வழியைக் காட்டியது, அவரைச் சுற்றியிருந்த கூட்டம்தான்!’’
“களத்துக்கு வந்து மக்களோடு போராடாமல், வெறுமனே அறிக்கைகளிலேயே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே?’’
“ஸ்டெர்லைட் போராட்டத்தில், அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு படுகாயம் அடைந்தவர்களே எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். போராட்டக் களத்தில், கொடி, பேனர் என்று தனிப்பட்ட அடையாளங்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற என் வேண்டுகோளுக்கு இணங்க அமைப்பின் பெயரை அவர்கள் எங்கும் பயன்படுத்தவில்லை.’’
“சமீபத்தில், நீங்கள் கலந்துகொண்ட மக்கள் போராட்டம் என்று எதைச் சொல்வீர்கள்?”
“உண்மையைச் சொன்னால், நான் மக்கள் போராட்டம் எதிலும் கலந்துகொள்வதில்லை. அரசியல் சாயம் பூசுவதற்காக என்னால் பொய் எல்லாம் சொல்லமுடியாது.
பொதுவாக மக்கள் போராட்டங்களின்போது, என்னைப் போன்றவர்கள் வருகைதரும்போது, மக்களின் கவனம் திசைமாறக்கூடும்; கூட்ட நெரிசல் ஏற்படும். அதனாலேயே நான் பெரும்பாலான போராட்டங்களில் நேரிடையாகக் கலந்துகொள்வதில்லை.
தூத்துக்குடிப் போராட்டத்தில்கூட ஆரம்பத்தில் சில அரசியல் தலைவர்கள் நேரில் கலந்துகொண்டபோது எதிர்மறைக் கருத்துகள் கிளம்பின. அதுமட்டுமல்ல, தேவையற்ற வழக்குகளும் பதிவாகின. அதனால், ‘இங்கே வரவேண்டாம் மேடம்’ என்று சிலர் எச்சரித்தார்கள். நூறாவது நாள் போராட்ட நாளன்று இரவு நான் நேரில் கலந்துகொள்ளக் கிளம்பியபோது காவல்துறை எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அந்தளவுக்கு உளவுத்துறையினர் தொடர்ந்து என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்’’
“இதுபோன்று நீங்கள் போராட்டங்களைத் தவிர்ப்பதால், ‘சொகுசு அரசியல்வாதி ஜெ.தீபா’ என்ற குற்றச்சாட்டு வலுப்படுகிறதே?’’
“ஆர்.கே நகர் தேர்தலின்போது, மக்களிடம் வாக்கு கேட்டு நான் நடந்தே சென்றதை மக்கள் அனைவரும் பார்த்திருக்கிறார்கள். அதுகுறித்த வீடியோக்களும் என்னிடம் உள்ளன. ஆனால், வேண்டுமென்றே என்னைப் பற்றித் தவறாகச் சித்திரிக்கும் நோக்கில், எடிட் செய்த வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.
பிரசாரத்தின்போது, சில இடங்களில் கூட்டமாகப் பலரும் வேனில் ஏறிக்கொண்டதால், நான் வேனிலிருந்து இறங்கிச் சென்று வாக்கு சேகரிக்க நேர்ந்தது. இதுபோல் ஒன்றிரண்டு சம்பவங்கள் வேண்டுமானால் நடந்திருக்கலாம். தி.நகரில் உள்ள என் வீட்டிலிருந்து ஆர்.கே நகருக்கு நடைப்பயணமா போகமுடியும்? போலீஸார்தான் அதற்கு அனுமதி தருவார்களா? எனவே, காரில்தான் போகமுடியும். இதையும் குறை சொன்னால் எப்படி?’’
“ஜெ.விடமிருந்து உங்கள் குடும்பத்தைப் பிரித்தவர் சசிகலா எனக் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், இன்றைய சூழலில், சசிகலாவே தனிமைப்படுத்தப்பட்டு, சிறையில் இருக்கிறாரே?’’
“எங்கள் குடும்பத்துக்கு சசிகலா செய்த துரோகங்கள் என்று நான் கூறிவரும் சம்பவங்கள் எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல, அவை எல்லாமே உண்மையில் நடந்தவை.
ஜெயிலில் சசிகலா தனிமைப்படுத்தப்பட்டி ருக்கிறார் என்று யார் சொன்னது? சகல வசதிகளோடும் சிறப்பான வாழ்க்கையைத்தான் அங்கே அவர் வாழ்ந்துவருகிறார். உண்மையைச் சொல்லப்போனால், அவர் இப்போதுதான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். ஜெயிலுக்குள் போகாமல், வெளியில் இருந்திருந்தால், அ.தி.மு.க தொண்டர்களே வேறு மாதிரியான ட்ரீட்மென்ட்டை அவருக்குக் கொடுத்தி ருப்பார்கள். இவ்வளவு ஏன், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே சசிகலா வெளியே வருவதில் விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை!’’
“பத்திரிகையாளர் சந்திப்புகளில், ‘அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்’ என்று அடிக்கடி பந்தை நிருபர்கள் பக்கமே திருப்பி விட்டுவிடுகிறீர்களே, பதில் அளிக்கத் தெரியாததால்தான் அப்படியா?’’
“ஆரம்பகாலத்தில், நான் அப்படிச் சொன்னேன். காரணம், அப்போது நான் பல்வேறு குழப்பங்களில் இருந்தேன். எனக்கு ‘அரசியல் வேண்டுமா... வேண்டாமா...’ என்ற தெளிவே அப்போது இல்லை. எனவே, அந்தச் சூழலில், ‘அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்’ என்று சொல்லிவிடுவதே எனக்குப் பாதுகாப்பாக இருந்தது!’’