Published:Updated:

ஐந்தெழுத்துக்குத்தான் சர்கார் ராசியா?! ரஜினி, கமல், விஜய்யை இடிக்கும் லாஜிக்! #Satire

ஐந்தெழுத்துக்குத்தான் சர்கார் ராசியா?! ரஜினி, கமல், விஜய்யை இடிக்கும் லாஜிக்! #Satire
ஐந்தெழுத்துக்குத்தான் சர்கார் ராசியா?! ரஜினி, கமல், விஜய்யை இடிக்கும் லாஜிக்! #Satire

ஐந்தெழுத்துக்குத்தான் சர்கார் ராசியா?! ரஜினி, கமல், விஜய்யை இடிக்கும் லாஜிக்! #Satire

'உங்களுக்கு நியூமராலஜியில நம்பிக்கை இருக்கா பாஸ்?' இருந்தா, இப்போ சொல்லப்போற ஐந்தெழுத்து மேட்டர் கொஞ்சமில்ல, நிறையவே சுவாரஸ்யமா இருக்கும். 

டெங்கு காய்ச்சலைவிட வேகமா பரவிட்டிருக்கு `சர்கார்' காய்ச்சல். ரொம்ப நாளைக்கப்புறம் ஓர் அரசியல் படம், தமிழ்நாட்டில் சூட்டைக் கிளப்பியிருக்கு. 'இளைஞனா இருக்கிற ஹீரோ, அரசியலுக்கு வர்றது, கட்சி ஆரம்பிக்கிறது, ஆட்சியைப் பிடிக்கிறது’ன்னு கதை எழுதி, `முதல்வன்’ படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். அந்தப் படம் ஞாபகம் இருக்கா? இப்போ அதே மாதிரியான ஒரு `கதையெழுதி' முருகதாஸ் சர்கார் எடுத்திருக்கார். 

இந்த இரண்டு படங்களிலுமே ஆட்சியில் இருக்கிற முதல்வரை வீழ்த்தி இன்னொருத்தர் முதல்வராவதுதான் கதை. அதுல 'புகழேந்தி’ முதல்வராகுறார்னா, சர்கார் படத்தில், விஜய் ஆதரவு பெற்றவர்கள் ஜெயித்து, 'சற்குணம்’ முதல்வராவது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதில என்னப்பா சுவாரஸ்யம் இருக்குனு இப்போவே யோசிக்க வேணாம். முதல்வர்கள் இரண்டு பேரின் பெயருமே ஐந்தெழுத்தில் இருக்கில்லையா? இப்போ சொல்லப்போற மேட்டர் இதைப்பத்திதான் பாஸ்.

'நம்பர்ஸ்...', இதை கணிதம்னு சொல்லுறாங்க பலர். எண்கணித ஜோதிடம்னு சொல்லுறாங்க சிலர். அதையொரு நம்பிக்கையாப் பார்க்கும்போது பிரச்னையில்லை. மூடநம்பிக்கையா மாற்றும்போதுதான் பிரச்னை. எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும். ஆனா, நம்பருக்குன்னு ஒரு பவர் இருக்கு பாஸ்.

பொதுவா, அரசியல்வாதிகளுக்கு நம்பர்தான் கடவுள், தேவுடு எல்லாம். நம்ம வாழ்க்கையிலும் நம்பர் முக்கியமான ரோல் பிளே பண்ணுது. 'எத்தனை மாசம்?' என்பதில் ஆரம்பிச்சு, 'என்ன வயசு?', 'எவ்ளோ மார்க்?', 'எவ்ளோ சம்பளம்?', 'எத்தனை குழந்தைங்கன்னு, தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். ஆக, நம்பர் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மேட்டர் அண்டு ஃபேக்டர். 

தமிழ்நாட்டு அரசியலுக்கும் குறிப்பிட்ட ஒரு நம்பருக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அந்த நம்பர் ஐந்து. திணைகள் 5, காப்பியங்கள் 5, பூதங்கள் 5 என்று தமிழோட இணைபிரியாமல் இருக்கிற எண் 5. இதற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கு பாஸ்.. சம்பந்தம் நிச்சயம் இருக்கு. 

தமிழ்நாடு, தமிழகம், அரசியல், அதிகாரம்... இந்த வார்த்தைகள் எல்லாமே 5 எழுத்து கொண்டவைதான். இது மட்டுமில்ல. வேட்பாளர், வேட்புமனு, பரப்புரை, வாக்காளர், எண்ணிக்கை, முடிவுகள், பிரதிநிதி, அமைச்சர், முதல்வர், பிரமாணம், கையெழுத்து என்று ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய வார்த்தைகள் பலவற்றுக்கும் 5 எழுத்துதான். இதைவிட பயங்கரமா ஒண்ணு இருக்கு. 'அடடே... ஆச்சர்யக்குறி' மேட்டர் அது!

இதுவரைக்கும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்கள் யார், யார்? அதாவது, அதிக ஆண்டுகள் நிலைச்சு நின்னு ஆட்சி செலுத்தியவங்க + ஒரு தலைவராவும் நின்னவங்க என்று ஒரு லிஸ்ட் போடுவோம். ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி... இவங்கதான் அவங்க!

ராஜாஜியின் பெயர் 5 எழுத்து கிடையாது. ஆனா, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் இல்ல. அவர், அப்பாயின்டட். சில வருடங்களில், ஆட்சியில் இருந்து இறங்கிட்டார் ராஜாஜி. அடுத்து நடந்த எந்தத் தேர்தலிலும் ராஜாஜி ஜெயிக்கல. கட்சி ஆரம்பிச்சார், போட்டியிட்டார். ஆனா, திரும்ப முதலமைச்சராக முடியவில்லை. 

அடுத்து பக்தவத்சலம். ஆமா, இவர் 3 வருஷத்துக்கும் அதிகமா ஆட்சி பண்ணியது உண்மைதான். ஆனா, அவருக்குமே முதலமைச்சர் அரியாசனம் நேரடியா அமையல. காமராஜர் ராஜினாமா செய்ததால, முதல்வர் பதவிக்கு வந்தார். அந்த ஆட்சியோட அவரும் அப்பீட். திரும்ப முதல்வர் அரியணை பக்தவத்சலத்துக்கு வாய்க்கல. ஏத்துக்க முடியலயா? அப்ப இவர மட்டும் ஆப்ஷன்ல விட்றலாம்.

இன்னொருத்தர், இப்போ இருக்கும் பன்னீர்செல்வம். இவருடையதும் 5 எழுத்து பெயர் இல்ல. பாவம் பன்னீர்! 3 முறை அரியணையில் உட்கார்ந்தார். 3 முறையுமே கொடுத்து வெக்கல. 2 முறை, ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்கு ஏதுவாக அவரே விலகினார். ஜெ. மறைவுக்குப் பின் மூன்றாவது முறை துரத்திட்டாங்க. இப்போ, பன்னீர் துணை முதல்வர்தான். 

ஆனா...பாருங்க! 5 எழுத்து 'பழனிசாமி' அலேக்கா அரியணையில் அமர்ந்துட்டார். ``இந்த ஆட்சி ரெண்டு மாசத்துல கலைஞ்சிரும்"னு ரெண்டு வருசமா சொல்லிக்கிட்டே இருக்காங்களே தவிர, அவர் என்னவோ முதல்வரா தொடர்ந்து கொண்டுதான் இருக்கார். பழனிசாமியை ஆட்டவோ, அசைக்கவோ முடியல. ஆயிரம் பிரச்னைங்க இருந்தாலும், 'எடப்பாடி' பழனிசாமி  ஆட்சி பண்றார், தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்கார்.

5 எழுத்து முதல்வர்களில், முதலும் முக்கியமும் ஆனவர் காமராஜர்! ஆமா, அவர் 'காமராஜ்'-தான். ஆனா, அப்படிச் சொல்லக்கூடாது பாஸ். ஏன்னா, அப்படி சொல்லக்கூடாதுன்னு அரசாணை இருக்கு. அரசு ஆவணங்கள் அனைத்திலும் அவர் 'காமராஜர்'தான். அவர், கிட்டத்தட்ட பத்து வருஷமா ஆட்சி செய்தார். பெரும்புகழ் பெற்ற பெருந்தலைவராகவும் மாறினார். இப்போவரை 'காமராஜர் ஆட்சி'ங்கிறது , ஒரு மாடல் ஆட்சியா, கனவாவே இருக்கு.

அண்ணாதுரையும் அப்படியே. ஆண்டது என்னமோ இரண்டு வருசம்தான். ஆனா, தமிழ்நாட்டின் மறக்க முடியாத முதல்வர், அவர். அண்ணா இறக்காம இருந்திருந்தா, இன்னும் பல வருஷங்கள் ஆண்டிருப்பார். அந்தளவுக்கு வலிமையான தலைவரா இருந்தார். பின்னர் வந்த அத்தனை பேருக்கும் அவர்தானே ஆணிவேர்!

'எம்.ஜி.ஆர்' என்பது 5 எழுத்தா? ஆமா பாஸ்... தமிழில் வாசிச்சா 5 எழுத்துதான். தனித்தனியா 5 எழுத்துகள். அடிச்சு சொல்லலாம். 5 எழுத்து பெயர் எம்.ஜி.ஆர்! (எப்டிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு!?) அவர், கட்சி ஆரம்பிச்சார். ஜெயிச்சார். சாகும்வரை தமிழகத்தின் சாம்ராட்டாவே இருந்தார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தார் ஜானகி. ஆனா, அவரால் சில மாசங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியல. தேர்தலிலும் தோத்துப்போனார்.

'ஜெயலலிதா' கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். முதலமைச்சராக இருந்தபோதே இறந்தார். அசைக்க முடியாத சக்தியா ஆட்சியில் இருந்த இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தார். இடையில் வழக்குகளில் சிறைக்குச் சென்றாலும் மீண்டும் ஜெயம் கொண்டு ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை.

சொல்லவே வேண்டியதில்ல; கருணாநிதிதான் தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்டவர். என்னதான் ஆட்சி கலைக்கப்பட்டாலும், அப்பப்போ தோத்தாலும், திரும்பத் திரும்ப அரியணையில் அமர்ந்தார். இதுவரைக்கும் 'அண்ணா’-வின் உண்மைத் தம்பியாக அதிகமுறையும் தமிழகத்தை ஆண்டிருக்கிறார். அதுவும் '5' முறை என்பது விசித்திரமே.

தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்திருக்கும் சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு, 'திராவிடம்' பாஸ். அதற்கும் 5 எழுத்து!

இப்போ நிகழ்கால நிலவரம்! முதலில் ஸ்டாலின். இதுவரைக்கும் ஸ்டாலின் வகித்த உச்சபட்ச பதவி, துணை முதல்வர் பதவிதான். ஆண்டுக்கணக்கா போராடியும், இன்னும் முதல்வர் நாற்காலிக்கு அவரால் முத்தம் கொடுக்க முடியல. 'ஸ்டாலின்' 5 எழுத்து பெயர் கொண்டவரல்ல. இதுவொரு பிரச்னை இல்லதான். ஆனாலும், ஸ்டாலினுக்கு அரியணை அமையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஸ்டாலினுக்கு ஒரு ஆறுதல்... 'உதயநிதி' 5 எழுத்து பெயர். இன்னொரு ஆறுதல்... ‘சபரீசன்’ என்பதும் 5 எழுத்து தான்.

மற்றொருபுறம் சசிகலா குடும்பத்தில்தான் அதிக 5 எழுத்து பெயர்க்காரர்கள் இருக்கிறாங்க. அதுக்கேத்த மாதிரி எல்லோருமே அரசியல் ஆசையிலயும் அலையுறாங்க. தினகரன், திவாகரன், பாஸ்கரன், ஜெயானந்த்... இப்படி பல பேர்! 5 எழுத்து பெயரில்லாத 'சசிகலா', அவ்வளவு முயற்சி பண்ணியும் முதலமைச்சராக முடியாமல் போனது. அடுத்த 5 எழுத்து பெயர்க்காரர் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி. 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் உண்மையான பெயர் கோபால்சாமி. ஒழுங்கா ஒரே இடத்தில் இருந்திருந்தா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குமோ என்னவோ? அங்கேபோய் இங்கே வந்து என்று ஒரு சுற்று வந்து விட்டார். இப்போ, தாய்க்கழகத்தை ஆதரிக்கிறார்.

முதல்வராவார்னு எதிர்பார்க்கப்பட்டவர் விஜயகாந்த்! ஆனா, எதிர்க்கட்சித் தலைவர் வரைதான் அவரால் பயணிக்க முடிஞ்சது. இதுக்கும் 5 எழுத்து இல்லாதது காரணமா இருக்குமோ?! 'பிரேமலதா' வேண்டுமானால் ஒரு முயற்சி செய்யலாம் பாஸ்!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீமான், தமிழிசை, விஷால் ஆகியோரின் பெயர்கள் எல்லாம் 5 எழுத்துகளில் இல்லை. அப்பாடா! விஜய்யும் 5 எழுத்து பெயரில்லதான். ஆனா, விஜய் ரசிகர்கள் ‘விஜய்க்கு இன்னொரு பேர் இருக்கு... அது, 'விஜயண்ணா’னு சொல்றாங்க. தம் கட்றாங்களே! ஆனா, 'அறம்' தந்த அறச்செல்வி 'நயன்தாரா' 5 எழுத்து பெயர் கொண்டவர். அதெல்லாம் அதுவா அமையணும்ப்பா!

எல்லோருக்கும் வாய் வரைக்கும் வந்திருக்கும் ஒரு கேள்வி... இதென்ன மூட நம்பிக்கை? இல்ல பாஸ், இது ஒரு நம்பிக்கை. அடடே... 'நம்பிக்கை'யும் 5 எழுத்துதான்!

என்னமோ?! இதையெல்லாம் காமெடியா பார்த்தா காமெடி.... சீரியஸா பார்த்தா சீரியஸ்! எப்படின்னு உங்க முடிவுக்கே விட்டுடறோம்...

அடுத்த கட்டுரைக்கு