Published:Updated:

ஜே.பி.சி கூட்டம்: பயந்து பின் வாங்கிய மத்திய அரசு!

 ஜே.பி.சி கூட்டம்:  பயந்து பின் வாங்கிய மத்திய அரசு!
ஜே.பி.சி கூட்டம்: பயந்து பின் வாங்கிய மத்திய அரசு!
 ஜே.பி.சி கூட்டம்:  பயந்து பின் வாங்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி.) தலைவர் பதவியிலிருந்து பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற இன்று நடைபெற இருந்த ஜே.பி.சி. கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டது.அதில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கோ அல்லது நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கோ 2ஜி முறைகேட்டில் தொடர்பில்லை என்றும், ஆனால் அப்போதைய மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சரான ஆ.ராசா பிரதமரை தவறாக வழிநடத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை திமுக, பா.ஜனதா உள்ளிட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த கட்சிகள் நிராகரித்துவிட்டன.

##~~##
இந்நிலையில் இந்த அறிக்கைக்கு ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, இக்கூட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துவிட்டது.
சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று ஜேபிசி கூட்டத்தின் தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து பி.சி.சாக்கோவை நீக்க கோரி மக்களவை சபாநாயகர் மீரா குமாரை சந்திக்க உள்ளனர். கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் 15 உறுப்பினர்கள் பி.சி.சாக்கோவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.