Published:Updated:

ராடியா - டாடா டேப் வழக்கு: மத்திய அரசு, பத்திரிகைகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Vikatan Correspondent
ராடியா - டாடா டேப் வழக்கு: மத்திய அரசு, பத்திரிகைகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி, நவ.29,2010

நீரா ராடியாவுடனான உரையாடல்கள் அடங்கிய ஆடியோ டேப்புகள் கசிந்தது தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா தொடர்ந்த வழக்கில் வருமான வரித் துறை, சிபிஐ, மத்திய உள்துறை மற்றும் நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ##~~##

அதேபோல், டேப் விவரங்களை கசிய விட்ட 'ஓபன்' மற்றும் 'அவுட்லுக்' ஆகிய பத்திரிகை இதழ்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளும் 10 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .(விவாதக் களம்... நீரா டேப்: ரத்தன் டாடாவின் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளதா?)  

வழக்கின் பிண்ணனி...

ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பான வழக்குக்கு ஆதாரமாக கருதப்படும் டேப் விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
2009 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களை தீர்மானிக்கும் மனிதராக வலம் வந்ததாக நம்பப்படும் லாபியிஸ்ட் நீரா ராடியா, அந்தச் சூழலில் ஆ.ராசா, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பத்திரிகையாளர்கள் வீர் சங்வி, பர்கா தத், தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோருடனான பேச்சுகள் அடங்கிய டேப் விவரங்கள் தான் அந்த ஆதாரங்கள். அவை மீடியாவிலும் வெளியிடப்பட்டன.

நீரா ராடியாவின் நிறுவனம் டாடா குழும நிறுவனங்களுக்கும் மக்கள் தொடர்பு சம்பந்தமான பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், டாடா குழும நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பற்றிய விவரமும் வெளியானது.

2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை விசாரணை நோக்கத்துக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அந்த உரையாடலின் பகுதியைத் தான் பத்திரிகைகள் கசிய விட்டன.

இதன் தொடர்ச்சியாக, தனது தனி மனித உரிமை மீறப்பட்டதாக, உச்ச நீதிமன்றத்தை நாடினார் ரத்தன் டாடா.

அரசியல் சட்டத்தின் 32-வது பிரிவு ஒவ்வொருவரின் வாழும் உரிமையையும், தனிப்பட்ட உரிமைகளையும் பாதுகாக்க வகை செய்கிறது. நீரா ராடியாவுக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் பகுதி வெளியாகி இருப்பதன் மூலம், தனது தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.

அவரது சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், நீரா ராடியாவுடனான உரையாடலை விசாரித்து வரும் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரப்படவில்லை.

மாறாக, அந்த விசாரணைக்காக பயன்படுத்தப்படும் அந்த டேப் விவரங்கள் மக்களின் பார்வைக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் இரண்டு பத்திரிகை இதழ்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.