Published:Updated:

முதல் பெண்கள்

முதல் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்

ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

முதல் பெண்கள்

ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்

லகின் முதல் பெண் சட்டசபைத் துணைத் தலைவர், இந்தியாவின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர், மதராஸ் மாநகராட்சியின் முதல் பெண் உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

தீர்க்கமான எண்ணமும், தெளிவான பேச்சும்தான் அவரது அடையாளம். புதுக்கோட்டையை அடுத்த திருக்கோ கர்ணத்தில் 1886-ம் ஆண்டு பிறந்த முத்து லட்சுமிக்கு, சிறுவயது முதலே படிப்பில் பெரும் ஆர்வம். தந்தை நாராயணசுவாமி ஐயர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளர். தாய் சந்திரம்மாள் இசை வேளாளர் மரபினர். அதிகம் படிக்க வைக்காமல், சிறுமி முத்துலட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்துவிடுவது என்று தாயும் தந்தையும் முடிவெடுத்திருக்க, அவர்கள் அறியாமலே ரகசியமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டார் முத்துலட்சுமி. மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். ஆண்கள் கல்லூரியில் பெண்ணுக்கு எப்படி இடம் தருவது என்று மன்னர் கல்லூரி முதல்வர் இவருக்கு இடம் தர மறுக்க, தயங்காத முத்துலட்சுமி சென்றது - புதுக்கோட்டை மன்னர் ராஜா மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானிடம். சிறுமியைப் பாராட்டி, புதுகை மன்னர் கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்க இடமும் தந்து, உதவித்தொகையும் அளித்தார்.

முதல் பெண்கள்

1907-ம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கென மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, வெற்றிகரமாக அதிலும் முதலிடத்தைப் பிடித்தார் முத்துலட்சுமி. 1913-ம் ஆண்டு எழும்பூர் மதராஸ் மகப்பேறு மருத்துவமனையில் பணியில் அமர்ந்தார். அங்கு பணியில் அமர்ந்த முதல் பெண் மருத்துவர் இவர். அதே ஆண்டு, மருத்துவர் முத்துலட்சுமியைச் சந்தித்தார் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்பு முடித்த முதல் இந்தியரான டாக்டர் சுந்தர ரெட்டி. அன்றைய மாகாண முதல்வர் சுப்பராயுலுவின் தமக்கை மகன். முத்துலட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் தெரிவிக்க, ஒரே ஒரு நிபந்தனை விதித்தார் முத்துலட்சுமி.  `எந்த விதத்திலும் என் சமூகநலப் பணியில் குறுக்கிடக் கூடாது’ என்பதே அது. மிகுந்த மகிழ்வுடன், மனமுவந்து அவரை மணந்து கொண்டார் சுந்தர ரெட்டி. 1914-ம் ஆண்டு அன்னி பெசன்ட்டின் பிரம்ம ஞான சபை முறைப்படி திருமணம் நடைபெற்றது. இரு ஆண் குழந்தைகளுக்குத் தாயானார் முத்துலட்சுமி.

1917-ம் ஆண்டு மார்கரெட் கசின்ஸ் எனும் பெண்மணியால் தோற்றுவிக்கப்பட்ட `மதராஸ் இந்திய பெண்கள் அசோசியேஷன்’ அமைப்பின் முதல் இந்தியப் பெண் உறுப்பினரானார் முத்துலட்சுமி. அதன் வெளியீடான `ஸ்த்ரீ இந்தியா’ எனும் பத்திரிகையின் ஆசிரியரானார்; பிற்காலத்தில் அமைப்பின் ஆயுட்காலத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்த அமைப்பே இன்றைய பெண்கள் சங்கங்களுக்கு வித்து என்று சொல்லலாம். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கு ஆதரவாக முதலில் களமிறங்கியது இந்த அமைப்பே.

1923-ம் ஆண்டு கேன்சர் நோய் சரியாகக் கண்டறியப்படாத காரணத்தால் தன் தங்கை சுந்தரம்மாளை இழந்தார் முத்துலட்சுமி. மிகவும் மனம் நொந்திருந்த முத்துலட்சுமிக்கு பின்னாளில் பெரும் உந்துசக்தியாக இருந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அவர் தோற்றுவிக்கக் காரணியாக இருந்தது இந்தத் துர்மரணம். 1925-ம் ஆண்டு பனகல் மன்னர் உதவியுடன் இங்கிலாந்து சென்று தாய் - சேய் நலச் சிறப்புப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கிருந்து 1926-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற முதல் சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் முத்துலட்சுமி. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வளர வேண்டும் என்று முழங்கினார்.

அதே ஆண்டு இந்தியப் பெண்கள் அசோசியேஷனின் ஏற்பாட்டில், சட்டமன்றம் நுழைந்தார் முத்துலட்சுமி. மருத்துவப் பணியே தனக்குச் சரி என்று கூறி வாய்ப்பை மறுத்த அவரை, சட்டசபை உறுப்பினராகப் பெண்கள் குழந்தைகள் நலனுக்கென இன்னும் அதிகம் உதவலாம் என்று ஆலோசனை கூறி, சம்மதிக்க வைத்தார்கள் அமைப்பினர். அடுத்த ஆண்டே பி.டி.ராஜன் முன்மொழிய, உலகின் முதல் பெண் சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதராஸில் குழந்தைகளுக்கான தனி மருத்துவமனை, 8-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, மாணவமாணவியருக்குக் கட்டாய இலவச மருத்துவ ஆய்வு, பிரத்யேக பெண் காவல் படை, பெண் நோயாளிகளுக்குப் பெண் மருத்துவர்களைக்கொண்டு சிகிச்சை, மதுக்கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றுதல், மது ஒழிப்பு, மதராஸ் சேவா சதனத்துக்குப் பண உதவி, பெண்களுக்குத் தொழிற்சாலைப் பணிப் பயிற்சி, ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு 16 வயது  என்றும் ஆக்கக் கோரும் சட்ட வரைவு, தேவதாசி முறை ஒழிப்பை வலியுறுத்தும் சாரதா சட்ட வரைவுக்கு ஆதரவு என விறுவிறுப்பாகச் சென்றன முத்துலட்சுமி முன்னெடுத்த பணிகள். தேவதாசி முறை ஒழிப்புக்கென காந்தி முதல் பல தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார் அவர். 1930-ம் ஆண்டு காந்தியடிகளின் தண்டி யாத்திரைக்கு ஆதரவாக, தன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் முத்துலட்சுமி.

1930-ம் ஆண்டு, இவரிடம் அடைக்கலம் புகுந்த மூன்று தேவதாசி சிறுமிகளுக்குப் பாதுகாப்பளித்து, அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். வாழ வழியற்ற பெண் குழந்தைகளுக்கு ஆலமரமாக நிழல் தந்து, கல்வி வசதி, தொழில் கற்கும் வசதி என அனைத்தும் செய்து தந்தார். அவ்வை இல்லம் தழைத்து வளர்ந்தது. கல்வியில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த ஹர்தோக் கமிட்டியின் ஒரே பெண்
உறுப்பினராகச் செயல்பட்டார். 1952-ம் ஆண்டு அவரது பெரும் கனவு நனவானது. முத்துலட்சுமி தோற்றுவித்த அடையாறு புற்றுநோய் மையத்தின் அடிக்கல் நாட்டினார் நேரு.

1955-ம் ஆண்டு மருத்துவமனை தன் பணியைத் தொடங்கியது. பத்மபூஷண் விருதும் பெற்றார் முத்துலட்சுமி. அயராது சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தவர் 1968-ம் ஆண்டு மறைந்தார். முத்துலட்சுமி ரெட்டி நினைவாக, வறுமைக்கோட்டின்கீழ் வாழும் கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்களுக்கான அரசின் உதவித் திட்டத்துக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது தமிழக அரசு. துரதிர்ஷ்டவசமாக, முத்துலட்சுமி வாழ்ந்து மறைந்த வீடு, சென்னை அடையாற்றில் உள்ள அவ்வை இல்லத்துக்கு அருகே சிதிலமடைந்து கிடக்கிறது. சட்டச்சிக்கலில் மாட்டித் தவிக்கும் அந்த வீட்டை மீட்டு அம்மையாரின் நினைவிடமாக மாற்ற அரசு முயலுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!