Published:Updated:

``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்!" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை

`இதை வைத்து என்னை வீழ்த்திவிடலாம்' என எங்கள் கட்சியின் உள் எதிரிகளும் நினைத்தார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன் எனப் பேசியிருக்கிறார் தமிழிசை.

``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்!" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை
``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்!" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை

`தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்?' என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவி வருகிறது. ``எங்கள் கட்சியின் மூத்த தலைவரிடம் நீங்கள் பேசினால், 20 தொகுதிகளின் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளில் இறங்குவோம்’’ என ஸ்டாலின் தரப்பினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் தமிழிசை. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் தேசிய அளவில் வலுவான கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒரு கட்டமாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பா.ஜ.க-வுக்கு எதிராக முற்போக்கு அணி ஒன்று உருவாவதை அமித் ஷா தரப்பினர் ரசிக்கவில்லை. இந்தக் கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளின் தேர்தலை முன்வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை. இதுதொடர்பாக, ஸ்டாலின் தரப்பினருக்கு விரிவான தகவல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அதில், ``இடைத்தேர்தலை எதிர்கொள்ளது உங்களுக்கு நல்லதல்ல. `ஆர்.கே.நகரிலேயே தேர்தலை நடத்த வேண்டாம்; தினகரன் அந்தத் தொகுதியில் செல்வாக்கானவராக இருக்கிறார்; நீங்கள் மூன்றாவது இடம் போவீர்கள்' என்று சொன்னேன். அதற்கு நீங்களோ, `இல்லை, நாங்கள் முதலிடம் வருவோம்' எனக் கூறினீர்கள். நீங்கள் இப்படி நினைப்பதற்குக் காரணம், ஆர்.கே.நகரில் பா.ஜ.க தோல்வி அடைந்தால், என்னைத் தலைவர் பதவியில் இருந்து மாற்றிவிடுவார்கள். அதனால், என்னுடைய சுயநலத்துக்காகச் சொல்வதாக நினைத்தீர்கள். ஆனால், ஆர்.கே.நகர் நிலவரம் குறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் அப்போதே விரிவாகக் கூறிவிட்டேன். 

`தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நியாயமாகவும் சுயேச்சையாகவும் நடக்காது. ஆளும்கட்சியும் பணபலம் உள்ளவர்கள் மட்டும்தான் வெல்ல முடியும்' எனத் தெரிவித்தேன். இதை ஏற்றுக்கொண்ட கட்சித் தலைமையும், `காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் களத்தில் போட்டியிடவில்லை. நாம் போட்டியிடுகிறோம் எனக் காட்டுவதற்காக நில்லுங்கள்' எனக் கூறியது. அதனால்தான், எங்களுக்கு வந்த ஓட்டுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. `இதை வைத்து என்னை வீழ்த்திவிடலாம்' என எங்கள் கட்சியின் உள் எதிரிகளும் நினைத்தார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன். காரணம், எங்கள் கட்சித் தலைமையிடம் நான் அனைத்தையும் கூறிவிட்டேன். இப்போதும் 20 தொகுதிகளின் நிலைமை குறித்துத் தலைமையிடம் அறிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த இடைத்தேர்தல் உங்களுக்கு மோசமாக இருக்கும். ஆர்.கே.நகரில் டெபாசிட் பறி கொடுத்ததால் தி.மு.க தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசுங்கள். நீங்கள் சம்மதம் தெரிவித்தால், தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளைச் செய்கிறோம். எனக்காகப் பேசுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்குச் சாதகமாகச் செய்து தருகிறோம்" எனக் கூறியிருக்கிறார். 

தமிழிசையின் நகர்வு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ``தமிழகத்தில் தி.மு.க தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அமித் ஷா. அதனால்தான், 20 தொகுதிகளின் தேர்தலை முன்னிறுத்தி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகளும், `தேர்தலை நிறுத்துவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. இடைத்தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிவிடலாம். ஆறு மாதத்துக்கு முன்பாகவோ, பின்பாகவோ தேர்தலை நடத்தும் உரிமை ஆணையத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் பொதுத்தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடக்கவிருப்பதால், 20 தொகுதிகளில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டியதில்லை. ஆர்.கே.நகரில் நடந்த பணப்பட்டுவாடா குறித்து சிதம்பரமே நேரடியாகப் பேசியிருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகியிடம் பேசுங்கள்' எனக் கூறியுள்ளனர். தமிழிசை குறிப்பிட்ட அந்த மூத்த நிர்வாகியிடம் ஸ்டாலின் பேசுவார் என உறுதியாக நம்புகின்றனர் கட்சி நிர்வாகிகள்" என்றார் விரிவாக.