Published:Updated:

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க. எம்.எல்.ஏ. `திடீர்' சந்திப்பு! பின்னணி என்ன?

"நாங்கள் எந்த ரகசியமும் பேசவில்லை. ரகசியமாகப் பேச வேண்டும் என்றால், பொது இடத்தில் ஏன் சந்தித்துப் பேச வேண்டும? வேறோர் இடத்தில் ரகசியாகச் சந்தித்துப் பேசி இருக்கலாம் அல்லவா?"

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க. எம்.எல்.ஏ. `திடீர்' சந்திப்பு! பின்னணி என்ன?
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க. எம்.எல்.ஏ. `திடீர்' சந்திப்பு! பின்னணி என்ன?

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு ஆகியோரின் திடீர் சந்திப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசினர் ராணியார் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு விழிப்பு உணர்வு முகாம் மற்றும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

மாவட்ட நிர்வாகத்தால் நடைபெற்ற இந்த விழாவுக்குப் புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ.பெரியண்ணன் அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவிகளிடம் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு பள்ளி வளாகத்துக்கு வந்தார். அங்குள்ள தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அமர்ந்து, அமைச்சரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார். பெரியண்ணன் அரசுவின் திடீர் வருகையால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியண்ணன் அரசு வருகை குறித்து அறிந்த அமைச்சர், மாணவிகளுக்கு விலையில்லாச் சைக்கிள்கள் வழங்கும்  நிகழ்ச்சியை முடித்து, தலைமை ஆசிரியர் அறையை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் வேகமாக நடந்துசென்றார். இதைக் கண்டதும் செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் உடன் சென்றனர். உள்ளே சென்ற அமைச்சரை, எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார். இருவரின் சந்திப்பையும் புகைப்படக் கலைஞர்கள் படம் எடுக்க முயன்றபோது எம்.எல்.ஏ. துண்டை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டார். மேலும், யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியதால், அனைவரும் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

அதன்பின், இருவருக்கும் இடையே சுமார் 10 நிமிடங்கள் வரையிலும் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பள்ளியைவிட்டு வெளியே வந்த அமைச்சர் காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் சென்ற சிறிது நேரத்தில், பள்ளி கலையரங்குக்குச் சென்ற பெரியண்ணன் அரசு, மீண்டும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் பெரியண்ணன் அரசு கூறுகையில், ``பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் என்ற முறையில், பள்ளி வளர்ச்சிக்காக  அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். பள்ளிக்குக் கூடுதல் கட்டடம், நடைபாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினேன். நாங்கள் எந்த ரகசியமும் பேசவில்லை. ரகசியமாகப் பேச வேண்டும் என்றால், பொது இடத்தில் ஏன் சந்தித்துப் பேச வேண்டும? வேறோர் இடத்தில் ரகசியமாகச் சந்தித்துப் பேசி இருக்கலாம் அல்லவா?" என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ``மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ-வுக்கும் அழைப்பு விடுக்கச் சொல்லி இருந்தேன். தொகுதியின் வளர்ச்சிக்காகச் சில கோரிக்கைகளை அவர் என்னிடம் கூறினார். அவை, நிறைவேற்றி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினேன். ரகசியச் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை" என்றார்.

தி.மு.க-வினர் எந்தச் சூழ்நிலைகளிலும், அ.தி.மு.க அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்ட யாருடனும் தொழில் ரீதியாகவோ, தன்னிச்சையாகவோ தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை தி.மு.க-வால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க தலைமைக் கழகத்தால் அரசியல் எதிரிகள் என்று பார்க்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கருடன் உறவு வைத்துக்கொள்வதா என அதிருப்தியடைந்த கழக நிர்வாகிகள் சிலர், அறிவாலயம் வரையிலும் புகார் வாசித்து இருக்கின்றனர். இன்னும் சிலரோ, ``எம்.எல்.ஏ-வுக்குப் பள்ளியின்மீது உண்மையான அக்கறை இருந்தால், ஆட்சித் தலைவரிடம் தெரிவித்திருக்கலாமே? அதைவிடுத்து அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாகக் கூறி ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளாரே..." என்று பேச ஆரம்பித்துவிட்டனர். ஆக மொத்தம், இருவருடைய சந்திப்பு புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.