Published:Updated:

``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்!’’

``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்!’’

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

மிழக அரசியல் மேடைகளில் எதிரிகளை வசைபாடி வந்த நாஞ்சில் சம்பத், இப்போது இலக்கிய மேடைகளில், இசை பாடி வருகிறார்!‘அரசியலுக்கு முழுக்குப்போட்டு விட்டேன்’ என்று இப்போதெல்லாம் நாஞ்சில் சம்பத் சீரியஸாகப் பேசினால்கூட, ‘செம காமெடியா பேசுறீங்க சார்!’ என்று கைதட்டிச் சிரிக்கிறார்கள் மக்கள். காரணம், கடந்த காலங்களில் அவர் அடித்த அந்தர் பல்டிகள்.

``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்!’’

‘`எப்படி நம்புவது உங்கள் அரசியல் துறவறத்தை...?’’

‘` அதிகார அரசியலில் என்றைக்கும் நான் நாட்டம் செலுத்தியதில்லை. ஏதாவதொரு பதவியை அலங்கரிக்க வேண்டுமென்று கனவில்கூட நினைத்ததில்லை. எனவே, நான் அரசியல்வாதியே கிடையாது!

என்றைக்காவது ஒருநாள் இந்தச் சுமையை இறக்கி வைத்துவிட்டுப் போகமுடியும் என்ற மனநிலையில்தான் இத்தனை ஆண்டுக்காலமும் இயங்கிக்கொண்டிருந்தேன்.’’

‘`நீங்கள் விரும்பும் ‘அண்ணாவும் திராவிடமும்’ திவாகரன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில் இருக்கிறதே... மீண்டும் அரசியலுக்குள் வர வாய்ப்பிருக்கிறதா?’’

‘`வாய்ப்பில்லை... ஏனெனில், ஒரு பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பேசுவதற்கு ஒரு புலவனுக்குக் கருப்பொருள் வேண்டும். அந்தத் தலைமைப்பண்பு இல்லை!’’

‘`தினகரனிடம் இருந்த தலைமைப்பண்பு, திவாகரனிடம் இல்லை என்கிறீர்களா?’’

‘`நான் அப்படிச் சொல்லவில்லை... திவாகரனைப் பற்றி நான் எப்படிப் பேசமுடியும்? தினகரனிடம் தலைமைப்பண்பு இருக்கிறது என்று நான் ஏற்கெனவே சொன்னேன்... அந்த இடத்துக்கு அவரைக் கொண்டுவந்து சேர்த்துவிட முடியும் என்று நம்பினேன். ஆனால், அவை அனைத்தும் பொய்த்துப்போய்விட்டன. எனவே, தத்துவத்தில் கால் ஊன்றித்தான் பயணிக்க முடியுமே ஒழிய... தகரங்களில் கால் ஊன்றிப் பயணிக்க முடியாது!’’

‘`18 எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்க வழக்கின் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`இதனைத் தீர்ப்பென்றே நான் கருதவில்லை. 30 பேர் கூடுகின்ற கிராமப் பஞ்சாயத்தில்கூட இப்படியொரு தீர்ப்பு வராது.’’

‘`நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில், வைகோவை நேரில் சந்தித்தபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?’’

‘`என்னுடைய கால்சட்டைப் பருவத்திலேயே என்னை ஆட்கொண்ட தலைவன் வைகோ! அவருடைய கட்சியில் நான் இல்லை என்றாலும்கூட, எப்போதும் அவர் என்னுள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்.

தமிழியக்க நிகழ்ச்சி ஒன்றில்தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணன் வைகோ-வைப் பார்த்தேன். என்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது போன்ற ஓர் உணர்வுதான் அது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘வீட்டில் எல்லோரும் நல்லாருக்காங்களா...?’ என்பதுதான். கட்சியில் இருக்கிறேன்... இல்லை... என்பதெல்லாம் அங்கே கிடையாது. அன்றைக்கும் அதே பாசத்தோடு கேட்டார். நானும் பதில் கூறிவிட்டு, அவர் குடும்பத்து நலம் விசாரித்தேன்!’’

‘’சீமான் ஆதரவாளர்கள் சிலர் வெளியிடும் மீம்ஸ்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிவரும் வைகோவுக்கு, உங்கள் டிப்ஸ்?’’

‘`அலட்சியப்படுத்துங்கள், நிராகரியுங்கள். உங்கள் உயரத்துக்கு சீமான் ஒரு பொருட்டே அல்ல!’’

‘` ‘ரஜினியிடம் காந்தியைப் பார்க்கிறேன்...’ என்கிறாரே தமிழருவி மணியன், இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`இதைக் கேட்டு, கல்லறையில் புரண்டு படுத்திருப்பார் காந்தி!’’

‘` ‘சமூகவிரோதிகள் ஊடுருவிவிட்டனர்’ என்கிற ரஜினிகாந்த் ஸ்டேட்மென்ட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார். அறிவார்ந்த ரீதியில் அவரால் பயணிக்க முடியாது என்பது ஏற்கெனவே நான் அனுமானித்ததுதான். ஆனால், உரிமைக்குப் போராடுகிறவனின் வியர்வையைக் கொச்சைப்படுத்துகிற அநியாயத்தைச் செய்கிற ஒரு பூர்ஷுவாவாக இவர் அவதாரம் எடுப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

திரையுலகம் என்ற பிம்பத்தில் இருந்துகொண்டு, தான் சொல்லுகிறதெல்லாம் வேதம் என்று கருதிக்கொள்கிற ரஜினிகாந்த், தமிழகத்தின் தட்ப வெட்பத்துக்கு ஏற்ற தலைவன் அல்ல!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்!’’

‘` `எல்.கே.ஜி.’ படத்தில், புதிதாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?’’

‘`ஏற்கெனவே இயக்குநர் பாலாவின் உதவியாளர் ஒருவர், ‘தமிழ் ஈழம்’ என்ற படத்தில், ‘பிரபாகரனாக’ நடிப்பதற்கு என்னை அணுகினார். ‘பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டுவிட்டேன்.  இப்போது ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘எல்.கே.ஜி’ படத்தில் என்னை நடிக்க வைப்பதற்காக, என் வீடு தேடி வந்துவிட்டார்கள். நானும் ஒப்புக்கொண்டு விட்டேன்’’

‘`நடிகர்கள் அரசியலுக்குள் வருவதால், நீங்கள் அரசியலிலிருந்து நடிக்க வந்துவிட்டீர்களா?’’

‘`அப்படியல்ல... சினிமா பார்ப்பதற்கே எனக்கு நேரமில்லை! சிறு வயதிலிருந்தே ‘எப்பொழுதும் பேசப்படும் இடத்தில் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவன் நான். இப்போது அரசியலிலிருந்து விலகிவிட்டேன். ஆனாலும், ‘களத்தில் இருக்கிறேன். உங்கள் கவனத்தில் இருக்கிறேன்’ என்று காட்டுவதற்கு எனக்கு ஏதாவதொன்று வேண்டும். அதனால்தான் அரசியலைக் கடந்து, ஆச்சர்யங்களைச் சுமந்தபடி இலக்கிய மேடைகளில் பயணிக்கிறேன்.’’

‘`ஒரு பேட்டியில், ‘நயன்தாராதான் எனக்குப் பிடித்த நடிகை’ என்கிறீர்கள். அடுத்த பேட்டியில், சுஹாசினி என்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்?’’

‘`எனக்குப் பிடித்த நடிகை, நயன்தாராதான்! சமகாலத் தமிழகத்தில், வாலிபர்களில் ஆரம்பித்து வயோதிகர் வரையிலும் அனைவரிடத்திலும் தொடர்ந்து தனது மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிற வசீகரமான நடிகை! என்னுடைய இளம் வயதில், சுஹாசினியின் நடிப்பு பிடிக்கும். ‘சிந்து பைரவி’, ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்ற படங்களில் அவரது நடிப்பும் கலைநேர்த்தியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’’

‘`இளம் வயதில், உங்களை நிறைய பெண்கள் காதலித்தார்களாமே... அந்த ‘ஆட்டோகிராப்’ கதையைச் சொல்லமுடியுமா?’’

‘`கல்லூரிக் காலங்களில் நான் அழகாக இருந்தேன்; அதையும் தாண்டி என்னுடைய பேச்சுதான் பெண்களுக்குக் கவர்ச்சியாக இருந்திருக்கிறது. காரணம்... கல்லூரி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்குவது நான்தான்! வாரம்தோறும் இலக்கிய மன்றங்களை நடத்திவந்தேன்.  அதனால் அவர்கள் எல்லோரும் என்னை விரும்பினார்கள். ஆனாலும்கூட இவற்றையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சிலர் நேரடியாகவே என்னிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கடிதங்களுக்குப் பதிலாக, ‘உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் கையெழுத்து நன்றாக இருந்தது. நம்முடைய தலையெழுத்தை முதலில் தீர்மானிப்போம்’ என்று எழுதிக் கொடுத்துவிடுவேன்!’’

‘`ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஒப்பிடுங்களேன்?’’

‘`இரண்டு பேர் கைகளிலுமே கத்தி இருக்கிறது. யார் யாரைக் குத்துவார்கள் என்பது தெரியாது.இருவருமே நவீன ரக ஒட்டுண்ணிகள்!’’

‘`மு.க. அழகிரி - மு.க. ஸ்டாலின்?’’


‘`தன்னை நம்பி வருபவர்களைக் காப்பாற்றி வைத்திருப்பவர் என்ற பெயரை இன்றைக்கும் தக்க வைத்துக்கொண்டிருப்பவர் அழகிரி!

ஸ்டாலின், தி.மு.க-வில் திணிக்கப்பட்ட தலைவர்!

 `` ‘இந்தத் தலைவனை நாம் பிரிந்து வந்திருக்கக்கூடாது’ என்று காலம் கடந்து மனம் வருந்திய அனுபவம் ஏதேனும் உண்டா?’’

‘`உண்டு. தி.மு.க-விலிருந்து நான் பிரிந்து வந்திருக்கக்கூடாது! தி.மு.க-வில், சாதாரணமான ஒரு பேச்சாளன் நான். ஆனால், எனது திருமணத்தின்போது, முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாகர்கோவில் வந்து எனது திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வாழ்த்திப் பேசினார். 

1989 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டைத்  தொகுதியில், தி.மு.க வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்துத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ‘தலைவர் (கருணாநிதி) வந்துசேரும்வரையில் நீதான் பேசவேண்டும்’ என்று தங்கபாண்டியன் என்னை மேடையேற்றிவிட்டார். ‘தலைவர் எப்போது வருவார்?’ என்ற என் கேள்விக்கு ‘அதெப்படித் தெரியும்... வார்த்தைகளை வைத்துக்கொண்டு நீயே விளையாடு’ என்று சொல்லிவிட்டார். இரவு பத்து மணிக்குப் பேச ஆரம்பித்து, அடுத்தநாள் காலை ஏழரை மணி வரை தொடர்ந்து பேசிமுடித்தேன். காரணம்... காலை 7.25 மணிக்குத்தான் கருணாநிதி மேடைக்கு வந்து சேர்ந்தார்.

‘சைக்கிள் மிதிக்கலாம்; சர்க்கஸில் வித்தை காட்டலாம்; மேஜிக் செய்யலாம்; புராண இதிகாசங்களைக்கூடப் பேசிவிடலாம். ஆனால், ஒரு தேர்தல் பிரசார மேடையில் ஒன்பதரை மணிநேரம் பேசுவதென்பது, யாராலும் முடியாதது; நாஞ்சில் சம்பத்தினால் முடிந்திருக்கிறது. வாழ்த்துகிறேன்... இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை... செயல்படுங்கள்!’ என்று அன்றைக்குப் பாராட்டிப் பேசினார் கருணாநிதி!

பசுமை மாறா இந்த நினைவுதான் என் திருமணத்துக்குத் தலைமை தாங்கும் வரையில்,  அவரை அழைத்துவந்தது!”

‘`பொருளாதார ரீதியிலான தன்னிறைவு அடைய முடியாத விரக்தியினால்தான் அரசியலைத் துறக்கிறீர்களா?’’

‘`பொருளாதார ரீதியிலான தன்னிறைவை ஒருநாளும் என்னால் அடைய முடியாது. ஏனெனில், என்னிடம் இருப்பதையெல்லாம் அடுத்தவரிடம் கொடுத்துவிடுவதுதான் என்னுடைய இயல்பு!

இன்றைய அரசியலில், சகிப்புத் தன்மை குறைந்துபோனதும் நான் இதிலிருந்து விலகிப் போவதற்கான ஒரு காரணமாக அமைந்துவிட்டது. பேட்டி ஒன்றில், பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்துப் பேசும்போது, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல’ என்று பொருள்படும்படி கருத்து தெரிவித்திருந்தேன். இது அவரைக் காயப்படுத்தியதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதற்காக வகுப்புவாத சக்திகளும் சங்பரிவார்களும் தொடர்ந்து என்னைக் காயப்படுத்தினார்கள். என் வீட்டிற்கே வந்து கொடும்பாவி கொளுத்தினார்கள். விளக்கை உடைத்தார்கள். அன்றைக்கு இரவே என்னைக் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான முன்னேற்பாடாகத் தொடர்ச்சியாக என்மீது 12 வழக்குகளைப் பதிவு செய்தார்கள்.

கோவிந்த் பன்சாரி, நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கௌரி லங்கேஷைக் கொன்றவர்கள் என்னையும் கொல்வார்கள்.

30 ஆண்டுக்காலம் அரசியல் செய்துவந்த எனக்கு இப்படியொரு சோதனை ஏற்பட்டபோது, நான் ஏற்றுக்கொண்ட தலைவனும் அதுபற்றி ஏதும் சொல்லவில்லை; ஊடகமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

யாராலும் கண்டுகொள்ளப்படாத இடத்தில் இருக்கிறேனா நான்... என்னைக் கைதூக்கி விடுவதற்கு யாருமே இல்லையா... இந்த சதுப்பு நிலத்தில், இன்னும் ஏன் நாம் சிக்கிச் சுழல வேண்டும் என்றெல்லாம் சிந்தித்தேன்.

பொதுவாழ்வே இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்!’’