Published:Updated:

நாங்கள் காதலை எதிர்க்கவில்லை: ராமதாஸ்

நாங்கள் காதலை எதிர்க்கவில்லை: ராமதாஸ்
நாங்கள் காதலை எதிர்க்கவில்லை: ராமதாஸ்
நாங்கள் காதலை எதிர்க்கவில்லை: ராமதாஸ்

சென்னை: நாங்கள் காதலை எதிர்க்கவில்லை, காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்புரம் கடற்கரையில் நேற்றிரவு நடந்தது. இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், "கடந்த 32 ஆண்டுகளாக இளைஞர்களை நல்வழிப்படுத்த பயிற்சி அளித்து வருகிறோம். வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் உறுதிமொழி பெற்று வருகிறோம்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒரு சிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெண் பெற்றோர்களும் நாங்களும் எடுத்து கூறினால் ஜாதி வெறியை தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் கூறுகிறார்கள். நாங்கள் நீக்க சொல்லவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். முறையாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம்.

##~~##
நாங்கள் தலித்துகளுக்கு எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறோம். காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. நன்றாக படியுங்கள். 21 வயதுக்கு மேல் காதலித்தால் அது காதல், ஆனால் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து சமுதாய மக்களிடமும் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்று ராமதாஸ் பேசினார்.
முன்னதாக, மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், ஈழத்தமிழர்களின் துயரங்களுக்கு தமிழீழமே தீர்வு காண வேண்டும், அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், என்ஜினீயரிங், கலை-அறிவியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், காதல் நாடக திருமணங்கள் மற்றும் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு ஆளவந்தார் நாயகர் பெயர் சூட்ட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.