Published:Updated:

“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்

“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்

“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்

கேரள அரசியலைச் சுழற்றியடித்த சரிதா புயல், இப்போது தமிழகக் கரைக்கு நகர்ந்து வந்திருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்குப் பொன்னாடை போர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சரிதா நாயர் ஐக்கியமாகும் புகைப்படம், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் வெளியாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அ.ம.மு.க-வின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பச்சைமாலை, சமீபத்தில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசியிருக்கிறார் சரிதா நாயர். அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுடன் அவரிடம் பேசினோம்.

‘‘முன்னாள் அமைச்சர் பச்சைமாலைச் சந்தித்துத் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டீர்களே?’’

‘‘இந்தச் சந்திப்பைப் பரபரப்பான நிகழ்வாகவோ, சர்ச்சைக்குரிய விஷயமாகவோ பார்க்காதீர்கள். ஒருவர், அரசியல் கட்சியில் சேர்கிறார்; அவ்வளவுதான். முன்னாள் அமைச்சர் பச்சைமால், அ.ம.மு.க-வின் பிரமுகர் உதயகுமார் ஆகியோர் எனக்கு நண்பர்கள். நான் டி.டி.வி.தினகரன் கட்சியில் சேர்வதில் அவர்களுக்கு விருப்பமாக இருந்ததால், நாகர்கோவிலில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.’’

“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்

‘‘திடீரென ஏன் இந்த அரசியல் ஆசை?’’

‘‘நான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்தேன். அப்போது, சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்தது. அந்தச் சமயத்தில் மெட்ரோ ரயில் துவக்க விழாவுக்குப் போன ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இறந்துவிடுவார் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஜெயலலிதாவுக்கு அப்படி நடந்திருக்காவிட்டால், அன்றே நான் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பேன். ஜெயலலிதாவுக்கு  நடந்த பிரச்னைகள், எனக்கும் நடந்துள்ளன. அதனால் ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.’’

‘‘அப்படியானால் அ.தி.மு.க-வுக்குப் போகாமல் ஏன் அ.ம.மு.க-வில் இணைகிறீர்கள்?’’

‘‘ஜெயலலிதாவைப் போன்ற அணுகுமுறை யாரிடம் இருக்கிறதோ, அவரின் கட்சியில் சேரலாம் என நினைத்தேன். டி.டி.வி.தினகரன் ஜெயலலிதாவைப் பின்பற்றுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு மக்களிடம் ஜெயலலிதாவைப் போன்று தினகரன் பழகியதைக் கவனித்தேன். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தது, அவர்களின் பிரச்னைகளையெல்லாம் பேசியது, 144 தடையை நீக்கவேண்டும் எனக் குரல் கொடுத்தது, மக்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என அக்கறை காட்டியது... இப்படி ஜெயலலிதாவைப் போலவே தினகரன் செயல்பட்டார். பொதுமக்களிடம் நெருக்கமாகப் பழகுவதால் தினகரன் கட்சியில் சேர முடிவெடுத்தேன்.’’

‘‘கேரள அரசியலில் இறங்கியிருக்கலாமே?’’

‘‘கேரளத்திலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அங்கு ஒரு கட்சியில் நான் சேர்ந்தால் பலவிதமான விவாதங்கள் வரும். தமிழகத்தில் விவாதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது குறைவு. ஒரு பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும் இடம் தமிழ்நாடு. இந்த மரியாதை கேரள அரசியலில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கேரளத்தில் காங்கிரஸைவிட நூற்றுக்கு நூறு சிறப்பானதாக இப்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கிறது. நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சென்றாலோ அல்லது பி.ஜே.பி-யில் சேர்ந்தாலோ வேறுவிதமாக அமைந்துவிடும். எனவே, எனக்கு எல்லாமே தமிழ்நாடுதான் என முடிவுசெய்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாகக் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பவர் புராஜெக்ட், கன்ஸ்ட்ரக்‌ஷன், பேப்பர் கப் தயாரிப்பு போன்ற தொழில்கள் செய்துவருகிறேன். எனக்கு பிசினஸில் காங்கிரஸ் கட்சியினரால் ரொம்பப் பிரச்னை வந்தது. அந்தச் சமயத்தில், அ.ம.மு.க-வைச் சேர்ந்த உதயகுமார் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் மூலமாக நாகர்கோவிலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தினகரனைச் சந்தித்துக் கட்சியில் இணைய வாய்ப்பு இருக்கும்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஜெயலலிதாவுக்கு நடந்ததே எனக்கும் நடந்திருக்கிறது!” - தினகரன் கட்சியில் சரிதா நாயர்

‘‘தமிழ்நாட்டில் பிசினஸ் செய்வதற்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சியில் சேர்கிறீர்களா?’’

‘‘அரசியலில் இருந்தால் மட்டும்தான் பிசினஸ் செய்யமுடியும் என்பது தவறு. எந்த அரசியல் ஆதரவும் இல்லாமல் கேரளத்தில் பிசினஸ் செய்திருக்கிறேன். அரசியலையும் பிசினஸையும் சேர்த்துப் பார்க்காதீர்கள். அப்படி இரண்டையும் மிக்ஸ் செய்ததால்தான், நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேன். அரசியல் தனி, பிசினஸ் தனி. நான் கஷ்டப்பட்டபோது, மக்கள் மட்டும்தான் என்னுடன் இருந்தனர். மக்களுக்கு நல்லது செய்வதுதான் அரசியல். அதைத் தனியாகச் செய்ய முடியாது. ஒரு தனி ஆளாக நிற்பதற்கு நான் சூப்பர் ஸ்டார் அல்ல. ஒரு குழுவுடன் சேர்ந்துதான் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும். நான் கஷ்டப்பட்டது போல வேறு யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதனால்தான், அரசியல் கட்சியில் சேரும் விருப்பம் ஏற்பட்டது.’’

‘‘தினகரன் கட்சியில் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘எந்தப் பதவியும் நான் கேட்கவில்லை, அவர்களும் சொல்லவில்லை. கட்சியில் சேர்வது குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது. பதவி குறித்த பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை. எனக்கு என்ன தகுதி இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்களோ அதற்கேற்ற பதவி தருவார்கள். என்ன பதவி தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். பதவி தராமல் இருந்தாலும் நான் அந்தக் கட்சியில் சேர்வேன்.’’

- ஆர்.சிந்து